“கொரோனா தொற்று மாதக்கணக்கில் நோய் எதிர்ப்பு திறனை வழங்கலாம்”

  • ஸ்மிதா முண்டாசாத்
  • சுகாதார செய்தியாளர்
பெண்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் குறைந்தது அடுத்த ஐந்து மாதங்களுக்குத் தொற்று ஏற்படாது என பிரிட்டன் பொது சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கொரோனா தொற்றால் இதுவரை பாதிக்கப்படாதவர்களுடன் ஒப்பிட்டால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 83 சதவீதம் அளவிற்கு மீண்டும் ஏற்படும் வாய்ப்பு குறைவு என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இருப்பினும் சிலருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு, அது பிறருக்கும் பரவலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் தங்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் இல்லையென்றாலும் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கும்படி அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

`உயிர்களை காப்பாற்றும்`

இந்த ஆய்வை முன்னெடுத்த பேராசிரியர் சூசன் ஹாப்கின்ஸ், சிலரிடம் எதிர்பார்த்ததை விட கொரோனா தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. இருப்பினும் அது நீண்ட காலம் என்று கூற முடியாது என்கிறார்.

கவலை கொள்ளக்கூடிய ஒரு விஷயம், கொரோனா தொற்றால் மீண்டும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அதன் தீவிரம் அதிகமாக இருந்தது. அதில் சிலருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை ஆனால் அடுத்தவர்களுக்கு தொற்றை ஏற்படுத்தும் ஆபத்து நிறைந்திருந்தது என்கிறார் சூசன்.

"இதன் மூலம் உங்களுக்கு ஏற்கனவே தொற்று ஏற்பட்டு விட்டது என்றும், நீங்கள் முழு பாதுகாப்புடன் உள்ளீர்கள் என்றும் நம்பினால் அதற்கு மீண்டும் உறுதியளிக்க முடியாது. அதாவது உங்களுக்கு தீவிர தொற்று ஏற்படும் சூழல் குறைவாக இருந்தாலும், ஆபத்து முழுமையாக நீங்கிவிடவில்லை என்றே கூறலாம். மேலும் உங்களுக்கு தொற்று ஏற்பட்டு நீங்கள் அதை பிறருக்கு பரப்பும் பாதிப்பும் உள்ளது." என சூசன் மேலும் கூறுகிறார்.

"முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முடிந்தவரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்." என்கிறார் சூசன்.

2020ஆம் ஆண்டு ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை பிரிட்டன் முழுவதும் 21 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு தொற்று உள்ளதா என்றும், இதற்கு முன் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனரா என்றும் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டனர்.

இதில் வைரஸுக்கு எதிரான ஆண்டிபாடிகளை கொண்டிருதாவர்கள், அதாவது இதற்கு முன் தொற்றால் பாதிக்கப்படாதவர்கள் 318 பேருக்கு குறிப்பிட்ட அந்த காலத்தில் தொற்று ஏற்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. ஆனால் ஆண்டிபாடிகள் உருவான 6,614 பேரில் வெறும் 44 பேருக்கே தொற்று ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

`தொடர்ந்து கவனிப்பு`

மேலும் 12 மாதங்களுக்கு இந்த சுகாதார பணியாளர்களை கண்காணிக்கும் ஆராய்ச்சியாளர்கள், தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அவர்களிடம் எவ்வளவு காலம் நீடிக்கிறது என்பதை அறிவர்.

இந்த ஆய்வில் உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் குறித்தும் ஆராயப்படும். இந்த பரிசோதனை முதன்முதலில் தொடங்கிய கால கட்டத்தில் கொரோனா புதிய திரிபு கண்டறியப்படவில்லை.

மேலும் இந்த ஆய்வில் தடுப்பு மருந்து பெற்றுக் கொள்ளும் நபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியும் கண்காணிக்கப்படும்.

"கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்து என்பது அதிகம் தேவைப்படாது. அவர்களுக்கு இயல்பாக நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்," என இங்கிலாந்தில் உள்ள லீஸ்டர் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணரான பேராசிரியர் ஜூலியன் டாங் தெரிவிக்கிறார்.

"தாங்கள் மருந்துத் துறையில் பணிப்புரிவதால் தங்களுக்கு மீண்டும் மீண்டும் கோவிட் தொற்று வரக்கூடும் என அஞ்சும் பணியாளர்களுக்கு இந்த ஆராய்ச்சி ஒரு ஆறுதலை தரும்," என்கிறார் பேராசியர் டாங்.

பிரிட்டனை பொறுத்தவரை கொரோனா தொற்று தற்போது குறைந்து வருவதாக முக்கிய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: