'வடகொரியாவின் புதிய ஆயுத சோதனை' - கவலைப்படுகிறாரா அமெரிக்க அதிபர் ஜோ பைடன்?

Kim Jong-un

பட மூலாதாரம், kcna

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றை வட கொரியா சோதனை செய்துள்ளது.

ஆனால் இதை அமெரிக்காவை தூண்டும் செயலாகக் கருதவில்லை என்று தெரிவித்துள்ளார் பைடன்.

இது வழக்கமாக நடக்கும் செயல் தான் என்று தங்கள் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறியுள்ளார் அவர்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை மீறாமல், பாலிஸ்டிக் வகையைச் சேராத ஏவுகணைகளை வட கொரியா சமீபத்தில் சோதனை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகள் மேற்கொண்டுள்ள கூட்டு ராணுவப் பயிற்சியை வடகொரியா விமர்சனம் செய்த அடுத்த நாளே இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது.

ஜோ பைடன் அரசு பதவி ஏற்ற பின்பு வடகொரியாவுடன் வெளியுறவுத் தொடர்புகளை புதுப்பிக்கும் முயற்சியை அமெரிக்க அரசு தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

முதலில் அமெரிக்க ஊடகங்களில் வெளியான இந்த ஏவுகணை சோதனை குறித்த செய்திகள், பின்பு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வட கொரியாவின் ஆன்கோன் எனும் பகுதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அன்று மஞ்சள் கடலில் இரண்டு சிறிய ஏவுகணைகள் ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

இது குறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன, "இதனால் எதுவும் மாறவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், EPA

"அமெரிக்க பாதுகாப்புத் துறை இதை ஒரு தூண்டுதலாகக் கருதவில்லை. இது வழக்கமாக நடக்கும் செயல்தான்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அச்சுறுத்தும் வகையில் இருக்கக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்வதில் இருந்தே வடகொரியாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளும் வடகொரியாவின் இந்த பாதுகாப்பு இந்த ஏவுகணை சோதனையை வழக்கமான ராணுவ நடவடிக்கை என்று தெரிவித்துள்ளனர்.

வடகொரியா மீதான கொள்கையின் மறு ஆய்வு தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ள அவர்கள், இதுதொடர்பாக ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களிடம் விரைவில் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக வடகொரியாவுடன் வெளியுறவுத் தொடர்புகளை மேற்கொள்ள கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து முயற்சித்து வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் புதிய அதிபராக பைடன் பதவியேற்ற பிறகு, அவரது தலைமையை அங்கீகரிக்கும் வகையில் வட கொரிய அரசு எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

வட கொரியா, தனது கடந்த காலங்களில் நடத்திய அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைக சோதனைகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு நல்ல நிலையில் இல்லை.

அமெரிக்கா ஏன் கவலைப்படவில்லை?லாரா பிக்கர், பிபிசி செய்தியாளர், தென்கொரியாவில் இருந்து

வட கொரியாவின் ஆயுத சோதனை ஒவ்வொன்றும் அதன் ராணுவ திறன்களை மேம்படுத்த உதவும்.

இத்தகைய சோதனைகள் சர்வதேச சமூகத்திற்கு எப்பொழுதுமே கவலையாகத்தான் இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் சிறிய வகை ஏவுகணைகளை பரிசோதிப்பது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியா மீது விதித்துள்ள தடைகளை மீறும் வகையில் இல்லை.

புதிய அரசை எதிர்க்க வேண்டுமானால் வடகொரியாவின் இதைவிட திறன் மிகுந்த ஆயுதங்கள் உள்ளன.

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் இடையே நடைபெற்ற மூன்று உச்சி மாநாடுகள் ஆகியவை இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க வில்லை. பல்லாண்டுகளாக வடகொரியா மீது விதிக்கப்பட்ட தடைகளையும் அவை நீக்கவில்லை.

இந்த உச்சி மாநாடுகள் பெரிய மற்றும் அணு ஆயுதங்களை வடகொரியா மேம்படுத்துவதையும் தடுக்கவில்லை. எனவே சமீபத்திய ஆயுத சோதனையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: