சியாச்சின் - உலகின் மிக ஆபத்தான போர்க்களத்தில் இந்திய ராணுவத்தின் வீர சாகச கதை

  • ரெஹான் ஃபசல்
  • பிபிசி ஹிந்தி
சியாச்சின்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவின் டன்ட்ரா உலகின் மிக ஆபத்தான போர்க்களமாக கருதப்படுகிறது.

1942ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ஸ்டாலின்கிராட்டில் ரஷ்ய ராணுவத்தால் ஹிட்லரின் ராணுவம் தோற்கடிக்கப்பட்டது, இரண்டாம் உலக போரின் திசையையே மாற்றியது.

1948 ஆம் ஆண்டில் பனியால் மூடப்பட்ட ஸ்கார்டு மற்றும் கில்கிட்டில் பாகிஸ்தான் பழங்குடியினருக்கு எதிராக மேஜர் ஜெனரல் திம்மையாவின் 19 காலாட்படைப் பிரிவு போராடிய விதமானது, தைரியம் மற்றும் துணிச்சலின் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

ஆனால் இந்த எல்லா போர்களையும், சியாச்சினில் கடந்த 36 ஆண்டுகளாக நடந்து வரும் இந்திய-பாகிஸ்தான் மோதலுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால் இங்கு மூச்சு விடுவதே ஒரு பெரிய சாதனையாகும்.

இது நடந்தது, 1984 ஏப்ரல் 13 ஆம் தேதி. நேரம் காலை ஐந்து முப்பது. கேப்டன் சஞ்சய் குல்கர்னி மற்றும் அவரது சக வீரர்களையும் ஏற்றியபடி சீட்டா ஹெலிகாப்டர் அடிப்படை முகாமில் இருந்து பறந்தது.

அவருக்குப் பின்னால் மேலும் இரண்டு ஹெலிகாப்டர்கள் சென்றன. நண்பகலுக்குள், ஸ்குவாடர்ன் லீடர் சுரீந்தர் பெயின்ஸ் மற்றும் ரோஹித் ராயும், இதுபோல 17 முறைகள் ஹெலிகாப்டர்களை இயக்கினர். கேப்டன் சஞ்சய் குல்கர்னி, ஒரு ஜே.சி.ஓ மற்றும் 27 இந்திய வீரர்கள், சியாச்சினில் உள்ள பிலாஃபாண்ட் லா அருகே ஹெலிகாப்டரில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

பட மூலாதாரம், HARPERSCOLLINS

"'காலை ஆறுமணியளவில் இரண்டு ஹெலிகாப்டர்களில் இருந்து நாங்கள் நான்கு பேர், தரைக்கு சில அடிகள் உயரத்திலிருந்து கீழே குதித்தோம் என்று லெப்டினன்ட் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற சஞ்சய் குல்கர்னி என்னிடம் கூறினார்," என்று 'பியாண்ட் என்ஜே 9842 தி சியாச்சின் சாகா' (Beyond NJ 9842 The Siachen Saga) என்ற தனது புத்தகத்தில் நிதின் கோக்லே எழுதியுள்ளார்.

'கீழே பரவியுள்ள பனியின் ஆழத்தையும் வலிமையையும் அளவிட 25 கிலோ எடையுள்ள ஒரு கோதுமை மாவு சாக்கை நான் முதலில் கீழே தள்ளினேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. அங்குள்ள பனி மிகவும் உறுதியாக உள்ளது என்பதை இது எங்களுக்கு உணர்த்தியது.'

'அங்கு குதித்த பிறகு, நாங்கள் அங்கே ஒரு வகையான ஹெலிபேட் உருவாக்கினோம். இதனால் எங்களுக்குப் பிறகு மற்ற ஹெலிகாப்டர்கள் அரை நிமிடம் மட்டும் அங்கு தரையிறங்கிவிட்டு பின்னர் மற்ற முகாம்களுக்கு செல்ல முடியும். அந்த நாள் பற்றிய எப்போதுமே மறக்கமுடியாத ஒரு நினைவு என்னவென்றால், அன்று அங்கு புலப்பாடு பூஜ்ஜியத்திற்கு கீழே இருந்தது மற்றும் தட்பநிலை மைனஸ் 30 டிகிரியாக இருந்தது." என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், BLOOMSBERRY

படக்குறிப்பு,

கேப்டன் சஞ்சீவ் குல்கர்னி

தரையிறங்கியதும் ஒரு வீரரின் மரணம்

பிலாஃபாண்ட் லாவில் ஹெலிகாப்டர்களில் இருந்து தரையிறங்கிய மூன்று மணி நேரத்திற்குள், ரேடியோ ஆபரேட்டர் மண்டல், மிக உயரமான இடத்தில் ஏற்படக்கூடிய நோயான 'ஹெப்'( High Altitute Pulmonory Edema)வுக்கு இரையானார்..

இருப்பினும், இந்திய தரப்பிற்கு ஒரு வகையில் இது நன்மையாக முடிந்தது. ஏனெனில் ரேடியோ ஆபரேட்டர் இல்லாத நிலையில், வானொலி மெளனமானது. அங்கு இந்திய வீரர்கள் இருக்கிறார்கள் என்ற நினைப்புகூட பாகிஸ்தானியர்களுக்கு ஏற்படவில்லை.

பிலாஃபாண்ட் லாவில் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே, குல்கர்னியும் அவரது குழுவினரும் ஒரு பயங்கரமான பனிப்புயலால் சூழப்பட்டதால் வெளி உலகத்துடனான தொடர்பை இழந்தனர்.

"ஏப்ரல் 16 அன்று, வானிலை சிறிது சீரானதும் சில கூடுதல் வீரர்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்ப முடிந்தது. அதற்குள், ஒரு வீரர் இறந்துவிட்டார். மீதமுள்ள 27 இந்திய வீரர்களில் 21 வீரர்கள் உறைபனி கடியால் (Frost bite) பாதிக்கப்பட்ட்டனர்," என்று சமீபத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு புத்தகமான 'ஃபுல் ஸ்பெக்ட்ரம் இண்டியாஸ் வார்ஸ் 1972 -2020' இல், ஏர் வைஸ் மார்ஷல் அர்ஜுன் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், HARPERSCOLLINS

பனிப்பாறை பகுதிக்காக பாகிஸ்தான் ஜெர்மனியிடமிருந்து வாங்கிய சிறப்பு உடைகள்.

சியாச்சின் போரைப் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான வர்ணனை ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷனின் சீனியர் ஃபெல்லோ ஸ்டீபன் கோஹெனிடமிருந்து வந்துள்ளது.

'இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இந்தப்போரை , ஒரு சீப்புக்காக போராடும் இரண்டு வழுக்கை மனிதர்களின் மோதலுடன் ஒப்பிடலாம்' என்று அவர் கூறுகிறார்.

சுமார் 23000 அடி உயரத்தில் உள்ள சியாச்சின் பனிப்பாறை, 75 கிலோமீட்டர் நீளமும் சுமார் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவும் கொண்டதாக எளிதில் அணுக முடியாத நிலையில் இருப்பதால், இந்தியாவும் பாகிஸ்தானும் 1972 வரை அதன் அளவை தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் இல்லை என்று கருதினர்.

70 களில் சில அமெரிக்க ஆவணங்கள் NJ 9842 க்கு அப்பால் காரகோரம் மலைத்தொடர் பகுதியை பாகிஸ்தான் பிரதேசமாகக் காட்டியபோது இந்தியா முழித்துக்கொண்டது.

பாகிஸ்தானியர்களும் மேற்கத்திய நாடுகளிலிருந்து மலையேறும் குழுக்களை இந்த பகுதிக்கு அனுப்புகிறார்கள் என்பதையும் இந்தியா அறிந்து கொண்டது. இதனால் இந்த பகுதி குறித்த அவர்களின் கூற்று மேலும் வலுவாகும் என்று அவர்கள் கருதினர்.

80 களில், இந்திய புலனாய்வு அமைப்பான ராவின் துப்பறியும் நபர்கள், உயரமான பனிப்பாறை பகுதிக்காக பாகிஸ்தான் சிறப்பு ஆடைகளை வாங்குகிறது என்பதை அறிந்தனர்.

ராவின் தலைவராக இருந்த விக்ரம் சூட், அப்போது ஸ்ரீநகரில் பணியில் இருந்தார். அவரே நேரடியாக 15 படைப்பிரிவின் பதாமி பாக் தலைமையகத்திற்குச் சென்று தளபதி லெப்டினன்ட் ஜெனரல் பி.என். ஹூனுக்கு பாகிஸ்தானின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். பாகிஸ்தானியர்கள் இந்த ஆடைகளை சுற்றுலாவிற்காக வாங்கவில்லை என்று அவர் உறுதியாக நம்பினார்.

பட மூலாதாரம், HARPERSCOLLINS

பாகிஸ்தானியர்களுக்கு முன் சியாச்சினை அடைந்த இந்திய வீரர்கள்

ஏர் வைஸ் மார்ஷல் அர்ஜுன் சுப்பிரமணியம் தனது 'ஃபுல் ஸ்பெக்ட்ரம் இண்டியாஸ் வார்ஸ் 1972-2020' என்ற தனது புத்தகத்தில் , '1983 குளிர்காலத்தில் பிலாஃபாண்ட் லாவைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ,இயந்திர துப்பாக்கிகள் மற்றும் மோர்டர் குண்டுகளுடன் தனது வீரர்களின் ஒரு சிறிய பிரிவை அனுப்பியது. தீவிர வானிலை மற்றும் தளவாடங்களை கொண்டு சேர்க்க முடியாத காரணத்தால் அவர்கள் அங்கிருந்து திரும்ப வேண்டியிருந்தது .'என்று குறிப்பிட்டுள்ளார்.

"இந்திய வீரர்கள் சியாச்சினில் தரையிறங்கியபோது, பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரி ஜெனரல் ஜியா உல் ஹக், ஸ்கார்டுவில், ஒரு பட்டாலியன் புர்ஜில் படைக்கு சியாச்சினில் தங்க பயிற்சி அளித்து வந்தார். ஏப்ரல் அல்லது மே மாதங்களில் படையை அங்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்திய வீரர்கள் அவர்களுக்கு முன்பாக அங்கு சென்றுவிட்டனர். புர்ஜில் படை முதல் முறையாக 1984 ஏப்ரல் 25 ஆம் தேதி இந்திய வீரர்களை தாக்கியது. ஆனால் இந்தத்தாக்குதல் இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டது,"என்று அர்ஜுன் சுப்பிரமணியம் மேலும் எழுதுகிறார்.

பட மூலாதாரம், BLOOMSBERRY

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் அப்போது அங்கு பணியில் இருந்தார். அவர் தனது சுயசரிதையான 'இன் தி லைன் ஆஃப் ஃபயர்' இல் இவ்வாறு எழுதுகிறார். ' மார்ச் மாதத்தில் நாம் அங்கு செல்லவேண்டும் என்று நான் யோசனை கூறினேன். ஆனால் வடக்கு பிராந்தியத்தின் ஜெனரல் ஆஃபீஸர் கமாண்டிங், கடினமான நிலப்பரப்பு மற்றும் மோசமான வானிலை காரணமாக, நம் வீரர்கள் மார்ச் மாதத்தில் அங்கு சென்றுசேர முடியாது என்று கூறி எனது யோசனையை நிராகரித்தார். மே 1 ஆம் தேதி அங்கு செல்வது என்பது அவருடைய திட்டம். அவர் தளபதியாக இருந்ததால், அவரது யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாங்கள் அங்கு சென்றபோது இந்தியர்கள் ஏற்கனவே அங்குள்ள உயரங்களை ஆக்கிரமித்திருந்தனர்.'

வீரரின் உடலை கீழே எடுத்துச்செல்வதில் இரண்டு வாரங்கள் தாமதம்

சியாச்சினில் ராணுவ நிலைகளை அமைப்பதைவிடக்கடினம், மைனஸ் 30 முதல் 40 டிகிரி தட்பநிலையில் அங்கு தொடர்ந்து தங்குவது. இதைவிடக்கடினம், இறந்த வீரர்களின் சடலங்களை கீழே கொண்டுவருவது. 90 களில், HAPE நோயால் சோனம் சாதில் என்ற ஒரு கூர்க்கா வீரர் காலமானார்.

அடிப்படை முகாமுக்கு அனுப்பும் வகையில் அவரது உடல் ஹெலிபேடிற்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் விமானிகள் சில அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் மும்முரமாக இருந்தனர். எனவே உடலை மாலைதான் கீழே எடுத்துச் செல்ல முடியும் என்று அவர்கள் கூறினர்.

"மாலை நேரமான போது விமானி தனது ஹெலிகாப்டரில் எரிபொருள் ஏறக்குறைய தீரப்போவதாகவும், எனவே மறுநாள் உடலை எடுத்துச் செல்வதாகவும் கூறினார். அடுத்த நாள் இன்னும் சில முக்கியமான பணிகள் வந்தன. இதன் காரணமாக உடலை கீழே எடுத்துச்செல்வதில் இரண்டு வாரங்கள் தாமதம் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் கூர்க்காக்கள் தங்கள் தோழரின் உடலை ஹெலிபேடிற்கு கொண்டு வருவார்கள். ஆனால் ஹெலிகாப்டரில் இடம் இல்லாததால், அதை அவர்கள் திரும்ப எடுத்துச்செல்வார்கள்."என்று நிதின் கோகலே 'பியாண்ட் என்ஜே 9842 -தி சியாச்சின் சாகா' புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இறந்த தோழரின் உடலை பதுங்கு குழியில் இருபது நாட்கள் வைத்திருந்ததன் விளைவாக அவர்களுக்கு மன பிரமை ஏற்பட்டது. இறந்த வீரரை அவர் உயிருடன் இருப்பதைப் போல நடத்தத் தொடங்கினார்கள். அவருடைய உணவைக் கூட அவர்கள் தனியாக வைத்திருந்தார்கள். இது குறித்து அதிகாரிகள் அறிந்ததும், அவர்கள் சடலத்தை பி -1 அல்லது ப்ரிஃபெரன்ஸ் -1 (முன்னுரிமை-1) என்று அறிவித்தனர். அதன் பின்னர் உடல் கீழே எடுத்துச்செல்லப்பட்டது.

பட மூலாதாரம், BLOOMSBERRY

சடலத்தின் விறைப்பு - ஹெலிகாப்டர் பயண தாமதம்

உடல்களை கீழே எடுத்துச்செல்வது குறித்து விமானிகள் பல கதைகளை சொல்கின்றனர். பல முறை கீழே செல்வதற்கான காத்திருப்பு காரணமாக உடல்களில் விறைப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். சேடக் ஹெலிகாப்டர்கள் மிகச் சிறியவை. அவற்றில் ஒரு உடலை வைப்பதே மிகவும் கடினம். ஸ்லீப்பிங் பேக்கில் வைத்து ஹெலிகாப்டர்களில் ஏற்ற ஏதுவாக சில நேரம் உடல்களின் எலும்புகளை உடைக்கவேண்டியிருக்கும்.

பிரிகேடியர் ராஜீவ் வில்லியம்ஸ், 'தி லாங் ரோட் டு சியாச்சின் - தி குவெஸ்டின் வை' (The long road to siachen- The question why) என்ற புத்தகத்தில், ' காயமுற்ற வீரர்களை கீழே கொண்டுசெல்வதைக்காட்டிலும் உடல்களை எடுத்துச்செல்வது மிகவும் கடினம். பல முறை உடலை மரியாதையற்ற, மனிதாபிமானமற்ற முறையில் கயிற்றால் கட்டி, கீழ் பகுதியை நோக்கி உருட்டிவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். அதற்கு மாற்று வழி எதுவும் இல்லை. ஏனென்றால் இறந்த உடலை ஒரே இடத்தில் பல நாட்கள் வைத்திருந்தால் அது விறைத்துப்போய்விடும். மேலும் அது ஒரு பாறை போல மிகவும் இறுகிவிடும், "என்று எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், BLOOMSBERRY

பனிப்பொழிவில் சிக்கிய கதை

லெப்டினன்ட் கர்னல் சாகர் பட்வர்தன், அவரது யூனிட் 6 ஜாட் உடன் 1993-94ல் சியாச்சின் பனிப்பாறை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை அவர் தனது கூடாரத்திலிருந்து வெளியே வந்தபோது, புதிய பனிப்பொழிவில் இடுப்புவரை கீழே சென்றுவிட்டார்.

"நான் அந்த பனியிலிருந்து வெளியேற முயற்சித்தபோது, எனது காலணி ஒரு துளைக்குள் சிக்கியது. நான் மிகவும் கஷ்டப்பட்டு அந்த ஷூவில் என் காலை நுழைப்பதற்குள், அது பனியால் நிரம்பிவிட்டது. நான் என் கூடாரத்திலிருந்து 10 மீட்டர் தொலைவில் தான் இருந்தேன். காற்று மிகவும் பலமாக வீசியதால் கூச்சலிடுவதாலும் எந்தப் பயனும் இல்லை. காற்று மிக வேகமாக வீசியதால் என் குரல் அங்கு சென்றடைய முடியவில்லை. எப்படியோ நான் சிக்கிக்கொண்டிருந்த காலை வெளியே இழுத்து கூடாரத்தை அடைந்து உதவி கோரினேன். என்னை உடனடியாக ஒரு ஸ்லீபிங் பேக்கில் வைத்து சூடேற்றும் முயற்சியை ஆரம்பித்தனர். முதல் முன்னுரிமை, பனிக்கட்டியுடன் தொடர்பில்வந்த என் காலை காப்பாற்றுவதாகும். என் சகாக்கள் அடுப்பை ஏற்றி பனியை உருக வைக்க தொடங்கினர். நான் என் ஈரமான சாக்ஸை கழற்றி என் கால்களை வேகமாக தேய்க்க ஆரம்பித்தேன். மூன்று மணி நேரம் கழித்து, நான் ஓரளவு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினேன்," என்று பட்வர்தன் தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், BLOOMSBERRY

சமையலில் சிக்கல்

"அங்கு மிக்கப்பெரிய பிரச்சனை சமையல் செய்வது. அரிசி சமைக்க, பிரஷர் குக்கரில் 21 விசில்கள் வைக்கவேண்டியிருக்கும்," என்று சியாச்சினில் நிறுத்தப்பட்டுள்ள 2 பீகார் படையினரின் ஹவில்தார் ராஜீவ் குமார், நிதின் கோகலேவிடம் தெரிவித்தார்.

ராணுவத்திலிருந்து ஒவ்வொரு வீரருக்கும் அதிக புரத உணவு கொடுக்கப்பட்டாலும், அங்கு பசி இல்லாததால் யாரும் அதை சாப்பிடுவதில்லை. பல வீரர்களின் தோல் கருப்பு நிறமாக மாறும். அங்கு நிறுத்தப்பட்டுள்ள பெரும்பாலான வீரர்கள் தூக்கமின்மை குறித்து புகார் கூறுகின்றனர். தூக்கமின்மைக்கு முக்கிய காரணம் ஆக்ஸிஜனின் குறைவுதான் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள்.

சியாச்சினில் பணியில் ஈடுபடும் படையினருக்கு வழக்கமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒன்பது ஜோடி கம்பிளி சாக்ஸ் வழங்கப்படுகிறது. அவற்றைப் பயன்படுத்தாதவர்கள் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

பட மூலாதாரம், HARPERSCOLLINS

"நான் ஒரு முறை மத்திய பனிப்பாறை பகுதியில் ஒரு சாவடியில் இருந்தேன். மறுநாள் ஒரு முன்னிலை பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே நான் நடக்க ஆரம்பித்தேன். பயணத்தின் முதல் கட்டத்தில் ஒரு பனி ஸ்கூட்டரில் சென்றேன். பனிக்காற்றிலிருந்து என்னைப் பாதுகாக்க நான் ஒரு கம்பளி காது தொப்பியை மட்டுமே அணிந்திருந்தேன். சிறிது நேரத்தில் எனக்கு காதுகளே இல்லை என்பது போல உணர்ந்தேன். மாலை நேரத்தில், நான் ஹெலிகாப்டர் மூலம் அடிப்படை முகாமுக்கு திரும்பியபோது, என் காதுகளில் ஏற்கனவே ஃப்ராஸ்ட் பைட் ஏற்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக என்னால் பக்கவாட்டில் படுக்க இயலவில்லை." என்று சியாச்சினில் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் பி.சி கட்டோச் கூறுகிறார்.

பாக்கிஸ்தான் சாவடியில் தீ

"எங்கள் பெஹல்வான் சாவடியிலிருந்து 350 மீட்டர் தொலைவில் ஒரு பாகிஸ்தான் சாவடி இருந்தது. ஒரு நாள் அவர்களின் கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது, சில நிமிடங்களில் அது முற்றிலும் எரிந்துபோனது. எங்கள் கூடாரம் மிக அருகில் இருந்ததால், நாங்கள் கூச்சலிட்டோம். நாங்கள் உங்களுக்கு உதவ வர வேண்டுமா என்று கேட்டோம். அவர்கள் எங்கள் உதவியை ஏற்க மறுத்துவிட்டனர். சிறிது நேரத்தில் அவர்களுக்கு உதவி வந்தது . ஆனால் இங்கே நான் ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். எங்கள் ஹெலிகாப்டர்கள் கிட்டத்தட்ட தினமும் எங்கள் சாவடிக்கு வந்தன. ஆனால் நான் அங்கு தங்கியிருந்த 110 நாட்களில், இரண்டு முறை மட்டுமே அவர்களுடைய ஹெலிகாப்டர்கள் வந்தன. எங்களது மற்றும் அவர்களது வசதிகளை ஒப்பிட்டால், நிலத்திற்கும் வானத்திற்கும் இடையே உள்ள வித்தியாசம் இருந்தது," என்று 2 பீகார் படைப்பிரிவின் அதிகாரி கேப்டன் பரத், நிதின் கோகலேயிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANADOLU AGENCY

படக்குறிப்பு,

பாதுகாப்பு பணியில் பாகிஸ்தான் வீரர்கள்

நுரையீரல் மற்றும் மூளையில் நீர்

'பானா செளக்கியில் உள்ள பனி படுக்கை மூன்றடுக்கு ரயில்பெட்டியின் பெர்த்திற்கு சமமாக இருக்கும். அங்கே நிறுத்தப்பட்டிருந்த ஒரே ஒரு சிப்பாய் மற்றும் அவரது அதிகாரி , ஒருவர் மற்றவர் மீது கால்களை வைத்து தூங்கினர். ஜவானின் மீது காலை வைக்கும் அதிகாரம் முதலில் அதிகாரிக்கு கிடைக்கும். சிறிது நேரம் கழித்து, அந்த ஜவான் தனது அதிகாரியிடம் , ஐயா, போதும் போதும், எடை அதிகமாகிறது.. இப்போது நான் சிறிது நேரம் என் கால்களை உங்கள் மேலே வைத்திருக்கிறேன் என்று சொல்வார்," என்று காஷ்மீரில் தளபதியாக இருந்த ஜெனரல் அதா ஹஸ்னைன் நினைவு கூர்ந்தார்.

சியாச்சின் பனிப்பாறை பகுதியில் , மிகக் குறைந்த ஈரப்பதம், மிகவும் தீவிரமான குளிர், புற ஊதா கதிர்வீச்சு மற்றும் மிகக் குறைந்த ஈரப்பதத்தை மனித உடல் எதிர்கொள்கிறது. இது தவிர நீண்ட கால தனிமை, எப்போதும் பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுதல், சுத்தமான குடிநீரைப் பெறுவதில் சிரமம், மின்சாரம் இல்லாமல் தற்காலிக கூடாரங்களில் வாழ்வது, எதிரி தாக்குதலுக்கு எப்போதும் பயப்படுவது ஆகியவை இந்திய வீரர்கள் எதிர்கொள்ளும் பெரிய சோதனைகளாகும்.

பட மூலாதாரம், HARPERSCOLLINS

சியாச்சின் பகுதியில், ஒரு ஆரோக்கியமான வீரரின் நுரையீரலில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு , கடுமையான நுரையீரல் நோயுடன் சமதளப்பரப்பில் வாழும் ஒரு நபரின் நுரையீரலில் உள்ள ஆக்ஸிஜனுக்கு சமமாகும். நுரையீரல் மற்றும் மூளையில் நீர் சேர்வது, இந்திய வீரர்களை தாக்கும் நோய்களில் முக்கியமானவை.

ஒரு காலத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த 100 வீரர்களில், 15 பேருக்கு , HAPE நோய் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் இப்போது மருத்துவர்களின் கடின உழைப்பால், 100 வீரர்களில் ஒருவருக்கு மட்டுமே இந்த நோய் வருகிறது.

கார்கில் போரையும் விட அதிக பலி

பட மூலாதாரம், HARPERSCOLLINS

சியாச்சினில் இப்போதும் இறப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் இந்த இறப்புகளில் பெரும்பாலானவை விபத்துக்களால் நிகழ்கின்றன. சியாச்சினிலிருந்து திரும்பிய பிறகு வீரர்கள், எடை இழப்பு, அதிக தூக்கம், ஞாபக மறதி மற்றும் பாலியல் சக்தி குறைதல் ஆகியவை குறித்து அதிகம் புகார் கூறுகின்றனர். ஒரு மதிப்பீட்டின்படி, உலகின் மிக உயர்ந்த போர் மண்டலமான சியாச்சினில் இந்திய அரசு ஒவ்வொரு நாளும் 6 கோடி ரூபாய் செலவிடுகிறது அதாவது ஆண்டிற்கு 2190 கோடி ரூபாய். இந்தியாவும், பாகிஸ்தானும் சுமார் 5000 வீரர்களை அங்கு நிறுத்தியுள்ளன.

இந்த வீரர்களுக்கான சிறப்பு ஆடை மற்றும் மலையேறும் உபகரணங்களுக்காக இந்தியா இதுவரை 7500 கோடி செலவிட்டுள்ளது. சியாச்சின் பணியின்போது ஒவ்வொரு வீரருக்கும் ஒரு கிட் அளிக்கப்படுகிறது. அதன் சராசரி விலை ஒரு லட்சம் ரூபாய். இதில், 28000 ரூபாய் சிறப்பு உடைகளுக்கும், 13000 ரூபாய் சிறப்பு ஸ்லீபிங் பைகளுக்கும்,14000 ரூபாய் கையுறைகளுக்கும் மற்றும் ஒரு ஜோடி காலணிகளுக்கு 12500 ரூபாயும் செலவிடப்படுகிறது.

1984 ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை சியாச்சினில் சுமார் 869 இந்திய வீரர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இது கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களின் எண்ணிக்கையை விட அதிகம். இவர்களில், 97% வீரர்கள் மோசமான காலநிலை காரணமாக உயிரை இழந்துள்ளனர், பாகிஸ்தானுடனான போரில் அல்ல.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: