கொரோனா காலத்திலும் செம லாபம் பார்த்த லாம்போர்கினி ஆடம்பர கார் நிறுவனம்

லாம்போர்கினி கார் உட் பகுதி

பட மூலாதாரம், Atomobili Lamborghini

இதுவரையான காலத்திலேயே லாம்போர்கினி கார் நிறுவனம் 2020-ம் ஆண்டில் தான் அதிக லாபம் பார்த்திருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் இரண்டு மாத காலம் இத்தாலியில் இந்நிறுவனத்தின் ஆலை மூடப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப் பெரிய ஆடம்பர கார் நிறுவனங்களில் லாம்போர்கினியும் ஒன்று. அந்நிறுவனம் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு கடந்த 2020-ம் ஆண்டில் லாபம் கண்டிருக்கிறது.

"நாங்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிட்டோம்" என லாம்போர்கினியின் முதன்மைச் செயல் அதிகாரி ஸ்டீஃபன் விங்கில்மேன் கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டின் விற்பனையை விட, 2020-ம் ஆண்டில் விற்பனை கொஞ்சம் குறைவு தான் என்றாலும், 2020-ம் ஆண்டில் லாம்போர்கினி அதிக விலை கொண்ட சூப்பர் கார்களை விற்று இருக்கிறது. எனவே அதன் லாபமும் அதிகரித்திருக்கிறது.

லாம்போர்கினி சொகுசு கார்களுக்கு சீனாவில் அதிக தேவை ஏற்பட்டு வருகிறது. எனவே முதல் முறையாக லாம்போர்கினி கார்கள் அதிகம் விற்கப்படும் நாடுகள் பட்டியலில், இந்த ஆண்டில் முதல் முறையாக ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சீனா இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Atomobili Lamborghini

லாம்போர்கினி பல ரக எஸ்யூவி கார்களை விற்று வருகிறது என்றாலும், அதன் 'உருஸ்' ரக கார்கள் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. உலகம் முழுக்க லாம்போர்கினியின் மொத்த விற்பனையில் 59 சதவீதம் விற்பனை இந்த உருஸ் ரக கார்கள் தான்.

சீனர்கள் ரோல்ஸ் ராய்ஸ், பென்ட்லி, லாம்போர்கினி போன்ற சொகுசு கார்களை அதிகம் வாங்கத் தொடங்கி உள்ளனர்.

"உருஸ் ரக கார்கள் போட்ட முதல் தொகையைக் கொடுப்பதால் எங்களுக்கு மன அமைதி கிடைக்கிறது. அதோடு நல்ல வருமானத்தைக் ஈட்டிக் கொடுக்கிறது. இந்த வருமானம் எதிர்காலத்தில் முதலீடு செய்வதற்கான நம்பிக்கையைக் கொடுக்கிறது" என அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி விங்கில்மேன் கூறினார்.

லாம்போர்கினி ஃபோக்ஸ்வேகனின் துணை நிறுவனங்களில் ஒன்று. இந்நிறுவனம் கடந்த 2020-ம் ஆண்டில் 7,430 சொகுசு கார்களை உலகம் முழுவதும் விற்பனை செய்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டான 2019-ல் 8,250 கார்களை விற்பனை செய்திருக்கிறது.

விற்பனை சற்று குறைந்திருந்தாலும், லாபகரமான "limited special series" ரக கார்களால் லாம்போர்கினிக்கு வருமானம் அதிகரித்திருக்கிறது.

"ஏற்கனவே இந்த 2021 ஆண்டின் ஒன்பது மாதங்கள் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களால் நிறைந்திருக்கிறது" என அந்நிறுவனத்தின் சி.இ.ஒ குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Atomobili Lamborghini

மின்சார கார் மற்றும் சீனா

இந்த ஆண்டில் லாம்போர்கினியின் இரண்டாவது பெரிய வாடிக்கையாளர்களைக் கொண்ட நாடாக சீனா வரலாம் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. சீனா ஜெர்மனியை மிஞ்சுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அமெரிக்கா தான் லாம்போர்கினி நிறுவனத்தின் மிகப் பெரிய சந்தையாக இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டில் 2,224 கார்களை லாம்போர்கினி அமெரிக்காவில் விற்பனை செய்திருக்கிறது.

தற்போது லாம்போர்கினிக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலே, உலகம் முழுக்க இருக்கும் வாகனப் புகை கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது மற்றும் மின்சார வாகனங்களுக்கு தன்னை மடைமாற்றிக் கொள்வதுதான்.

இதுவரை லாம்போர்கினி நிறுவனம் மின்சார சூப்பர் கார்கள் தொடர்பாக எந்த திட்டங்களையும் அறிவிக்கவில்லை. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், லாம்போர்கினியை விற்கப்போவதாக எழுந்த வதந்திகளையும் நிராகரித்து இருக்கிறார் லாம்போர்கினியின் முதன்மைச் செயல் அதிகாரி ஸ்டீஃபன் விங்கில்மேன்.

இதே கொரோனா காலகட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாட்டு மக்கள் அன்றாட வாழ்கையை நடத்தவே திண்டாடியதைச் செய்திகளில் பார்த்தோம். ஆனால் லாம்போர்கினி போன்ற பெருநிறுவனங்கள், அதே 2020-ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டியுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: