கொரோனா வைரஸ்: சமூகப் பரவல் பாதிப்பே இல்லாமல் 100 நாட்களை கடந்த நியூசிலாந்து மற்றும் பிற செய்திகள்

ஜெசிந்தா ஆர்டென்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜெசிந்தா ஆர்டென்

உள்நாட்டில் சமூகப் பரவல் மூலம் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படாமல் 100 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ளது நியூசிலாந்து.

அதாவது, கடைசியாக கடந்த மே 1ஆம் தேதி உள்நாட்டு சமூகப் பரவல் மூலம் நியூசிலாந்தில் ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு, கடந்த 100 நாட்களாக ஒருவருக்கு கூட சமூகப் பரவல் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

அதேபோன்று, தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாக புதிதாக எந்த வகையான (உள்நாட்டை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள்) கொரோனா பாதிப்பும் ஒருவருக்கு கூட உறுதிசெய்யப்படவில்லை.

தற்போதைய சூழ்நிலையில், நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை 23ஆக உள்ளது.

பிப்ரவரி மாத இறுதியில் நியூசிலாந்தில் முதல் முதலாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், அங்கு இதுவரை 1,219 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது, மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கொரோனா வைரஸ் விவகாரத்தில் மற்ற உலக நாடுகளை விட நியூசிலாந்து சிறப்பாக செயல்பட்டுள்ளதை காட்டுகிறது.

இதற்காக உலக நாடுகள் மற்றும் சுகாதார அமைப்புகளின் பாராட்டுகளை பெற்ற வண்ணம் உள்ள நியூசிலாந்தில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து முடக்க நிலை கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுவிட்டன.

பட மூலாதாரம், Getty Images

முன்கூட்டியே முடக்க நிலையை அறிவித்தது, வெளிநாட்டவர்கள் உள்ளே நுழைய விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள், சுகாதாரம் சார்ந்த தகவல்களை மக்களுக்கு திறம்பட கொண்டு சேர்த்தது, தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள் மற்றும் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணி உள்ளிட்டவையே நியூசிலாந்தில் கிட்டத்தட்ட கொரோனா வைரஸ் இல்லாத சூழ்நிலையை உருவாக்கிய பெருமைக்கு காரணமானவை.

நியூசிலாந்தை தவிர்த்து மற்ற சில உலக நாடுகளும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் தொடக்க நிலையில் சிறப்பாக செயலாற்றினாலும், அதன் பிறகு நாட்டின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு முடக்க நிலை கட்டுப்பாடுகளை விலக்கியதால் அங்கு மீண்டும் நோய்த்தொற்று பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கின.

நீங்கள் இந்தியரா? விமான நிலையத்தில் கனிமொழி எம்.பியை கேட்ட சிஐஎஸ்எஃப் காவலர்

பட மூலாதாரம், Twitter

டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, "நீங்கள் இந்தியரா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு, சர்ச்சையாகியிருக்கிறது.

"விமானியின் அறிவிப்பு சத்தம் பாதியில் நின்றது" - உயிர் தப்பிய பயணிகள் பகிரும் தகவல்கள்

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையம் எனப்படும் கரிப்பூர் விமான நிலையத்தில், வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி உயிர் தப்பிய யூஜின் யூசுஃப் விபத்து குறித்து பிபிசியிடம் விளக்கினார்.

அணுக் கழிவு: 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் வரும் தலைமுறையை எச்சரிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

பூமிக்கு அடியில் புதைத்து வைத்திருக்கும் அணுக்கழிவுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நச்சுத்தன்மையுடன் இருக்கும். அதனால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து தப்புவதற்கான எச்சரிக்கை முறையை எப்படி உருவாக்குவது என்பது எதிர்காலத்துக்கான கேள்வியாக உள்ளது.

இலங்கை தேர்தல்: வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பின்னடைவும் ஏனைய கட்சிகளின் எழுச்சியும்

பட மூலாதாரம், Getty Images

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை இழந்திருக்கின்றது.

கடந்த முறை தேசிய பட்டியல் உட்பட 16 ஆசனங்களை வடக்கு கிழக்கில் கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை தேசிய பட்டியல் உள்ளடங்கலாக 10 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: