சீனாவில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய நபர் மற்றும் பிற செய்திகள்

போதை மருந்து கடத்தியதாக ஆஸ்திரேலியருக்கு தூக்கு தண்டனை விதித்த சீனா

பட மூலாதாரம், Getty Images

போதை மருந்து கடத்தியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவருக்கு சீனா தூக்கு தண்டனை விதித்துள்ளது. இதனை ஆஸ்திரேலிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது.

கார்ம் அல்லது கேம் கிலெஸ்பி என்ற அந்த நபர் 7.5 கிலோ போதை மருந்து கடத்தியதாக கடந்த 2013ஆம் அண்டு சீன விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

அந்நபருக்குதான் தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனை என்ற தீர்ப்பு வேதனையளிப்பதாக ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"மரண தண்டனை விதிப்பதற்கு எதிரான நிலைபாட்டை கொண்டது ஆஸ்திரேலியா. உலகம் முழுவதும் இவ்வாறு மரண தண்டனை விதிப்பது நீக்கப்பட வேண்டும் என்றே நினைக்கிறோம்" என அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிற்கு போதை மருந்து கடத்தியதாக இதற்கு முன்பும் ஆஸ்திரேலியர் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் 56 நாட்கள் கழித்து மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. அங்கு 10 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் தலைநகர் பெய்ஜிங்கைச் சேர்ந்தவர்கள்.

இதனைத் தொடர்ந்து ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகளை மீண்டும் திறக்க எடுக்கப்பட்ட முடிவை அந்நகர அதிகாரிகள் கைவிட்டுள்ளதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

56 நாட்கள் கழித்துக் கடந்த வியாழக்கிழமை அன்று பெய்ஜிங்கில் கொரோனா தொற்று மீண்டும் பதிவானது. வெள்ளிக்கிழமை அன்று மேலும் இரண்டு பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இலங்கை கொழும்பில் பத்தி எழுத்தாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு - என்ன நடந்தது?

பட மூலாதாரம், FACEBOOK

கொழும்பு சுதந்திர சதுக்கம் பிரதேசத்தில் பகுதிநேர பத்தி எழுத்தாளரும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளருமான ரஜீவ ஜயவீரவின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது.

சுதந்திர சதுக்க வளாகத்தில் மரமொன்றிற்கு கீழ் இருந்து இன்று காலை இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் போலீஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலத்திற்கு அருகிலிருந்து துப்பாக்கியொன்றும், கடிதமொன்றும் போலீஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

'மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு: இந்திய அரசின் உள்நோக்கம் என்ன?'

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை வழங்கக்கோரி தொடுக்கப்பட்ட வழக்குகளை விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றங்களை அணுகும்படியும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரனிடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.

இந்த விவகாரம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் கூறுகையில், நீட் தேர்வு வந்த பிறகு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பல இடங்கள் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தன. இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ஒரு enabling சட்டத்தின் மூலம், அதாவது விரும்பினால் அளிக்கலாம் என்ற சட்ட வசதியின் மூலம் அளிக்கப்படுகிறது. ஆகவே, இதனை இப்போது நாங்கள் விசாரணைக்கு ஏற்கப்போவதில்லை எனச் சொல்லிவிட்டார்கள்.

கொடுமணல் அகழாய்வில் கண்டறியப்பட்டவை பழங்கால ஆஃப்கன் மொழி எழுத்துகளா?

பட மூலாதாரம், TN ARCHEOLOGY DEPARTMENT

தமிழகத் தொல்லியல் துறையினர் சார்பில் ஈரோடு மாவட்டம் கொடுமணல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுப் பணியில் பழங்கால ஆப்கானிஸ்தான் நாட்டு மக்கள் பேசிய மொழியின் எழுத்து பொறிக்கப்பட்ட மண் பொருட்கள் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியன.

இதன் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் நாட்டினரோடு நேரடியாக வனிகத் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால், இந்த தகவல்களை முற்றிலுமாக மறுக்கின்றனர் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் மூத்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: