கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அமெரிக்காவில் பிறப்புவிகிதம் வீழ்ச்சி

A baby visits an elderly neighbour though a glass window

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்க நிலை அமல்படுத்தப்பட்டதால், மக்கள் வீட்டிலேயே அதிக நேரம் இருக்கிறார்கள். ஆனால், அமெரிக்காவில், குழந்தை பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. வீழ்ச்சிதான் அடைந்திருக்கிறது.

அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. 2019ம் ஆண்டின் பிறப்பு விகிதம் கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக இருந்தது. ஆனால், 2020ல் இது மேலும் சரிந்தது.

2021ம் ஆண்டு மேலும் 3 லட்சம் குழந்தைகள் குறைவாகப் பிறக்கும் என்று புரூகிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் என்ற சிந்தனைக் குழாம் நடத்திய ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.

வேலைச் சந்தையில், கொரோனா உலகத் தொற்று கொந்தளிப்பான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதனால், பெண்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு வேலைக்குச் செல்கிறவர்கள் எண்ணிக்கையில் ஆண்களைவிடப் பெண்கள் அதிகமாக இருந்தனர். ஆனால், வேலைச் சந்தையில் பெண்களின் பங்கேற்பு தற்போது 57 சதவீதமாக குறைந்துவிட்டது. இது 1988க்குப் பிந்திய காலகட்டத்திலேயே குறைவான அளவாகும் என்கிறது நேஷனல் விமன்'ஸ் லா சென்டர் என்ற அமைப்பு.

பள்ளிகள், குழந்தைகளுக்கான பகல் நேரப் பராமரிப்பு மையங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேலை, மற்ற பொறுப்புகள் இவற்றோடு குழந்தை பராமரிப்பு, குழந்தைகளுக்கு கல்வி போதிப்பது போன்ற கடமைகள் பெண்கள் மீது விழுந்துள்ளன.

இதனால், பல ஜோடிகள் கருத்தரிப்பதை தள்ளிப் போடுவதாகவும், பாலுறவு கொள்வது குறைந்துவிட்டதாகவும், பெருந்தொற்று, அதனால் ஏற்படும் செலவுகளைக் கணக்கிட்டு குறைவாகவே குழந்தை பெற விரும்புவதாகவும் கணக்கெடுப்புகள் காட்டுகின்றன என்கிறது குட்மாச்சர் இன்ஸ்டிடியூட்.

"வேலைச் சந்தை பலவீனமாக இருக்கும்போது பிறப்புவிகிதம் குறையும். வேலைச் சந்தையில் ஏற்றம் இருக்கும்போது பிறப்பு விகிதமும் அதிகரிக்கும்" என்று புரூகிங்ஸ் இன்ஸ்டிடியூட் ஆய்வுக்கட்டுரையை எழுதிய மெலிசா கியர்னே, பிலிப் லெவைன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

கருத்தரிப்பு தொடர்புடைய தேடல்கள் கடந்த ஆண்டு வீழ்ச்சியடைந்ததைக் காட்டுகின்றன கூகுள் டிரன்ட்ஸ் தளத்தின் தரவுகள்.

அமெரிக்க நாடு முழுமைக்குமான அதிகாரபூர்வமான பிறப்புத் தரவுகள் சில மாதங்களுக்கு வெளியிடப்படாது. ஆனால் அமெரிக்காவின் 32 மாநிலங்களுக்கான வருடாந்திர பிறப்புத் தரவுகளை சிபிஎஸ் நியூஸ் நிறுவனம் தொகுத்துள்ளது. இதன்படி 2019ம் ஆண்டைக் காட்டிலும் 2020ம் ஆண்டில் 95 ஆயிரம் குழந்தைகள் குறைவாகப் பிறந்துள்ளன.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் இந்த 32 மாநிலங்களின் தரவுகளை வைத்துப் பார்த்தால் அமெரிக்காவின் பிறப்பு விகிதம் 4 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது.

2019 டிசம்பர் மாதத்தையும், 2020 டிசம்பர் மாதத்தையும் ஒப்பிட்டால், கலிபோர்னியா மாநிலத்தில் 10 சதவீதமும், ஹவாயில் 30 சதவீதமும் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், குழந்தை நலத்திட்டங்கள், வரிச் சலுகைகள் தருவது பற்றி அரசியல் தலைவர்கள் யோசித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: