அமெரிக்க அதிபர் தேர்தல்: இணைய வழி விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுப்பு மற்றும் பிற செய்திகள்

டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

அடுத்த மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுடனான இரண்டாவது விவாதத்தை இணைய வழியே நடத்தினால் அதில் பங்கேற்கப்போவதில்லை என்று டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

டிரம்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், வரும் 15ஆம் தேதி அமெரிக்காவின் மியாமி நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த விவாதத்தை இணைய வழியே நடத்த வேண்டியுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இணைய வழி விவாதத்துக்கு டிரம்ப் மறுப்புத் தெரிவித்துள்ளதால், வரும் வாரங்களில் நடைபெற வேண்டிய அதிபர் வேட்பாளர்களுக்கிடையேயான விவாதம் எங்கு, எப்படி நடைபெறும் என்ற குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

டிரம்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்படுவதற்கு முன்பு, அதாவது கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடைபெற்ற விவாதம் அவமதிப்புகள் மற்றும் குறுக்கீடுகள் நிறைந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

வரும் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்திய கருத்துக் கணிப்புகளின்படி, ஜோ பைடன் தேசிய அளவில் ஒற்றை இலக்க வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதாக தெரியவந்துள்ளது. எனினும், தேர்தல் முடிவானது, இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் முக்கிய மாகாணங்களின் இறுதி வாக்குப்பதிவை பொறுத்தே அமையும்.

பட மூலாதாரம், Reuters

தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வாய்ப்பை பயன்படுத்தி இதுவரை சுமார் 60 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர்.

முன்னதாக, இந்த விவாதம் குறித்து தொலைபேசி வாயிலாக அமெரிக்க செய்தித் தொலைக்காட்சியான ஃபாக்ஸ் பிசினஸ் சேனலிடம் பேசிய டிரம்ப், "ஒரு கணினிக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு நடைபெறும் மெய்நிகர் விவாதத்தில் பங்கேற்று என் நேரத்தை வீணடிக்க போவதில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், "டிரம்ப் தனது முடிவுகளை ஒவ்வொரு நொடிக்கும் மாற்றுகிறார்" என்று கூறினார்.

இந்த நிலையில், வரும் 22ஆம் தேதி வழக்கமான முறைப்படி, மியாமியில் விவாதத்தை நடத்துவதற்கு ஜோ பைடனின் பிரசார குழு விருப்பம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவு விரைவில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ராம் விலாஸ் பாஸ்வான் காலமானார்

பட மூலாதாரம், Getty Images

இந்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு விநிகோயகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் (74), டெல்லியில் நேற்று (அக்டோபர் 8) காலமானார். இந்திய அரசியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலான அவரது அரசியல் பயணம் இறக்கங்களை விட பல ஏற்றங்கள் கொண்டதாகவே இருந்தது. ஆனால், அதற்கு அவர் எதிர்கொண்ட சவால்கள் கடினமானவை.

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால் காவலர்கள் இடமாற்றமா?

பட மூலாதாரம், Facebook

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த தமிழக காவல்துறையின் காவலர்கள் மூன்று பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் அவர்கள் கடந்த மாதம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்கள், அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி பள்ளிகள் திறப்பு

பட மூலாதாரம், Getty Images

புதுச்சேரியில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று (அக்டோபர் 8) பள்ளிகள் திறக்கப்பட்டன. 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சந்தேகம் தீர்ப்பு வகுப்புகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வைரஸ் தொற்று பரவினால் பள்ளிகள் நடத்த எடுக்கப்பட்ட முடிவு மறுபரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அர்மீனியா - அஜர்பைஜான் மோதலால் இந்தியர்களுக்கு ஆபத்தா?

பட மூலாதாரம், Getty Images

அர்மீனியாவுக்கும், அஜர்பைஜானுக்கும் இடையிலான நாகோர்னோ - காராபாக் எல்லை பிரச்சனை கடும் மோதலாகி மீண்டும் தீவிரமாகியிருக்கிறது. பாகிஸ்தான், இரான், துருக்கி ஆகிய நாடுகள் அவற்றின் ஆதரவை அஜர்பைஜானுக்கு வழங்கியுள்ளன. ஆனால், அங்குள்ள நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும், எல்லை பிரச்சனைக்கு அமைதி வழியில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இந்தியா பதில் அளித்துள்ளது.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: