நிலவுக்கு செல்லும் நாசா ராக்கெட்: நொடிக்கு 6 டன் திட எரிபொருள் எரிக்கும் பூஸ்டரை கிளப்பி சோதனை

SRB

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு,

ராக்கெட்டின் இருபுறமும் புடை சூழ்ந்திருக்கும் தின்ம எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்.

அமெரிக்கர்கள் 2024ஆம் ஆண்டு நிலவுக்கு பயணம் செய்ய உதவப் போகும் ராக்கெட்டின் முக்கிய பாகமாக இருக்கப்போகும் தின்ம எரிபொருள் ராக்கெட் பூஸ்டர் எஞ்சினை கிளப்பிப் பார்த்து பொறியாளர்கள் சோதனை செய்துள்ளனர்.

விண்வெளிக்கு செயற்கைக் கோள்கள், விண்கலன்கள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் செலுத்து வண்டிகளை ஆங்கிலத்தில் ராக்கெட் என்கிறோம். இப்படி ஏவப்படும் ராக்கெட்டுகளின் படத்தை எல்லோரும் பார்த்திருக்கலாம். அதில் சீறிப்பாயும் முதன்மை ராக்கெட்டின் இருபுறமும், சிறிய ராக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

ராக்கெட் கிளம்பும்போது அது புவியீர்ப்பு விசையை மீறி இயங்கி புவியின் செயற்பரப்பைத் தாண்டி செல்லவேண்டும். இதற்கு அந்த ராக்கெட் விடுபடு திசை வேகத்தை எட்டவேண்டும். இதற்கு உதவி செய்வதற்காக கூடுதல் விசையை தரும் வகையில் முதன்மை ராக்கெட்டோடு சிறிய ராக்கெட்டுகளை இணைத்திருப்பார்கள். இவற்றையே பூஸ்டர் ராக்கெட்டுகள் என அழைக்கிறார்கள்.

நாசாவின் நிலவுப் பயணத்திட்டத்துக்கு உதவப் போகும் ராக்கெட்டுடன் இணைக்கப்படவுள்ள பூஸ்டர் ராக்கெட் எஞ்சினைத்தான் தற்போது சோதித்துப் பார்த்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு பூஸ்டர் ராக்கெட்டுகளும் நாசாவின் மிகப்பெரிய விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாகும். 1960ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ’சாட்டர்ன் வி’க்கு பிறகு உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விண்வெளி செலுத்து அமைப்பு (space launch system) இது.

இந்த செலுத்து வாகனம் மூலம் ஓரியன் விண்கலம், விண்வெளி வீரர்கள், மற்றும் சரக்குகள் கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

செயின்ட் லூயிஸ் வளைகுடாவில் உள்ள, ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நாசாவின் எஸ்.எல்.எஸ். எனப்படும் புதிய செலுத்து வாகனம் விண்வெளிக்கு செல்லும் போது முதல் இரண்டு நிமிடங்களுக்குத் தேவையான 75 சதவீத விசையை திட எரிபொருளைக் கொண்டு இயங்கும் இந்த பூஸ்டர்கள் வழங்கும்.

விநாடிக்கு 6 டன் எரிபொருள்

இவை விநாடிக்கு 6 டன் திட எரிபொருளை எரிக்கக்கூடியவை.

நாசா, நிலவுக்கு தனது முதல் பெரிய ராக்கெட்டை அடுத்த வருடம் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் ஆர்டெமிஸ் 1 என அழைக்கப்படுகிறது. இதில் முதலில் நிலவைச் சுற்றும் ஓரியன் என்னும் ஆளில்லா விண்கலன் செலுத்தப்படும். பின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் 2023ஆம் ஆண்டு 4 விண்வெளி வீரர்கள் நிலவிற்கு செல்வர்.

முதன் முதலில் 1972ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் நிலவில் கால் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்: இந்தியப் பிரிவுஅதிகாரியை கேள்வியால் துளைத்த நாடாளுமன்றக் குழு

பட மூலாதாரம், Getty Images

ஃபேஸ்புக், தமது சமூக ஊடக தளத்தில் அரசியல் பாகுபாடு காட்டுவதாகவும், குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளின் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை கண்டுகொள்வதில்லை என்றும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.

ஏற்கெனவே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றில் இதுபோன்ற விசாரணையை ஃபேஸ்புக் நிறுவனம் எதிர்கொண்டுள்ளதால், தற்போதைய குற்றச்சாட்டுகளை கையாளுவதில் அந்த நிறுவனத்துக்கு சிக்கல் இருக்காது என்றாலும், இந்தியாவில் ஒரு நாடாளுமன்ற குழு முன்பாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் இந்திய பிரிவு மேலாண் இயக்குநர் அஜித் மோகன் ஆஜராகி சாட்சியம் தருவது புதிய செயல்பாடாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தலைமை தாங்கும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள் வெளியிடும் வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகளை ஃபேஸ்புக் நிறுவனம் கண்டுகொள்வதில்லை அல்லது உதாசீனப்படுத்துகிறது என்பது அந்நிறுவனம் மீது காங்கிரஸ் கட்சி சுமத்தும் குற்றச்சாட்டு.

அலெக்ஸே நவால்னிக்கு விஷம் தரப்பட்டது - ஜெர்மனி அரசு

பட மூலாதாரம், Getty Images

ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல்வாதி அலெக்ஸே நவால்னிக்கு, நோவிசோக் எனப்படும் நச்சு ரசாயனம் கொடுக்கப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது, நச்சுயியல் பரிசோதனை முடிவில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி அரசு கூறியுள்ளது.

கடந்த மாதம் ரஷ்யாவின் சைபீரியா பிராந்தியத்தில் விமான பயணத்தின்போது மயங்கிய நிலைக்கு சென்ற நவால்னி, கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து, அங்கிருந்து ஜெர்மனிக்கு அவசரகால விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இலங்கையில் பதிவாகும் மர்ம நிலஅதிர்வுகள்

பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI

படக்குறிப்பு,

கோப்புப்படம்

கண்டி நகருக்கு அண்மித்த பகுதிகளில் அண்மை காலமாக ஏற்பட்டு வரும் நில அதிர்வுகளினால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கண்டி நகரை அண்மித்துள்ள திகண, அநுரகம, ஹரகம, சிங்ஹாரகம, மயிலபிட்டிய உள்ளிட்ட பல பகுதிகளில் அண்மை காலமாக பாரிய சத்தத்துடன் நில அதிர்வுகள் பதிவாகி வருவதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த விடயத்தை புவிசரிதவியல் மற்றும் அகழ்வாராட்ச்சி பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 29ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் முதல் தடவையாக பாரிய சத்தத்துடன் நிலஅதிர்வொன்று பதிவாகியிருந்தது.

இந்த நில அதிர்வினால் குறித்த பகுதிகளிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

PUBG BAN: பப்ஜி உள்பட 118 செயலிகளை முடக்கியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் PUBG ஆன்லைன் விளையாட்டு செயலி உள்பட 118 செல்பேசி செயலிகளை முடக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

பல்வேறு தரப்பில் இருந்தும் மத்திய அரசுக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்தத்துறை இன்று மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ஆண்ட்ராய்டு, ஐஃபோன் செல்பேசி தளங்களில் ஏராளமான செயலிகள், பயனர்களின் தரவுகளை அவர்களின் அனுமதியின்றி திருடுவதாகவும் அந்த செயலில் ஈடுபடும் விஷமிகள் இந்தியா அல்லாது வெளிநாட்டு சர்வர்கள் மூலம் தரவுகளை திருடும் பணியில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: