சீனா மற்ற நாடுகளை விட மின்னஞ்சலை குறைவாக பயன்படுத்துவது ஏன்?

  • லு-ஹை லியாங்
  • பிபிசிக்காக
மின்னஞ்சல்

பட மூலாதாரம், Getty Images

மே 2008ல் நான் சீனாவின் தெற்குப் பகுதியில் யாங்ஷுவோ என்ற சிறிய நகரில் தனியார் ஆங்கில பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக இருந்தேன்.

அவர்களின் கல்விக் காலம் முடிந்ததும், மூத்த மாணவர்கள் என்னை அணுகி QQ பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கூறினர். MSN மெசஞ்சரைப் போன்றது அது. தொடர்ந்து தொடர்பில் இருக்க, டெஸ்க்டாப் கம்ப்யூட்டருக்கான இந்த சீன அப்ளிகேசனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு அவர் கள் கூறினர்.

முகநூலில் பதிவு செய்து கொள்ளுமாறு அவர்களிடம் நான் கூறினேன் (அப்போது சீனாவில் முகநூல் தடை செய்யப்படவில்லை). அதில் என்னை நண்பராக சேர்த்துக் கொள்ளுமாறும், இமெயில் முகவரிகளை அனுப்புமாறும் நான் கூறினேன்.

சிலர் அவ்வாறு செய்தனர். ஆனால் அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது கடினமாக இருந்தது. ஏனெனில் பெரும்பாலும் அவை zwpzjg59826@126.com என்பது போல இருந்தன.

இந்த இமெயில் முகவரிகள் வித்தியாசமாக இருப்பதாக நான் நினைத்தேன். ஆனால் விநோதமான இமெயில் முகவரிகளை வைத்துக் கொள்வது பிரிட்டனிலும்கூட சாதாரணமானது தான்.

பல ஆண்டுகள் கழித்து, நான் பெய்ஜிங்கில் விருப்ப நேரத்தில் பணியாற்றும் பத்திரிகையாளராகவும், காப்பிரைட்டராகவும் இருந்தேன். என்னுடைய சீன வாடிக்கையாளர்களிடம் எப்போதாவது தான் இமெயில் மூலம் தொழில் நடவடிக்கைகளை வைத்துக் கொள்வேன்.

பல சமயம் என் ஸ்மார்ட்போன் மூலமாக காப்பிரைட்டிங் வேலைகள் வரும். மிகவும் பிரபலமாக இருக்கும் WeChat என்ற சீன மெசேஜ் ஆப் மூலமாக அவை வரும்.

வேலை முடிந்ததும், நான் அதை அனுப்பி வைத்து WeChat மூலமாக பணம் பெற்றுக் கொள்வேன். எல்லாமே அதிசயம் போல நடக்கும். அந்த அளவுக்கு வேகமான செயல்பாடு இருக்கும், செல்போன் செயல்திறனும் அதே அளவுக்கு இருக்கும்.

ஆப் ஆதிக்கம்

பட மூலாதாரம், Getty Images

பல மேற்கத்திய நாடுகளில், இன்னும் இமெயில் வசதி தான் மேன்மையானதாகக் கருதப்படுகிறது, குறிப்பாக பணிசார்ந்த செயல்பாடுகளுக்கு அது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் இமெயில் தான் மிகவும் பிரபலமான ஆன்லைன் செயல்பாடாக உள்ளது. இன்டர்நெட் பயன்படுத்துபவர்களில் முறையே 90.9 சதவீதம் மற்றும் 86 சதவீதம் பேர் இமெயில் பயன்படுத்துகிறார்கள்.

அதே நாடுகளில், ஆன்லைன் செயல்பாடுகளில் இமெயில் பயன்பாடு தான் அதிகமாக உள்ளது.

பொருள்கள் மற்றும் தேவைகளுக்கான தகவல்களைத் தேடுதல், இன்டர்நெட் வங்கிச் சேவை, டிஜிட்டல் வீடியோ அல்லது ஆடியோ பார்த்தல் மற்றும் சமூக ஊடக பயன்பாடு ஆகியவற்றைவிட இமெயில் பயன்படுத்தும் நேரம் தான் அதிகமாக உள்ளது.

ஆனால், சீனாவில் நிலைமை மாறுபட்டதாக உள்ளது.

டெலோய்ட்டே நிறுவனம் 2018ல் நடத்திய சீன செல்போன் நுகர்வோர் கணக்கெடுப்பின்படி, உலக சராசரியைக் காட்டிலும் சீன மக்கள் 22 சதவீதம் குறைவான அளவில் தான் இமெயில் பயன்படுத்துவதாகத் தெரிய வந்தது.

மாறாக WeChat ஆதிக்கம் செலுத்துகிறது: சீனாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 79.1 சதவீதம் WeChat ஆப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல சீனாவில் மெசேஜ் சேவை பயன்படுத்துபவர்களில் 84.5 சதவீதம் பேர் WeChat பயன்படுத்துகின்றனர்.

முன்னுரிமை அலுவலகம் வரை நீள்கிறது: 2017ல் பென்குவின் புலனாய்வு அமைப்பு தொகுத்த WeChat பயனாளர் பழக்கம் பற்றிய தகவல்களில், ஆய்வில் இடம்பெற்ற 20 ஆயிரம் பேரில் 88 சதவீதம் பேர் தங்கள் தினசரி தகவல் தொடர்பில் WeChat பயன்படுத்துவது தெரிய வந்தது. இந்தப் புலனாய்வு அமைப்பு WeChat-ஐ உருவாக்கிய டென்சென்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவாகும்.

பட மூலாதாரம், Getty Images

தொலைபேசிகள், எஸ்.எம்.எஸ். மற்றும் பேக்ஸ் வசதிகளை 59.5 சதவீதம் பேர் பயன்படுத்தினர். இமெயில் பயன்பாடு 22.6 சதவீதம் என்ற அளவில் மூன்றாவது இடத்தில் இருந்தது.

தைவானைச் சேர்ந்த இவா ஹிசு டிஜிட்டல் பிராண்டிங் தொழில் செய்து வருகிறார். இளமைக் காலத்தில் சில ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்துள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளாக ஷாங்காய் நகரில் வசித்து வருகிறார்.

தன்னுடைய வெளிநாட்டு வாடிக்கையாளர்களுடன் இமெயில் மற்றும் LinkedIn மூலம் தொடர்பு கொள்வதாகக் கூறுகிறார். ஆனால் சீன வாடிக்கையாளர்களைப் பொருத்த வரை மாறுபட்ட விஷயமாக உள்ளது.

``சீன வாடிக்கையாளர்கள் WeChat பயன்படுத்துகிறார்கள். பைல்களை அனுப்புவதற்கான பிரதான வழிமுறையாக WeChat வசதியைப் பயன்படுத்துகின்றனர்''' என்று அவர் கூறினார்.

கம்ப்யூட்டர் மைய கலாசாரம்

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் உள்ள நிலையில், WeChat தான் எங்கும் காணப்படும் ஆப் ஆக உள்ளது.

ஆனால் WeChat தளத்தை பயன்படுத்துவதற்கு ஏன் சீன மக்கள் முன்னுரிமை தருகிறார்கள் என்பதற்கான காரணத்தைத் தேடினால், பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த எண்ணம் ஏற்பட்டுள்ளது.

1999 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட சீன தொழில்நுட்ப நிறுவனம் டென்சென்ட் QQ என்ற ஆப் அறிமுகம் செய்தது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மெசேஜ் சேவைக்கு உதவிகரமாக இருந்த. AOL-க்குச் சொந்தமான ICQ என்ற பிரபலமான ஆப் அடிப்படையில் QQ உருவாக்கப்பட்டிருந்தது.

உலக வங்கியின் தகவலின்படி, அந்த சமயத்தில் சீனாவில் 100 பேருக்கு 1.2 என்ற எண்ணிக்கையில் தான் கம்ப்யூட்டர்கள் இருந்துள்ளன.

அதே சமயத்தில் அமெரிக்காவில் இரண்டு பேரில் ஒருவர் கம்ப்யூட்டர் வைத்திருப்பவராக இருந்தார்.

ஆனால் 2000வது ஆண்டுகள் நகர்ந்தபோது, சீனாவில் இன்டர்நெட் மையங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இளைஞர்கள் அதில் வேகமாக ஈர்ப்பு கொண்டனர்.

இன்டர்நெட் மையங்கள் பிரபலமாக ஆனதற்கு QQ காரணமாக இருந்தது. அதில் கேம்ஸ், இசை உள்ளிட்ட அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்ததும் அதற்குக் காரணம். மக்கள் மைக்ரோ-பிளாக் பதிவிடும் வசதியுள்ள ஆரம்பகால சீன சமூக நெட்வொர்க் வசதியும் இருந்தது. இமெயிலுடன் ஒப்பிடும்போது, QQ-ல் அதிக கலந்தாடல் வசதி இருந்தது. உதாரணமாக, அவதார்கள் உருவாக்கும் வசதி, உடனடி மெசேஜ் செய்தல் வசதி ஆகியவை இருந்தன.

ஓட்டுநர் உரிமம் போன்றது

பட மூலாதாரம், Getty Images

2008ல் எழுத்தாளர்கள் ஜேம்ஸ் யுவான், ஜேசன் இன்ச் ஆகியோர் எழுதிய ``Supertrends of Future China'' புத்தகத்தில், QQ அல்லது MSN கணக்கு இல்லாமல் சீன மக்கள் செயல்படுவது சாத்தியமற்றது என்று எழுதியிருந்தனர்.

நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் தங்களுடைய விசிட்டிங் கார்டுகளில் தங்களின் QQ எண்களையும் சேர்த்தனர். வணிக நிறுவனங்கள் தங்களுக்கென QQ கணக்குகள் வைத்திருந்தன.

2012க்குள் QQ-க்கு 798 மில்லியன் பயனாளர்கள் உருவாகி இருந்தனர். அந்த ஆண்டில் சீன மக்கள் தொகையில் பாதிக்கும் சற்று அதிகமாக இந்த எண்ணிக்கை இருந்தது.

டென்சென்ட் நிறுவனம் உருவாக்கிய WeChat 2011ல் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் பிரதான பயன்பாட்டில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் இருந்த நிலை மாறி, ஸ்மார்ட்போன்கள் பிரபலமாகத் தொடங்கியதும், WeChat பிரபலமான தகவல் தொடர்பு வழிமுறையாக மாறியது.

2004 ஆம் ஆண்டில் இருந்து சீனாவில் வேலை பார்த்த மாத்யூ பிரென்னன் என்ற பிரிட்டன்வாசி சீன டிஜிட்டல் புதுமைகள் பற்றிய ஆலோசகராக உள்ளார். பல நாடுகளில் இமெயில் முகவரி வைத்துக் கொள்வது நமது அடையாளத்தின் ஒரு பகுதியாக உள்ளது. பல ஆன்லைன் சேவைகளுக்குப் பதிவு செய்ய இது அவசியமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

இருந்தபோதிலும், சீனாவில் செல்போன் ஆப்கள் முன்மாதிரியாக அமைகின்றன. WeChat அல்லது Alipay (ஆன்லைன் ஜாம்பவான் அலிபாபா நிறுவனம் உருவாக்கியது) போன்ற பன்முக செயல்பாடுகள் கொண்ட ஒரு ஆப் -ல் நுழைந்துவிட்டால் அனைத்து ஆன்லைன் பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ள முடியும்.

ஒரு சேவைக்கு நேரம் குறிக்க முடியும், ஷாப்பிங் செய்ததற்கு பணம் செலுத்த முடியும், நண்பர்களுக்குத் தகவல் அனுப்ப முடியும் - இவை அனைத்தையும் ஒரே ஆப் மூலம் செய்ய முடியும்.

உடனடி மெசேஜ் அனுப்புதல்

பட மூலாதாரம், Getty Images

சீன பணி கலாச்சாரத்துக்குப் பொருத்தமானதாக WeChat உள்ளது என்று செயுங் கோங் வணிகப் பட்டதாரி பள்ளியில் பொருளாதார உதவிப் பேராசிரியராக இருக்கும் ஜோங் லிங் கூறியுள்ளார்.

``மெசேஜ் செய்வதற்கான WeChat தளம், இமெயிலைக் காட்டிலும் குறைவான பணி நேரத்தில் செயல்படுகிறது'' என்று அந்தப் பெண்மணி கூறுகிறார்.

``அலுவல் அல்லாத முறையில் இருப்பதால், மக்கள் உனடியாக பதில் அனுப்புகின்றனர். சீனாவின் தொழில் மற்றும் கலாச்சார சூழல் காரணமாக உடனடியாகப் பதில் அளிக்கும் உத்வேகம் ஏற்பட்டுள்ளது'' என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் பார்க்கும் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்வுக்கு இடையிலான கோடு மெல்லியதாக இருப்பதாக ஜோங் கவனித்துள்ளார்.

``இதன் விளைவாக, முதலாளிகள் மற்றும் மேலாளர்கள் பணி நேரம் முடிந்த பிறகும் தகவல்களைக் கேட்டு மெசேஜ் அனுப்புகிறார்கள். சிறிய ஒரு பதில் கிடைப்பதற்காக, அடுத்த நாள் வரை அவர்கள் காத்திருக்க விரும்புவதில்லை'' என்கிறார் அவர்.

பல சுற்று கலந்துரையாடல் தேவைப்படும் நிலையில், இமெயிலைவிட WeChat வேகமாகச் செயல்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இருந்தபோதிலும், எல்லா நேரங்களிலும் பதில் அளிக்கத் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பது இதன் மற்றொரு பக்கமாக உள்ளது.

சிறிய, வேகமான பதில் அளிப்புகளுக்கு உகந்ததாக WeChat உள்ள நிலையில், இமெயில் வசதி பழைய காலத்து வகையைச் சேர்ந்ததாக இருக்கிறது என்று மாத்யூ பிரென்னன் கூறுகிறார்.

உடனடி பதில் தேவைப்படுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மா ஹுவாடெங், வீசாட்டின் பின்னால் உள்ள தொழில்நுட்ப நிறுவனமான டென்செண்டின் நிறுவனர் ஆவார்.

நாம் எப்படி தொடர்பு கொள்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் தளம் உருவாக்கப் பட்டுள்ளது. முகநூல், வாட்ஸப் அல்லது WeChat என வரும்போது சிறிய, ஆனால் கவனிக்கத்தக்க அளவில் தாக்கங்களை உணர முடிகிறது. ``உடனடி தகவல் அனுப்புதலுக்கு, குறித்த நேரத்திலான செயல்பாட்டை இதில் எதிர்பார்க்க முடியும்'' என்கிறார் பிரென்னன்.

``வார கடைசி நாட்களில் உங்களுக்கு மெசேஜ் வந்தாலும், நீங்கள் பதில் அளித்தாக வேண்டும்'' என்கிறார் அவர்.

பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற ஆங்கிலேயர் அதிகம் உள்ள நாடுகளில், முந்தைய காலத்தின் சிறப்பான சேவை என இமெயில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

``Dear X'' வாழ்த்துகள், சம்பிரதாயமான முறையில் நிறைவு செய்யும் ``Best Regards'' போன்றவை, கடிதம் எழுதுதலின் நல்லுறவைக் காட்டுகின்றன.

ஆனால் பல ஆசிய நாடுகளில், உடனுக்குடன் மற்றும் சம்பிரதாய முறையில் அல்லாத மெசேஜ் ஆப்கள் தான் விரும்பப்படுகின்றன.

ஆசியாவில் அலுவலகங்கள் வைத்துள்ள புராபெட் என்ற ஆலோசனை நிறுவனத்தின் பங்குதாரராக இருக்கும் ஆலன் கேசெ இதுபற்றிக் கூறும்போது, மேற்கத்திய நாடுகளைவிட ஆசியாவில் இமெயில்களைவிட சாட்டிங் ஆப்கள் மிகவும் ஏற்புடையதாக உள்ளன என்று தாமும், தன் அணியினரும் கருதுவதாகக் கூறியுள்ளார்.

``சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் போன்ற பல நாடுகள் கம்ப்யூட்டர் யூகத்தில் இருந்து தாவிக்குதித்து செல்போன் தொடர்பியல் வசதிக்கு மாறிவிட்டன'' என்று கேசெ கூறினார்.

``அதனால் முகநூல், WeChat, Line, Kakao Talk, Zalo என்ற சமூக தளங்கள் அதிக அளவில் ஈர்ப்பைப் பெற்றுள்ளன'' என்று அவர் தெரிவித்தார்.

தொழில் செய்தல்

பட மூலாதாரம், Gety

சீனாவில் WeChat-க்கு அப்பாற்பட்டு பெரிய கார்ப்பரேசன்களின் தேவைகளை பிசினஸ் ஆப்கள் பூர்த்தி செய்கின்றன. அதிக வேலை மற்றும் உற்பத்தியில் கவனம் செலுத்தும் அம்சங்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு அவை உதவிகரமாக உள்ளன.

அலிபாபாவின் DingTalk மற்றும் ByteDance-ன் Lark போன்ற தளங்கள், WeChat - WeChat Work - ஆகியவற்றின் தொழில் செய்வதற்கான வெர்சன்களாக உள்ளன. ஆவணங்கள் பகிர்தல், ஆன்லைன் எடிட்டிங், சம்பளப் பட்டியல் தயாரித்தல், பணியிட ஒத்திசைவு மற்றும் உயர்நிலையிலான அந்தரங்கம் உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன.

ஒருவர் ஒரு மெசேஜை பார்த்துவிட்டாரா இல்லை என்பதை DingTalk மூலம் உடனுக்குடன் அறியலாம். அவ்வாறு பார்க்காதிருந்தால், நினைவூட்டல் தகவலை பயனாளர் அனுப்பலாம்.

மேற்கத்திய நாடுகளில் `சிதறலாக உள்ள சேவை'

சீன கிரிப்டோ கரன்சி டிரேடிங் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு மேலாளராக இருக்கிறார் 31 வயதான ஹாய்லன் ஜியா.

பெய்ஜிங்கில் இருந்து 2018ல் இங்கிலாந்தில் தென்மேற்கில் பிளைமவுத்திற்கு அவர் குடிபெயர்ந்தார். தனது இணையருடன் வாழ்வதற்காக அங்கு சென்றார்.

பிரிட்டனில் ஆன்லைன் சேவைகள் சிதறல்கள் போல உள்ளன என்கிறார் அவர்.

``அமேசானில் சில பொருட்களை நீங்கள் வாங்குகிரீர்கள்; ஆப்கள் மூலம் மளிகை சாமான்கள் வாங்குகிறீர்கள்; இணையதளங்கள் மூலம் அப்பாயின்மென்ட்கள் பெறுகிறீர்கள். இவை எல்லாவற்றுக்கும் இமெயில் அல்லது முகநூல் பதிவு தேவை. சீனாவில் இவை அனைத்திற்கும் உங்கள் WeChat கணக்கைப் பயன்படுத்தினால் போதும்'' என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து இமெயிலை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்பது ஹாய்லனுக்கு பழக்கமாகிவிட்டது.

``சீனாவில் நான் எப்போதும் இமெயில் பார்த்தது கிடையாது. எனவே, இமெயில்களுக்கு மற்றவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்குக் கிடையாது. பொழுதுபோக்கிற்காக நான் இமெயிலில் நேரத்தை செலவழிப்பதில்லை'' என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

இதனால், சீன மக்கள் இமெயில் பயன்படுத்துவதே இல்லை என்று கூறிவிட முடியாது.

பலருக்கு இமெயில் முகவரிகள் உண்டு. ஆனால் அமெரிக்க அல்லது ஐரோப்பியர்களைப் போல அடிக்கடி இமெயிலைப் பார்ப்பது கிடையாது.

பெய்ஜிங், ஷாங்காய் போன்ற பெரிய நகரங்களில், சர்வதேச தரநிலைகளுக்கு ஒத்திசைவு நிலை அதிகமாகக் காணப்படும் என்று பிரென்னன் தெரிவித்தார்.

என் பழைய மாணவிகளில் ஒருவரான யாங்ஷுவோ லீலி வாங், கல்விக் காலம் முடிந்ததும் தன் இமெயில் முகவரியை எனக்குத் தந்தார்.

கடந்த காலத்தின் மிச்சம்

நாங்கள் முன்பு இமெயில் மூலம் தொடர்பில் இருந்தோம். அவருக்கு இப்போது 30 வயதாகிறது. தெற்கு சீனாவில் குவாங்டாங்கில் மின்விளக்குகள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு WeChat மூலம் அவரை நான் தொடர்பு கொண்டேன். இப்போது நாங்கள் அதில் தான் கலந்துரையாடுகிறோம்.

நாங்கள் முன்பு பயன்படுத்திய இமெயில் முகவரியை இன்னும் பயன்படுத்துகிறாயா என்று அந்த மாணவியிடம் கேட்டேன்.

``எந்த மெயில் முகவரி'' என்று கேட்டுவிட்டு அவள் சிரித்தாள். ``நான் நிறைய வைத்திருந்தேன்: 163, 126 மற்றும் MSN'' என்று டிஜிட்டல் சேவை வழங்குநர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார்.

எப்போதாவது தான் இமெயில் பார்க்கிறார். கடைசியாக எப்போது பார்த்தோம் என்பது அவளுக்கு நினைவில்லை.

``நான் பெரும்பாலும் WeChat பயன்படுத்துகிறேன்; அதிகம் QQ பயன்படுத்துவது இல்லை. ஆனால் சில நேரங்களில் பயன்படுத்துகிறேன்'' என்று அவள் கூறினாள்.

வாங் மற்றும் ஏராளமான சீன மக்களுக்கு, தினசரி வாழ்வில் ஓர் அங்கமாக WeChat மாறியுள்ளது. இமெயில் என்பது அவர்களுக்கு கடந்த காலத்தின் மிச்சம் என்பதாக ஆகிவிட்டது.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: