பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்க ஒரு செயலி: ஆஸ்திரேலிய போலீஸ் யோசனைக்கு எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள செயலியால் சர்ச்சை

பட மூலாதாரம், getty images

படக்குறிப்பு,

ஆஸ்திரேலியாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள செயலியால் சர்ச்சை

பாலுறவு சம்மதத்தை பதிவு செய்ய ஒரு செயலியை பயன்படுத்தலாம் என்ற நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) காவல் ஆணையரின் யோசனையை ஆஸ்திரேலியர்கள் பரவலாக கண்டித்துள்ளனர்.

உடலுறவு கொள்வதற்கான பரஸ்பர சம்மதத்தை மக்கள் டிஜிட்டல் முறையில் பதிவுசெய்யக்கூடிய ஒரு செயலி பற்றிய யோசனையை மிக் புல்லர், வியாழக்கிழமை தெரிவித்தார்.

"தெளிவான சம்மதத்தை" உறுதிசெய்ய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்றார் அவர்.

இது ஒரு குறுகிய பார்வை கொண்ட, தவறாக பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்பு கொண்ட யோசனை என்று பலரும் விமர்சித்துள்ளனர்.

ரகசிய கண்காணிப்பை மேற்கொள்ள அரசு இதை பயன்படுத்துமா என்ற கவலையும் எழுப்பப்பட்டுள்ளது.

சமீபத்திய வாரங்களில் ஆஸ்திரேலியர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் துன்புறுத்தப்படுவது குறித்து ஒரு தேசிய விவாதத்தை மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ளனர். திங்களன்று நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினர்.

வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்ட செயலி தொடர்பான யோசனை, ’வெளிப்படையான ஒப்புதல் கோரும் செயலை இயல்பாக்குவதை நோக்கமாகக் கொண்டது’ என்று என்.எஸ்.டபிள்யூ போலீஸ் தெரிவித்தது.

"உங்களுக்கு ஒரு மகன் அல்லது ஒரு சகோதரர் இருக்கலாம், இது மிகவும் சவாலானது என்று நீங்கள் கருதலாம். ஆனால் இந்த செயலி ... அனைவரையும் பாதுகாக்கும்," என்று கமிஷனர் மிக் புல்லர் , நைன் நெட்வொர்க்கிடம் தெரிவித்தார்.

பாலியல் வன்கொடுமை நீதிமன்ற வழக்குகளில், வெளிப்படையான சம்மதத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம், எப்போதுமே இருக்கும் ஒரு பிரச்சனை என்றும், செயலியில் பதிவு செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டவர்கள் நீதி பெற அது உதவும் என்றும் அவர் கூறினார். இந்த யோசனை என்.எஸ்.டபிள்யூ அரசிடம் எழுப்பப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு என்.எஸ்.டபிள்யூ போலீசில் புகார் செய்யப்பட்ட 15,000 பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 10% க்கும் குறைவான வழக்குகளில் மட்டுமே, போலீஸ் குற்றச்சாட்டுகளை பதிவுசெய்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

"இது வெளிப்படையான சம்மதமாக இருக்க வேண்டும். இந்த நாளில்,இன்றைய காலகட்டத்தில் நாம் அதை எவ்வாறு செய்வது? இதற்கு ஒரு வழி தொழில்நுட்பம்," என்று அவர் சிட்னி செய்தித்தாள் ’தி டெய்லி டெலிகிராப்பில்’ எழுதியுள்ளார்.

பட மூலாதாரம், getty images

செயலியின் சர்ச்சை சிக்கல் என்ன?

ஆனால் செயலியின் பயன்பாடு உண்மையில் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று பெண் வக்கீல்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாராவது தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டால், ஒப்புதல் பதிவை முறியடிக்கலாம் அல்லது அதை போலியாக பதிவு செய்யலாம் என்றும் அவர்கள் கூறினர்.

"துஷ்பிரயோகம் செய்பவர் செயலியை பயன்படுத்துமாறு, பாதிக்கப்பட்டவரை கட்டாயப்படுத்த முடியும்" என்று Women's Safety NSW என்ற அமைப்பின் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான பாலியல் வன்கொடுமைச் சட்டங்களை மேம்படுத்துவதற்கும், விழிப்புணர்வை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுடன் ஒப்பிடுகையில் இந்தப் செயலி பயனற்றது என்று நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் விமர்சித்தனர்.

"நமக்கு சம்மதம் தொடர்பான சட்ட சீர்திருத்தம் தேவை. நமக்கு முழுமையான கல்வி தேவை. என்ன வேண்டுமானாலும் செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று ஆண்கள் நினைப்பதை நிறுத்த வேண்டும் ... எங்களுக்கு ஒரு செயலி தேவையில்லை !!" என்று க்ரீன்ஸ் கட்சியின் எம்.பி., ஜென்னி லியோங் ட்வீட் செய்துள்ளார்.

வெளிப்படையான அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் பாலியல் உறவை ஒரு கிரிமினல் குற்றம் என்று இந்த ஆண்டு தொடக்கத்தில் டென்மார்க் அறிவித்தபிறகு இதேபோன்ற செயலி, ஒரு தனியார் நிறுவனத்தால் அங்கு வெளியிடப்பட்டது. ஆனால் இது பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகளால் பரவலாக கண்டனம் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலியாவில், நாடாளுமன்றம், பள்ளிகள் மற்றும் பணியிடங்களிலும் நடந்ததாக கூறப்படும் பல பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் கடந்த சில வாரங்களில், பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளன. பாலியல் சம்மதம் தொடர்பாக பள்ளிப்பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று என்.எஸ்.டபிள்யு.வில், ஒரு பள்ளி மாணவி முன்னெடுத்த பிரசாரத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் தங்கள் பள்ளி ஆண்டுகளில் நடந்த பாலியல் வன்கொடுமை பற்றிய அனுபவத்தை விவரித்திருக்கிறார்கள் - கற்பழிப்பு என்பதில் என்னெவெல்லாம் அடங்கும் என்பது குறித்து தங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர்களில் பலர் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: