'சிறார்களின் தலையை துண்டிக்கும் இஸ்லாமியவாத தீவிரவாதிகள்' - மொசாம்பீக்கில் என்ன நடக்கிறது?

மொசாம்பீக்

பட மூலாதாரம், RUI MUTEMBA/SAVE THE CHILDREN

மொசாம்பீக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மாகாணமான கேபோ டெல்காடோவில் 11 வயதான இளம் சிறார்களைக் கூட இஸ்லாமியவாதத் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்வதாக தொண்டூழிய அமைப்பான 'சேவ் தி சில்ட்ரன்' கூறுகிறது.

தனது 12 வயது மகன் இவ்வாறு தலை துண்டித்துக் கொல்லப்பட்டபோது, அவனுக்கு உதவ முடியாமல் அந்தக் கொலையைப் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடிந்ததாக இந்த அமைப்பிடம் ஒரு தாய் தெரிவித்துள்ளார்.

மொசாம்பீக் நாட்டில் 2017ஆம் ஆண்டு இஸ்லாமியவாதிகளின் ஆயுத போராட்டம் தொடங்கிய பின்பு அங்கு 2500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்; சுமார் ஏழு லட்சம் பேர் தாங்கள் வசித்துவந்த வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.அங்கு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தீவிரவாதிகள் இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடையவர்கள்.

எண்ணெய் வளம் மிகுந்த கேபோ டெல்காடோ மாகாணத்திலிருந்து வெளியேறியுள்ள குடும்பத்தினரிடம் பேசி அறிக்கை வெளியிட்டுள்ளது சேவ் த சில்ட்ரன். இந்த அமைப்பிடம் பேசிய எல்சா எனும் தாய் அவரது மூத்த மகன் தலை துண்டித்து கொல்லப்பட்டபோது தனது பிற குழந்தைகளுடன் மறைந்திருந்து பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

"அந்த இரவில் எங்கள் கிராமம் தாக்கப்பட்டது; எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. இவையெல்லாம் தொடங்கிய பொழுது எனது நான்கு குழந்தைகளுடன் நான் வீட்டில் இருந்தேன். காடுகளுக்குள் தப்பி செல்ல நாங்கள் முயற்சி செய்தோம். ஆனால் அவர்கள் எனது மூத்த மகனை தூக்கிச் சென்று அவனது தலையை துண்டித்தனர். எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. ஏதாவது செய்ய முயன்றால் நாங்களும் கொல்லப்பட்டு இருப்போம்," என்று எல்சா கூறியுள்ளார்.

தமது மகன் ஒருவனை கடத்தி சென்ற தீவிரவாதிகள் இதே போன்று கொலை செய்ததாக அமேலி எனும் இன்னொரு தாயும் தெரிவித்துள்ளார். பின்னர் தமது பிற மூன்று குழந்தைகளுடன் அவர் தப்பி ஓட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்.

"எனது 11 வயது மகன் கொல்லப்பட்ட பின்பு எங்களது கிராமத்தில் தங்கி இருப்பது பாதுகாப்பானது அல்ல என்று நாங்கள் புரிந்து கொண்டோம். வேறொரு கிராமத்தில் உள்ள எனது தந்தையின் வீட்டுக்கு நாங்கள் தப்பிச் சென்றோம். ஆனால் அந்த கிராமமும் அடுத்த சில நாட்களில் தாக்குதலுக்கு உள்ளானது," என்று அமேலி கூறியுள்ளார்.

சேவ் தி சில்ரன் அமைப்பின் மொசாம்பிக் நாட்டுக்கான இயக்குநர் சான்ஸ் பிரிக்ஸ் குழந்தைகள் மீதான இத்தகைய தாக்குதல்கள் மிகவும் ஆழமாக வருத்தப்பட வைப்பதாக தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், AFP

"இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தாய்மார்கள் கூறும் கதைகளை கேட்ட எங்களது ஊழியர்களுக்கு கண்ணீரே வந்துவிட்டது. இந்த வன்முறை நிறுத்தப்பட வேண்டும். தாங்கள் அனுபவித்த அதிர்ச்சியிலிருந்து மீளச் செய்து, இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட வேண்டும்," என்று பிரிக்ஸ் கூறியுள்ளார்.

கேபோ டெல்காடோ பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களை இஸ்லாமியவாத தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொல்வது குறித்த செய்திகள் இதற்கு முன்பும் வெளியாகியுள்ளன. அந்த மாகாணத்திலுள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு கொல்லப்பட்டதாக கடந்த நவம்பர் மாதம் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.

பட மூலாதாரம், AFP

சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த மாகாணத்தில் ஒரு கிராமத்தில் இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டபோது டஜன் கணக்கானவர்கள் தலை துண்டிக்கப்பட்டு அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஜிகாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது மொசாம்பிக் நாட்டின் பாதுகாப்பு படைகளும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.காரணமில்லாமல் கைது செய்யப்படுவது, கைது செய்யப்பட்டவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொலை செய்வது ஆகியவை நிகழ்வதாக அந்த அமைப்புகள் கூறுகின்றன.

பட மூலாதாரம், AFP

தங்கள் நாட்டில் நடக்கும் ஆயுதப்போராட்டத்தை கட்டுப்படுத்த மொசாம்பிக் அரசு சர்வதேச உதவி வேண்டும் என்று கோரியுள்ளது.

தலைநகர் மாபுடோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை சேர்ந்த அதிகாரிகள், அமெரிக்க ராணுவத்தினர் மொசாம்பிக் வந்து அந்நாட்டு ராணுவத்தினருக்கு இரண்டு மாத காலம் பயிற்சி அளிப்பார்கள் என்றும் மொசாம்பிக் அரசுக்கு மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கருவிகள் வழங்கப்படும் என்றும் திங்களன்று தெரிவித்துள்ளது.

குடிமக்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு, சமூகத்தினரின் பங்களிப்பு ஆகியவை இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்குவதற்கு மையமாக உள்ளது என்று அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :