கொரோனா வைரஸ் தடுப்பூசி: ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகாவின் கோவிஷீல்டு வழங்குவதை தாமதப்படுத்தும் இந்தியா, அதிர்ச்சியில் பிரிட்டன்

Covid vaccine: UK supply hit by India delivery delay

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு ஏப்ரல் மாதத்தில் கிடைக்கவேண்டிய ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகாவின் 'கோவிஷீல்டு' என்ற கொரோனா தடுப்பூசி மருந்து விநியோகத்தில் தாமதம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து நம்பத்தகுந்த தகவல்கள், பிபிசிக்கு கிடைத்துள்ளன. அதன்படி, இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்க அனுமதி பெற்று இருக்கும் புனேவில் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா கடந்த நான்கு வாரங்களாக இந்த மருந்தை அனுப்பாமல் நிறுத்தி வைத்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரத்தில், "தாமதத்துக்கு ஒரு நிறுவனம் அல்லது ஒரு நாடு எந்த வகையிலும் பொறுப்பு இல்லை" என்று பிரிட்டன் உள்துறை செயலர் ராபர்ட் ஜெனிரிக் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த நாட்டில் இருக்கும் அனைத்து முதியவர்களுக்கும் வரும் ஜூலை மாதத்திற்குள் கோவிட் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதத்தில் பிரிட்டனுக்கு கிடைக்கும் கோவிட் தடுப்பூசி மருந்து விநியோகத்தில் பற்றாக்குறை இருக்கும் என்று அந்த நாட்டின் உள்ளூர் சுகாதாரத்துறை அமைப்பு ஒன்றுக்கு, அந்த நாட்டின் 'தேசிய சுகாதார சேவை' அமைப்பு கடந்த புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. {பிரிட்டனில் என்ஹெச்எஸ் என்ற 'தேசிய சுகாதார சேவை' பொது நிதியில் இருந்து பராமரிக்கப்பட்டு வருகிறது}.

இந்த சிக்கலை அடுத்து, "கோவிட் தடுப்பு மருந்து விநியோகம் குறித்து எதிர்காலத்தில் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்" என்று பிரிட்டன் தடுப்பு பணிக்குழுவை ஸ்காட்லாந்து அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதேசமயம், வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து நாடுகள் தங்கள் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பு மருந்துகளின் பாதுகாப்பு குறித்த ஆய்வில் ஈடுபட்டு இருப்பதாக அறிவித்துள்ளன.

இதற்கிடையே, இது குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அளித்த பேட்டியில், "பிரிட்டனுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு 5 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்துகள் அனுப்பப்பட்டு உள்ளன. இந்தியாவில் தடுப்பு மருந்து தேவை மற்றும் நோய் தடுப்பு திட்டங்களை பொறுத்து, வரும் நாட்களில் பிரிட்டனுக்கு தடுப்பு மருந்து அனுப்ப முயற்சிப்போம்" என்றார்.

ஆனால், பிபிசிக்கு கிடைத்த வேறு ஒரு தகவலின்படி, மார்ச் மாதத்தில் 5 மில்லியன் டோஸ் தடுப்பூசி மருந்து அனுப்புவதற்கு துவக்கத்தில் இலக்கு நிர்ணயித்து இருந்தாலும், குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மருந்தை அனுப்ப வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் விதிக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

இது குறித்து, பிபிசிக்கு பிரிட்டன் உள்துறை செயலர் ராபர்ட் ஜெனிரிக் அளித்திருந்த பேட்டியில், "இங்கிலாந்துக்கு இந்தியாவில் இருந்து கிடைக்கும் தடுப்பூசி மருந்து விநியோகத்தில் ஏற்பட்டு இருக்கும் தாமதம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தெரிய வந்தது.

பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் தடுப்பூசி மருந்து செலுத்த வேண்டும், ஜூலை இறுதிக்குள் முதியவர்களுக்கு செலுத்த வேண்டும் என்பது அரசின் திட்டமாக இருந்தது. ஆனால், மருந்து கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவல் பிரிட்டனுக்கு சமீபத்தில்தான் கிடைத்தது. இது நாங்கள் கொண்ட நம்பிக்கையை விடவும், நிர்ணயித்த இலக்கை விடவும் தாமதமாக இருக்கும் என்று கருதவில்லை.

அதேநேரம் இரண்டாவது டோஸ் தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ள பதிவு செய்து கொண்டவர்கள், முழு நம்பிக்கையுடன் போட்டுக் கொள்ள வேண்டும். வரும் ஏப்ரல் மாதம் முழுவதும் வித்தியாசமாக இருக்கப் போகிறது. இதற்குக் காரணம் முதல் டோஸ் மருந்து போட்டுக் கொண்டவர்களை விட இரண்டாவது டோஸ் போடுபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கப் போகிறது" என்றார்.

50 வயதுக்கு கீழானவர்கள் தாமதிக்க வேண்டும்

இந்தியாவில் இருந்து ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்து இங்கிலாந்துக்கு கிடைத்தவுடன், வரும் நாட்களில் அதிக அளவில் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள மக்கள் முன் வருவார்கள் என்று அந்த நாட்டின் தேசிய சுகாதார சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

தடுப்பூசி மருந்து குறித்து ராயல் கல்லூரி பொது பயிற்சி நிறுவன தலைவர் பேராசிரியர் மார்ஷல் கூறுகையில், "அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டில் இருக்கும் 50 வயதை கடந்தவர்கள் மற்றும் ஆபத்து என்று கருதப்படும் மக்களுக்கு தடுப்பு மருந்து செலுத்த தேசிய சுகாதார சேவை அமைப்புக்கு பெரிய அளவில் தடுப்பு மருந்து கிடைத்துவிடும்.

ஆனால், தற்போது ஏற்பட்டு இருக்கும் பற்றாக்குறை என்ற செய்தி ஏமாற்றம் அளிக்கிறது. இந்த தாமதம் வரும் ஏப்ரல் மாதத்தில் 50 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று திட்டத்தை பாதிக்கும். ஆனால், இவர்களுக்கு இந்த கால கட்டத்திற்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற எந்த நிபந்தனையையும் நாங்கள் விதிக்கவில்லை. இந்த வயதினர் வரும் மே மாதம் வரை காத்திருக்க வேண்டும்" என்றார்.

இங்கிலாந்தில் இதுவரைக்கும் 25 மில்லியன் மக்கள் கோவிட் தடுப்பு மருந்தின் முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர். 1.7 மில்லியன் மக்கள் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை 50 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான பதிவுகள் துவங்கின. அப்போது, ஏப்ரல் மாதம் முழுவதும் இளைஞர்களுக்கு தடுப்பூசி போட வேண்டாம் என்று பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை அமைப்புக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிபிசியின் ரேடியோ 4 ஊடகத்துக்கு, அரசின் தடுப்பூசிகள் மற்றும் நோய் தடுப்பு கூட்டுக் குழுவின் உறுப்பினரும், பேராசிரியருமான ஆடம் பின் அளித்த பேட்டியில், "தாமதம் என்பது, வேகமாக செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி மருந்து விநியோகத்தில் சற்று தளர்வு ஏற்பட்டு இருக்கிறது என்று வேண்டுமானால் கூறலாம். ஆனால், முற்றிலும் நிறுத்தப்படவில்லை.

விநியோகத்தில் ஏற்பட்டு இருக்கும் தாமதம் தொற்று நோய் பரவலை அதிகரிக்கலாம். ஆனால், மருத்துவமனை சேர்க்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். அதேசமயம், கோவிட் 19 தொற்று பாதிப்பு இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது" என்றார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தான் உலகிலேயே மிக அதிக அளவில் தடுப்பு மருந்து தயாரிப்பில் முன்னணியில் வகிக்கிறது. குறைந்த மற்றும் மத்திய தர வருமானம் இருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நடப்பாண்டில் மட்டும் 100 கோடி டோஸ் மருந்துகளை சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.

"தடுப்பு மருந்து கிடப்பதில் உலக நாடுகள் பொறுமை காக்க வேண்டும்" என்று கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு இருந்த இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனாவாலா, "இந்தியாவின் பெரிய அளவிலான தேவையை பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதேசமயம், மூலப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதையும் ஆதர் பூனாவாலா குறிப்பிட்டு இருந்தார். தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கு தேவைப்படும் சிறப்பு பைகள், ஃபில்டர்கள் போன்றவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்து இருந்தது என்று கவலை தெரிவித்து இருந்தார்.

முன்னதாக, நடப்பு மாதத்தின் ஆரம்பத்தில், இங்கிலாந்துக்கு 10 மில்லியன் டோஸ்கள் வழங்குவதற்கு சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், ஆனால், அதில் பாதியளவு மருந்துதான் நடப்பு மாதத்தில் பிரிட்டனுக்கு கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. மீதமுள்ள மருந்து கிடைப்பதற்கு மேலும் பல வாரங்கள் தாமதம் ஏற்படலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இருந்து வாங்கியது போக, இங்கிலாந்துக்கு தேவைப்படும் தடுப்பூசி மருந்து உள் நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது. இந்த மருந்து தயாரிப்பு விநியோகத்தில் எந்தவித சிக்கலும் எழவில்லை என்று ஆஸ்ட்ராசெனிகா தெரிவித்துள்ளது.

ஃபைசர் மருந்து நிறுவனம் இங்கிலாந்துக்கு கோவிட் தடுப்பூசி மருந்து வழங்குவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி, பெல்ஜியத்தில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான அறிவிப்பை ஃபைசர் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

இந்த தடுப்பூசி மருந்துகளுடன் மடர்னா தயாரிப்பு மருந்துக்கும் இங்கிலாந்து அனுமதி அளித்துள்ளது. இந்த நாட்டின் குளிர் காலத்தில் இந்த நிறுவனம் தடுப்பூசி மருந்தை விநியோகம் செய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து அரசு 400 மில்லியன் (40 கோடி) டோஸ் மருந்துகளை தயாரிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் வல்னேவா, கிளாஸ்கோஸ்மித்க்ளைன், நோவாவாக்ஸ் மற்றும் ஜன்ஸ்சென் ஆகிய நிறுவனங்களும் அடங்கும். ஆனால், தடுப்பூசி மருந்து தயாரிக்க இந்த மருந்து நிறுவனங்களுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

இதுபோன்ற தாமதங்கள், சிக்கல்களால், எதிர்காலத்தில் குறிப்பிட்ட தடுப்பு மருந்து கிடைக்கும் என்று உறுதியாக கூறுவது கடினம். தடுப்பு மருந்து தயாரிப்பு என்பது முற்றிலும் உயிரியல் செயல்முறையாகும். ஆதலால், எதிர்காலத்தில் எவ்வளவு மருந்து கிடைக்கும் என்பதை அறுதியிட்டு கூற இயலாது. இந்த சூழலில் வெளிநாடுகளை தடுப்பூசிகளுக்கு நம்பி இருக்கும் பட்சத்தில் மேலும் குழப்பங்கள் ஏற்படலாம்.

இரண்டே மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி

இங்கிலாந்தில் இரண்டே மருந்து நிறுவனங்களுக்கு தான் கோவிட் தடுப்பூசி மருந்து தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இவை இரண்டிலும், அனுமதிக்கப்பட்டு இருக்கும் ஆஸ்ட்ராசெனிகாவின் கோவிஷீல்டு தடுப்பு மருந்து மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. ஃபைசர் மருந்து பெல்ஜியத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் முன்பு அளித்திருந்த உத்தரவாதத்தின் அடிப்படையில் விநியோகம் செய்து வருகின்றன.

இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 மில்லியன் (ஒரு கோடி) டோஸ் வாங்குவதற்கு இங்கிலாந்து ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ஆனால், எப்போது கப்பலில் ஏற்றுமதி செய்யப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இன்னும் அளிக்கப்படவில்லை.

பட மூலாதாரம், Getty Images

முன்னதாக, மார்ச் மாதத்தின் மத்தியில் ஆர்டர் கொடுத்திருந்த முழு தடுப்பு மருந்தும் கிடைத்துவிடும் என்றும், மருத்துவமனைகளில் மக்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகளை செலுத்தலாம் என்று இங்கிலாந்து அரசு நம்பிக் கொண்டு இருந்தது. ஆனால், இந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது தலைகீழாக மாறிவிட்டது என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை மாத இறுதிக்குள் முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி விடலாம் என்று அரசு நம்பிக் கொண்டு இருந்தது. ஆனால், இது இன்னும் ஒரு மாதம் தாமதம் ஆகலாம் என்று சமீபத்தில் தெரிய வந்துள்ளது.

ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்து செலுத்திக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைவு ஏற்பட்டு இருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளை ஐரோப்பிய மருந்துகள் முகமை வியாழக்கிழமை வெளியிட்டது.

ரத்த உறைவு சர்ச்சையைத் தொடர்ந்து, சில ஐரோப்பிய நாடுகள் ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போட்டுக் கொள்வதை நிறுத்திக் கொண்டுள்ளன. ஆனால், ரத்த உறைவுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தடுப்பு மருந்து போட்டுக் கொள்வதை நிறுத்த வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பும் ஐரோப்பிய நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், "கோவிட் தொற்று உயிரிழப்பை ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி தடுக்கிறது. அதேசமயம், மருத்துவமனைக்கு செல்வதையும் குறைக்கிறது " என்று ஐரோப்பிய மருந்துகள் முகமை வியாழக்கிழமை வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிவித்துள்ளது. இந்த முகமையின் இயக்குனர் எமர் கூக் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆஸ்ட்ராசெனிகா தடுப்பூசி மருந்து போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு இருந்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், இந்த தடுப்பூசி கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இது மிகவும் பாதுகாப்பான, திறன் வாய்ந்த தடுப்பூசி" என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: