உத்தராகண்ட் பனிச்சரிவு, வெள்ளம்: இமய மலையில் உள்ள அணுசக்தி உளவு கருவிகள் காரணமா?

  • செளதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி
உத்தராகண்ட் பனிச்சரிவு, வெள்ளம்: இமய மலையில் உள்ள அணுசக்தி உளவு கருவிகள் காரணமா?

பட மூலாதாரம், Getty Images

இமயமலையின் உச்சிகளில் அணுசக்தியில் இயங்கும் கருவிகள் பனியிலோ, பாறைகளிலோ புதைந்து கிடப்பதாக, ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் பல தலைமுறைகளாக நம்புகிறார்கள்.

பிப்ரவரி தொடக்கத்தில் உத்தராகண்டில் ரெய்னி பகுதியில் பனிச்சரிவும் அதனால் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு 50க்கும் மேற்பட்டோர் இறந்த போது, அந்த அணுசக்தி உளவு கருவிகள் வெடித்துவிட்டதாக வதந்திகள் பரவின.

ஆனால் உண்மையில், ஒரு பெரிய பனிப்பாறை உடைந்ததால் தான் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

விஞ்ஞானிகள் விளக்கத்தை 250 குடும்பங்களைக் கொண்ட ரெய்னி கிராம நம்புவதற்கு தயாராக இல்லை.

"இந்த பனிச்சரிவினால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு அந்த அணுசக்தி உளவு கருவிகள் காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறோம். அது எப்படி குளிர்காலத்தில் பனிப்பாறை உடையும்? எங்களைப் பொறுத்த வரை, அரசு இது தொடர்பாக விசாரித்து, அந்த அணுசக்தி உளவு கருவிகளை கண்டுபிடிக்க வேண்டும்" என்கிறார் ரெய்னி கிராமத்தின் தலைவர் சங்ராம் சிங் ராவத்.

1960களில் இந்தியா உடன் அமெரிக்கா இணைந்து, எப்படி இமயமலை முழுக்க பரவலாக, சீனாவின் அணு ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைகள் திட்டத்தை கண்காணிக்க, அணுசக்தியில் இயங்கும் உளவு கருவிகளை நிறுவியது என்பது தொடர்பான கதை இது. 1964ஆம் ஆண்டு சீனா முதல்முறையாக தனது அணுசக்தி திறனை பரிசோதித்து பார்த்தது.

"பனிப்போர் உச்சத்தில் இருந்த தருணம் அது. எந்த திட்டமும் நடைமுறைக்கு ஒத்து வராத, செயல்படுத்த முடியாத திட்டங்களாக இல்லை, எந்த முதலீடுகளும் பெரிய முதலீடுகளாகக் கருதப்படவில்லை" என அமெரிக்காவை சேர்ந்த ராக் அண்ட் ஐஸ் என்கிற பத்திரிகையின் பங்களிப்பு ஆசிரியர் பீட் டகெடா கூறியுள்ளார். அதோடு இமயமலையில் அணுசக்தியில் இயங்கும் உளவு உபகரணங்கள் நிறுவியது குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மன்மோகன் சிங் கோலி

1965-ம் ஆண்டு அக்டோபரில் இந்திய மற்றும் அமெரிக்க மலையேறும் வீரர்கள், ஏழு புளுட்டோனிய கேப்ஸ்யூல்கள் மற்றும் உளவு கருவிகளோடு புறப்பட்டார்கள். அதன் மொத்த எடை 57 கிலோ. இதை 7,816 மீட்டர் உயரம் கொண்ட நந்தா தேவி மலை உச்சியில் வைப்பது தான் இலக்கு. இந்தியாவின் இரண்டாவது உயரமான மலை உச்சியான இது, இந்திய - சீன வடகிழக்கு எல்லைக்கு அருகில் அமைந்திருக்கிறது.

அந்த சமயத்தில் ஏற்பட்ட பனிப்புயலின் காரணமாக, அணுசக்தியில் இயங்கும் உளவு கருவிகளை நந்தா தேவி சிகரத்தில் பொருத்துவதற்கு முன்பே, ஆறு அடி நீளம் கொண்ட ஆண்டனா, இரண்டு ரேடியோ தொலைத் தொடர்பு கருவிகள், மின்அழுத்தப் பெட்டி (பவர் பேக்), புளூட்டோனியம் கேப்சியூல்கள் என எல்லாவற்றையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு, தப்பித்து வர வேண்டியதாகிவிட்டது.

"நாங்கள் கீழே இறங்கி வர வேண்டியதாகிவிட்டது. இல்லை என்றால் பலரும் உயிரிழந்திருப்பார்கள்" என எல்லைப் புற ரோந்து அமைப்பில் பணியாற்றிய இந்தியாவின் முக்கிய மலையேறும் வீரர்களில் ஒருவரான மன்மோகன் சிங் கோலி கூறினார். இவர் தான் இந்திய தரப்பில் மலையேறிய வீரர்களை தலைமை தாங்கி வழிநடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த வசந்த காலத்தில், மீண்டும் அந்த மலையேறும் வீரர்கள் குழு நந்தா தேவி மலையில் கருவிகளை விட்ட இடத்துக்குச் சென்று பார்த்த போது, அவற்றை அங்கு காணவில்லை.

அதன் பின் எத்தனையோ தேடுதல் வேட்டைகள் நடத்தப்பட்ட பின்பும் இதுவரை புளூட்டோனியம் கேப்ஸ்யூல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

பட மூலாதாரம், Getty Images

"அந்த புளூட்டோனிய கேப்ஸ்யூல்கள் பெரிய பனிப்பாறைகளில் இருக்கலாம் அல்லது தூளாகி இருக்கலாம், கங்கை நதி உருவாகும் இடத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம்" என்கிறார் டகெடா.

இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். காரணம் புளூட்டோனியம் பேட்டரிகள், புளூட்டோனியம்-238 என்கிற ஒரு வேறுபட்ட ஐசோடோப்புகளைப் பயன்படுத்துகின்றன. இந்த ஐசோடோப்புகளின் அரைவாழ் காலம் 88 ஆண்டுகள். அதாவது, புளூட்டோனியம் வெளியிடும் கதிரியக்கங்கள் பாதியாகக் குறைய 88 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

மலையேறும் வீரர்களுக்கு அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில், அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ-வின் ராணுவ தளத்தில் அணுசக்தி உளவு குறித்து பாடம் எடுக்கப்பட்டது என அமெரிக்காவின் அவுட்சைட் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. "அதன் பிறகு பல மணி நேரங்களை கைப்பந்து விளையாடுவதிலும், மது அருந்துவதிலும் செலவிட்டோம்" என அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் அந்த பத்திரிகையிடம் கூறினார்.

1978-ம் ஆண்டு வரை இந்த தோல்வியடைந்த அணுசக்தியில் இயங்கும் உளவு கருவிகள் திட்டம் ரகசியமாகவே இருந்தது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இந்த செய்தியை விவரமாக பிரசூரித்தது.

சீனாவின் அணுஆயுத ஆராய்ச்சி மற்றும் ஏவுகணைகளைக் கண்காணிக்க, இமயமலை உச்சியில் அணுசக்தியில் இயங்கும் உளவு கருவிகளை பொருத்தும் முதல் முயற்சி தோல்வியடைந்ததாகவும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இரண்டாவது முயற்சி பகுதி வெற்றியடைந்ததாகவும் ஒரு முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது.

1967-ம் ஆண்டு, 6,861 மீட்டர் உயரம் கொண்ட நந்த கோட் எனும் மலை உச்சியில் மூன்றாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டு வெற்றியடைந்தது. இந்த திட்டத்தில் பணியாற்றிய 14 அமெரிக்க மலையேறும் வீரர்களுக்கு மாதம் 1,000 அமெரிக்க டாலர் என மூன்று ஆண்டுகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது.

பட மூலாதாரம், NASA

படக்குறிப்பு,

அப்பல்லோ 13 கமாண்டர் ஜிம் லோவெல் பயிற்சியின் போது புளூட்டோனியம் பேட்டரி மற்றும் அறிவியல் உபகரணங்களை எடுத்துச் செல்கிறார்

1978-ம் ஆண்டு ஏப்ரலில், அப்போதைய இந்திய பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். ஆனால், அது எந்த அளவுக்கு வெற்றி அடைந்தது என்பதைப் பற்றி விவாதிக்கவில்லை என ஓர் அறிக்கை கூறுகிறது.

அமெரிக்க உள்துறை அமைச்சகமும், ரகசிய பதிவுகளாக வைத்திருந்த அமெரிக்காவின் சி.ஐ.ஏ-வின் இந்த நடவடிக்கைகளை, ரகசியமற்ற பதிவுகளாக அதே மாதம் வெளியிட்டது. இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகம் முன் 60 பேர் போராட்டம் நடத்தினார்கள். அதில் "சி.ஐ.ஏ-வே இந்தியாவில் இருந்து வெளியேறு", "சி.ஐ.ஏ இந்திய நதிகளை விஷத்தன்மை கொண்டதாக்குகிறது" என்கிற பதாகைகளோடு போராடினார்கள்.

இன்று வரை, இமயமலையில் காணாமல் போன புளூட்டோனியம் கேப்ஸ்யூல்கள் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்கப்படவில்லை, அவை என்ன ஆனது என்றும் விவரங்கள் இல்லை.

"கருவிகள் பனிச்சரிவில் சிக்கிக் கொண்டன, கடவுளுக்குத் தான் அதன் விளைவுகள் குறித்துத் தெரியும்" என அமெரிக்க மலையேறும் வீரர்களில் ஒருவராக இந்த திட்டத்தில் பங்கெடுத்த ஜிம் மெக்கர்தி கூறியதாக டகெடா குறிப்பிடுகிறார்.

ரெய்னியில் இருந்த ஒரு சிறிய குழு, தொடர்ந்து அதன் நீர் மற்றும் மண்ணை கதிர்வீச்சு தொடர்பாக பரிசோதித்து வந்தது. அதில் கதிர்வீச்சு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததா எனத் தெளிவாகத் தெரியவில்லை.

"புளூட்டோனியம் மட்கிப் போக பல நூற்றாண்டுகள் ஆகும். அதுவரை அது கதிர்வீச்சை உமிழ்ந்து கொண்டேதான் இருக்கும். புளூட்டோனியம் மற்றும் அதன் கதிர்வீச்சு இமயமலையின் பனியில் கலந்து, கங்கை வழியாக இந்திய நதிகளில் கலக்கலாம்." என அவுட்சைட் பத்திரிகை கூறியது.

89 வயதான மன்மோகன் சிங் கோலியிடம், இமய மலையில் கதிர்வீச்சு கொண்ட பொருட்களை விட்டு வந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நீங்கள் இருந்தது உங்களுக்கு வருத்தமளிக்கிறதா? என்று பிபிசி கேட்டபோது, "எனக்கு வருத்தமோ மகிழ்ச்சியோ எதுவும் இல்லை. நான் வெறுமனே எனக்கு கொடுத்த உத்தரவுகளைப் பின்பற்றினேன்" என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: