ஆப்கானிஸ்தானில் திரைப்பட நடிகையை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்

சபா சாஹர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

சபா சாஹர் 2011ஆம் ஆண்டில் படப்படிப்பில் இருந்தபோது இந்த படம் எடுக்கப்பட்டது.

ஆஃப்கானிஸ்தானின் முதல் பெண் திரைப்பட இயக்குநரும் நடிகையுமான சபா சாஹர் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

44 வயதான சபா சாஹர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து தெளிவான தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

பிபிசியிடம் சபா சாஹரின் கணவர் இமால் சகி கூறுகையில், ''செவ்வாய்கிழமை தனது தொழில்முறை பணிக்காக தலைநகர் காபூலில் சபா சாஹர் பயணம் செய்தபோது, அவரது கார் மீது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அதில் சபாவும் அவருடன் சென்ற இரண்டு பாதுகாவலர்கள் மீதும் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்ததால் காயம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

சபா சாஹர் ஆஃப்கானிஸ்தானின் மிக பிரபலமான நடிகை மற்றும் இயக்குநர். பெண்களின் உரிமைக்காக பல பிரசாரங்களை மேற்கொள்பவர்.

துப்பாக்கி சூடு நடந்தபோது சபா, இரண்டு பாதுகாவலர்கள், ஒரு குழந்தை மற்றும் ஓட்டுநர் என 5 பேர் காரில் இருந்துள்ளனர். ஆனால் தாக்குதலில் குழந்தை மற்றும் ஓட்டுநருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சபா வீட்டில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் துப்பாக்கி சத்தம் கேட்டதாக அவரது கணவர் கூறுகிறார். அதன் பிறகு அவர் தொலைபேசியில் சபாவை அழைத்தபோது, தன் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்ததாகவும், தனது வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியதாக அவரது கணவர் தெரிவிக்கிறார்.

தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்றபோது அனைவருக்கும் காயம் ஏற்பட்டிருந்ததை தான் பார்த்ததாக சபாவின் கணவர் கூறுகிறார். முதலுதவி அளித்தபிறகு, அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அவர்களை அழைத்து சென்றதாகவும், பிறகு காவல் துறை மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இமால் சகி கூறுகிறார்.

தற்போது சபா சாஹருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றள்ளது என்றும் சகி கூறுகிறார்.

சபா சாஹர் காவல் துறை அதிகாரிக்கான பயிற்சியும் பெற்றவர் தற்போது வரை ஆஃப்கானிஸ்தான் அமைச்சரவைக்கும் பணியாற்றி வருகிறார். அவரது திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊழல் குற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் திரைப்பட நடிகர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை போராட்டக்காரர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெறுவது மிகவும் கவலை அளிக்கிறது என சர்வதேச அமீனிஸ்டி நிறுவனம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ளது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: