அரியலூர் மாணவர் தற்கொலை: நீட் தேர்வு அச்சம் காரணமா?

அரியலூரில் மாணவர் தற்கொலை: நீட் தேர்வு அச்சம் காரணமா?

அரியலூர் மாவட்டத்தில் நீட் தேர்வுக்குத் தயாராகிவந்த மாணவர் ஒருவர் கிணற்றில் குதித்துத் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு குறித்த அச்சத்தின் காரணமாகவே அந்த மாணவர் தற்கொலைசெய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ளது எலந்தங்குழி கிராமம். இந்த கிராமத்தில் வசித்துவந்த விஸ்வநாதன் - தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் விக்னேஷ். இவருக்கு வயது 19. விஸ்வநாதன் பெட்டி கடை வைத்து உள்ளார். செந்துறையில் உள்ள தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017ஆம் ஆண்டு +2 பொதுத் தேர்வு எழுதிய விக்னேஷ், 1006 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சியடைந்தார். பத்தாம் வகுப்பில் 480 மதிப்பெண்களை எடுத்தார்.

இதற்குப் பிறகு மருத்துவ கல்லூரியில் சேர விரும்பிய அவர், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இதற்குப் பிறகு அவரது உடல் கிணறு ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டது.

"எனது மகன் முதல் முறை நீட் தேர்வு எழுதியபோது 180 மதிப்பெண்களை எடுத்தார். இரண்டாவது முறை 380 மதிப்பெண்களை எடுத்தார். மாலை வரை என்னோடுதான் இருந்தார். இரவு உணவு அருந்திவிட்டுத் தூங்கினோம். காலை நான்கரை மணியளிவில் எழுந்து பார்த்தபோது அவனைக் காணவில்லை. பிறகு ஒன்பது மணியளவில் கிணற்றுக்கு அருகில் அவனது செருப்பு கிடந்தது. உள்ளே அவனது சடலம் கிடந்தது" என ஊடகங்களிடம் மாணவரின் தந்தையான விஸ்வநாதன் தெரிவித்தார்.

வரும் ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதவிருந்த நிலையில், தேர்வு குறித்த அச்சத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.

கிணற்றிலிருந்து மாணவரின் உடலை மீட்ட செந்துறை காவல்துறையினர், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, மாணவரின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரியுள்ளனர். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், "இன்னும் எத்தனை உயிர்களை இழக்க வேண்டும்? இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை நிறுத்தும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மாணவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டிருந்தால், விக்னேஷ் எடுத்திருந்த மதிப்பெண்களின் அடிப்படையில் நிச்சயமாக இடம் கிடைத்திருக்கும். ஒருவேளை தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை அரசு தடுத்திருந்தால் கூட, நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கடந்த ஆண்டு தனியார் கல்லூரியில் விக்னேஷ் சேர்ந்திருப்பார்.

எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் கூறி வந்தனவோ, அந்த நோக்கம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்பதற்கு மாணவர் விக்னேஷின் தற்கொலை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது.

இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பல மாணவர்கள் நீட் தேர்வு கொடுக்கும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்" என்று அவர் கூறியிருக்கிறார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: