"ஜார்ஜ் ஃப்ளாய்ட் சம்பவத்துக்கு முன்பே போலீசால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர்" வீடியோ ஆதாரம் வெளியானது

கருப்பின மனிதன்.

பட மூலாதாரம், WE THE PEOPLE/ GOFUNDME

படக்குறிப்பு,

டேனியல் ப்ரூட்

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் போலீசாரால் தாக்கப்பட்ட கருப்பினத்தவர் ஒருவர் உயிரிழந்து தெரியவந்துள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறப்பிற்கு முன்னரே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

கருப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது அமெரிக்காவில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும் கருப்பினத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிரான கண்டன குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் தற்போது ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணத்திற்கு முன்பாகவே ஒரு கருப்பின நபர் போலீசார் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

டேனியல் ப்ரூட் என்னும் அந்த 41 வயது நபரை போலீசார் கழுத்துப் பகுதியில் அழுத்திப் பிடித்து அவரின் முகத்தை தரையை நோக்கி அழுத்துவது கேமரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

அவரை போலீசார் பிடிக்கும்போது அவருக்கு மனநல பிரச்சனைகள் இருந்தன.

அவரை போலீசார் பிடித்த ஒரு வாரத்தில் அவர் இறந்துள்ளார். இந்த சம்பவம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட இரு மாதங்களுக்கு முன்பே நடந்துள்ளது ஆனால் டேனியலின் குடும்பத்தார் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் இந்த சம்பவம் குறித்து வெளியுலகிற்கு தெரிவித்துள்ளனர்.

மார்ச் 23ஆம் தேதி, டேனியலின் சகோதரர், டேனியலுக்கு தீவிர மனநல பிரச்சனைகள் இருந்ததால் போலீசார் உதவியை நாடி அவர்களை தொலைபேசியில் அழைத்துள்ளார்.

”நான் உதவி பெறவே போலீசாரை அழைத்தேன். என்னுடைய சகோதரர் தாக்கப்படுவதற்கு இல்லை,” என செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

”நீங்கள் திருப்பி தாக்க இயலாத ஒரு கருப்பின நபரை கொன்றுவிட்டீர்கள்; இதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? ஒரு சகோதரனை, ஒரு மகனை நீங்கள் கொன்று விட்டீர்கள்,” என அவர் தெரிவித்துள்ளார்.

சிகாகோவை சேர்ந்த டேனியலுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர். அவர் இறக்கும் சமயத்தில் தனது சகோதரனை காண வந்துள்ளார்.

போலிசாரின் உடம்பில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராவில் பதிவான வீடியோ காட்சியில், போலீசார் வரும்போது மென் பனியில் நிர்வாணமாக ஓடிக் கொண்டிருந்தார் டேனியல். பின் போலீசார் அவரை தரையில் படுத்து கைகளை பின்புறம் கட்ட ஆணையிட்டனர்.

கோபமாக காணப்பட்ட டேனியல் சில சமயங்களில் தகாத வார்த்தைகள் பயன்படுத்தி போலீசாரை நோக்கி எச்சில் துப்பியுள்ளார். இருப்பினும் அந்த வீடியோ காட்சியில் அவர் எவ்வித கைகலப்பிலும் ஈடுபடுவதாகத் தெரியவில்லை.

பட மூலாதாரம், DANIEL LEAL-OLIVAS/Getty Images

படக்குறிப்பு,

கருப்பின உயிர்களுக்கும் மதிப்புண்டு - பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தின் போராட்டம் ஒன்று

மேலும் டேனியல் தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். எனவே போலீசார் அவர் எச்சில் துப்புவது தங்கள் மீது படாதவாறு டேனியலின் முகத்தை மூடியுள்ளனர்.

மேலும் ஒரு அதிகாரி தனது இரண்டு கைகளால் டேனியலின் தலையை அழுத்தி துப்புவதை நிறுத்து என்று கூறுகிறார்.

டேனியல் அமைதியானதுடன் ஒரு அதிகாரி அவரை பார்த்து: “இவர் குளிராக உணருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டேனியலின் செயற்கை சுவாசம் கடந்த மார்ச் 30ஆம் தேதி துண்டிக்கப்பட்டது.

போலீசாரின் வீடியோ பதிவு கிடைக்க பல மாதங்கள் ஆனதால் இந்த சம்பவம் குறித்து பொது வெளியில் கூறவில்லை என டேனியலின் குடும்பத்தார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் “ஒரு துயரமான சம்பவம்” என்று நியூயார்க் நகரின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டேனியலின் உடலை இறுக்கியதால் ஏற்பட்ட மூச்சுதிணறல் காரணமாக அவர் கொல்லப்பட்டார் என மருத்துவ அறிக்கை கூறுகிறது என ரோசஸ்டரில் வெளியாகும் செய்தித்தாள் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவர் இறப்பிற்கு பிசிபி என்ற போதை மருந்தும் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: