டிரம்ப் Vs பைடன்: களைகட்டும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசார சொல்லாடல்கள்

டிரம்ப் Vs பைடன்: மிஷெல் ஒபாமா வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வ காணொளி

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்க அதிபர் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலுக்கான பிரசாரத்தை இப்போது முதலே அந்நாட்டின் அரசியல் தலைவர்கள் முன்னெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

சமீபத்தில் எதிர்கட்சியான ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், தமது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் அமெரிக்காவில் பிறந்தவருமான கமலா ஹாரிஸை தேர்வு செய்தார்.

அவர் நாளை புதன்கிழமை முறைப்படி தமது வேட்பாளர் நியமன முன்மொழிவை ஏற்றுக் கொண்டு தேர்தல் பரப்புரையை தொடங்கவிருக்கிறார்.

இதன் முன்னோட்டமாக, ஜனநாய கட்சியினருக்கான தேர்தல் பரப்புரை முழக்கத்தை அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவியும் கருப்பின சமூகத்தினரிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றவருமான மிஷெல் ஒபாமா ஒலித்திருக்கிறார்.

என்ன பேசினார் மிஷெல் ஒபாமா?

அதிபர் தேர்தல் பரப்புரையின் அங்கமாக அவர் உணர்ச்சிப்பூர்வ காணொளியை வெளியிட்டிருக்கிறார். அதில், அமெரிக்காவுக்கு மிகவும் தவறான அதிபராக விளங்குகிறார் டொனால்ட் டிரம்ப் எனத்தொடங்கி அதற்கான காரணங்களையும் அவர் விவரிக்கிறார்.

இந்த பதவியின் மூலம் போலியாக உங்கள் வழியை அமைக்க முடியாது என்று அதிபர் டொனால்ட் டிரம்பை சாடிய அவர், தமது ஒலிப்பதிவின் தலைப்பாக, தற்போதைய அதிபரால் நீண்ட காலமாக ஒரு வைரஸ் குறைத்து மதிப்பிடப்பட்டு வருவதால், நமது பொருளாதாரம் ஒழுங்கற்றிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

"பிளாக் லைஃப் மேட்டர்ஸ்" என்ற கடுமையான ஒரு விஷயத்தை நாட்டின் மிக உயர்பொறுப்பில் உள்ள அதிபரின் அலுவலகம் இப்போதும் ஒரு நகைச்சுவை போல அணுகி வருவதாக மிஷெல் கூறினார்.

ஏனென்றால், இந்த வெள்ளை மாளிகையை நாம் ஏதேனும் தலைமை அல்லது ஆறுதல் அல்லது நிலைப்புத்தன்மையின் ஒற்றுமையின் அடையாளமாக பார்க்கும்போதெல்லாம், அதற்கு பதிலாக நமக்குக் கிடைப்பது குழப்பம், பிளவு மற்றும் பரிவற்ற நிலைதான் என்று மிஷெல் ஒபாமா கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

கடந்த நான்கு ஆண்டுகால அமெரிக்க நிலையை இங்குள்ள குழந்தைகளிடம் விளக்குவது மிகவும் சிக்கலானது என்றும், அமெரிக்க குழந்தைகள், வெள்ளையின ஆதிக்கவாதத்துக்கு எதிரான சுடரை ஏந்திக்கொண்டு, சொந்த நாட்டு மக்களையே எதிரிகள் ஆக அழைக்கும் தலைவர்களை பார்த்து வருகிறார்கள் என்று மிஷெல் குறிப்பிட்டுள்ளார்.

சொந்த குடும்பங்கள் பிளவுபடுவதையும், சிறைகளுக்குள் அடைக்கப்படுவதையும் பெப்பர் ஸ்ப்ரே, ரப்பர் தோட்டாக்கள் போன்றவை வெறும் புகைப்பட வாய்ப்புக்காக அமைதிவழியில் போராடியவர்கள் மீது பயன்படுத்தப்பட்ட திகில் அனுபவத்தையும் அவர்கள் பார்த்து வளருகிறார்கள் என்று மிஷெல் கூறியுள்ளார்.

மொத்தத்தில், டொனால்ட் டிரம்ப், நமது நாட்டுக்கு தவறான ஒரு அதிபர். அந்த பதவியை வகிக்க அவருக்கு மேலதிக நேரம் கிடைத்தபோதும், தலை கணத்துடன் அவர் இருப்பது தெளிவாகியிருக்கிறது. நமக்கு அவசியப்படுபவராக அவரால் இருக்க முடியாது. அவர் அப்படித்தான் என்றும் மிஷெல் டொனால்ட் டிரம்பை சாடினார்.

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன், ஆழ்ந்த பண்புமிக்க மனிதர் என்றும், வெள்ளை மாளிகையில் துணை அதிபராக ஏற்கெனவே பதவி வகித்த அவரை அதிபராக தேர்வு செய்வதைப்பொருத்தே நமது வாழ்க்கை அமையும் என்று கூறி அனைவரும் ஜோ பைடனுக்கு வாக்களியுங்கள் என்று மிஷெல் அந்த காணொளியில் பரப்புரை முழக்கத்தை நிறைவு செய்தார்.

அதிபர் டிரம்பின் எதிர்வினை

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் மின்னிசோட்டா, விஸ்கொன்சின் ஆகிய மாகாணங்களில் தேர்தல் பரப்புரையை நிறைவு செய்து விட்டு வாஷிங்டனுக்கு அதிபரின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, அதிபர் டிரம்ப் பிபிசியிடம் பேசினார்.

அப்போது ஜனநாயக கட்சியின் தேர்தல் பரப்புரை முழக்கம் குறித்த தமது கருத்துகளை அவர் வெளிப்படுத்தினார்.

குடியரசுக்கட்சியின் மிகப்பெரிய தோல்வியாளராக ஜோ பைடன் இருந்தார். ஜனநாயக கட்சியிலும் அதே நிலையை அவர் அடைவார் என்று டிரம்ப் தெரிவித்தார்.

முன்னதாக, மின்னிசோட்டா மாகாணத்தின் மான்காட்டோ பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அதிபர் டிரம்ப், ஒருவேளை நவம்பர் மாத தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றால், அதன் பிறகு தொலைக்காட்சிகள் அவற்றின் நேயர்களை இழக்க நேரிடலாம் என்று பேசினார்.

சர்ச்சைக்குரிய தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் தன்னிடம் பஞ்சம் இருக்காது என்பது போல அதிபர் டிரம்பின் பதில் அறியப்பட்டது.

ஜோ பைடன் ஒரு தூங்கும் பேர்விழி என்றும் மிகவும் சளிப்பை ஏற்படுத்தக்கூடிய சோஷலிஸ நாடு நரகத்துக்கே செல்லக்கூடியதாக அமையும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: