சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்கும் எவர் கிவன் கப்பல்: ஆப்ரிக்காவை சுற்றிப் போகும் சரக்கு கப்பல்கள்

Suez Canal: Effort to refloat wedged container ship continues

பட மூலாதாரம், Reuters

எகிப்தின் சூயஸ் கால்வாயின் குறுக்கே தரைதட்டி நிற்கும் மிகப்பெரிய சரக்கு கப்பலை மீண்டும் மிதக்க வைக்க, சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன.

எனினும் இந்த முயற்சிகளில் சிறிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள சூயஸ் கால்வாய் அதிகாரிகள், ஞாயிறு வரை 18 மீட்டர் ஆழத்தில், 27,000 கியூபிக் மீட்டர் அளவு மணல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

அந்தப் படகை மீண்டும் மிதக்க வைக்க சாதகமான நேரமாக உள்ளூர் நேரப்படி திங்கள் காலை 11:42 மணியும், செவ்வாய் நள்ளிரவுக்கு பின் 00:08 மணியும் இருக்குமென சூயஸ் கால்வாய் ஆணையம் தெரிவிக்கிறது. இந்த நேரங்களில் கடல் அலைகளின் வேகம் அதிகமாக இருக்கும்.

கப்பலுக்கு அடியில் பெரும் அளவிலான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சூயஸ் கால்வாய் ஆணைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.

சரக்கு போக்குவரத்து பாதைகளில் உலகன் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் சூயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) முதல் எவர் கிவன் என்ற மிகப்பெரிய சரக்குக் கப்பல் தரைதட்டி நிற்கிறது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, எவர் கிவன் கப்பலின் இரண்டு பக்கங்களிலும் 369 கப்பல்கள் காத்திருக்கின்றன. இதனால் உலகளவில் சரக்குப் போக்குவரத்து கணிசமாகத் தடைபட்டுள்ளது.

சில சரக்கு கப்பல்கள் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கே உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி தங்களது பயணத்தை தொடர்ந்து வருகின்றன.

திரும்பி நின்ற எவர் கிவன் கப்பல்

சனிக்கிழமை மட்டும் சுமார் 20,000 டன் மணல் எவர் கிவன் கப்பலை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

அந்த கப்பலை மீண்டும் மிதக்க வைப்பதற்காக 14 இழுவைப்படகுகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

வலுவான அலைகள் மற்றும் வேகமான காற்று ஆகியவற்றின் காரணமாக கப்பலை மீண்டும் மிதக்க வைக்கும் முயற்சிகள் முழுவதும் வெற்றி பெறவில்லை. எனினும், இழுவைப் படகுகள் மூலம் இழுத்தும் தள்ளியும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் ஏற்கனவே தரைதட்டி நின்ற கோணத்திலிருந்து தற்போது 30 டிகிரி கோணத்தில் திரும்பி நிற்கிறது எவர் கிவன் கப்பல்.

இந்த வெற்றி சிறியது என்றாலும் இதை இழுவைப் படகுகளில் இருக்கும் ஊழியர்கள், அவற்றின் ஹாரன்கள் மூலம் ஒலி எழுப்பிக் கொண்டாடும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

சூயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைவர் ஜெனரல் ஒசாமா ரேபி, கப்பலுக்கு அடியில் நீர் பாயத் தொடங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எவர் கிவன் கப்பல் எந்த நேரம் வேண்டுமானாலும் நகர்ந்து மீண்டும் மிதக்கத் தொடங்கலாம் என்றும் சனிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

மாற்று வழி என்ன?

சுமார் 2,20,000 டன் மொத்த எடையுள்ள அந்தக் கப்பலில் தற்போது 18,300 மிகப்பெரிய சரக்கு பெட்டகங்கள் உள்ளன.

கப்பலின் ஒட்டுமொத்த எடையைக் குறைப்பதற்காக இந்த பெட்டகங்களை இறக்க வேண்டிய தேவை ஏற்படாது என்று தாம் நம்புவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஒருவேளை இழுவைப் படகுகள் மற்றும் தூர் வாரும் முயற்சிகளால் கப்பல் மீண்டும் மிதக்கவில்லை என்றால் சில பெட்டகங்களை இறக்க வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அவ்வாறு இயக்க மிகப்பெரிய பளுதூக்கிகள், கரைக்குக் கொண்டு செல்ல வேறு கப்பல்கள் மற்றும் சிறப்புக் கருவிகள் தேவைப்படும். இது நேரத்தை இன்னும் அதிகமாக்கும்.

முன்னதாக , சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தோல்வி அடைந்தால் கூடுதலாக இழுவைப் படகுகள் வரவழைக்கப்படும் என்று சூயஸ் கால்வாய் அலுவலர்கள் தெரிவித்திருந்தனர்.

எவர் கிவன்கப்பல் தரைதட்ட உண்மையான காரணம் என்ன?

வேகமான காற்று மற்றும் மணல் புயலால் மறைக்கப்பட்ட பார்க்கும் திறன் ஆகியவற்றால் 400 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சூயஸ் கால்வாயில் செவ்வாயன்று தரைதட்டியதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவித்தன

ஆனால் இந்த கப்பல் தரை தட்டியதற்கு வானிலை முக்கியக் காரணமல்ல என்று ஜெனரல் ஒசாமா ரேபி தெரிவித்துள்ளார்.

"இது தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித பிழைகள் காரணமாக நடந்து இருக்கலாம். விசாரணையில் இதற்கான முழுமையான காரணம் தெரியவரும்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் என்ன விதமான தொழில்நுட்ப கோளாறுகள் அல்லது மனித பிழைகள் என்பது தொடர்பான விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

சூயஸ் கால்வாய் உலக பொருளாதாரத்துக்கு ஏன் முக்கியமானது?

உலகளாவிய வர்த்தக சரக்குகளின் சுமார் 12% சூயஸ் கால்வாய் வழியாகவே செல்கிறது, இது மத்தியதரைக் கடலைச் செங்கடலுடன் இணைக்கிறது மற்றும் ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான குறுகிய தூரமுள்ள கடல் வழியாகவும் உள்ளது.

சூயஸ் கால்வாய்க்கு மாற்று வழியாக ஆசியா - ஐரோப்பா இடையே பயணிக்க வேண்டுமானால் ஆப்ரிக்க கண்டத்தின் தெற்கு முனையான நன்னம்பிக்கை முனையைச் சுற்றித்தான் செல்ல வேண்டும்.

ஆனால் அதற்கு சுமார் இரண்டு வார காலம் கூடுதல் நேரம் தேவைப்படும். அதற்கேற்ப எரிபொருள், உணவுக் கையிருப்பு ஆகியவையும் அதிகமாகும்.

2020ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 19,000 கப்பல்கள் இக்கால்வாய் வழியாக சென்றன. அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 51.5 கப்பல்கள் என்று சூயஸ் கால்வாய் ஆணையம் குறிப்பிடுகிறது.

2017ஆம் ஆண்டில், ஜப்பானிய கொள்கலன் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக இக்கால்வாயில் சிக்கியது. எகிப்திய அதிகாரிகள் இழுபறிப் படகுகளின் உதவியோடு சில மணி நேரங்களுக்குள் மீண்டும் அதை மிதக்க வைத்தனர்.

சூயஸ் கால்வாய் மத்திய தரைக்கடல் மற்றும் செங்கடலுக்கு இடையிலான ஒரு பகுதியான சூயஸ் இஸ்த்மஸை எகிப்தில் கடக்கிறது. இந்தக் கால்வாய் 193 கி.மீ (120 மைல்) நீளம் கொண்டது மற்றும் மூன்று இயற்கை ஏரிகளை உள்ளடக்கியது.

2015ஆம் ஆண்டில், எகிப்து அரசாங்கம் கால்வாயை விரிவாக்கம் செய்தது. இது பிரதான நீர்வழிப்பாதையை ஆழப்படுத்தியதுடன், அதற்கு இணையாக 35 கி.மீ (22 மைல்) தடத்தையும் கப்பல்களுக்கு வழங்கியது.

எவர் கிவன் கப்பல் பற்றிய முக்கியத் தகவல்கள்

சீனாவிலிருந்து நெதர்லாந்தில் உள்ள துறைமுக நகரமான ரோட்டர்டாமிற்குப் புறப்பட்டு, மத்தியதரைக் கடலுக்குச் செல்லும் வழியில் கால்வாய் வழியாக வடக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எவர் கிவன் கப்பல் தரை தட்டியது..

செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (05:40 GMT) சுமார் 07:40 மணிக்கு நீர்வழியின் குறுக்கே மாட்டிக்கொண்டது.

20,000 கொள்கலன்களைக் கொண்டு செல்லும் திறன் இந்த கப்பலுக்கு உள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தைவானை சேர்ந்த எவர் கிரீன் மரைன் எனும் நிறுவனத்தால் இயக்கப்படும் எவர் கிவன் கப்பல் ஜப்பானைச் சேர்ந்த ஷோயி கிசென் எனும் நிறுவனத்துக்குச் சொந்தமானது. 2018ஆம் ஆண்டில் கட்டப்பட்டு, பனாமாவில் இந்தக் கப்பல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஷோயி கிசென் நிறுவனத்தின் தலைவர் யுகிடோ ஹிகாகி இந்த கப்பல் சேதம் அடைந்ததாக தெரியவில்லை என்று வெள்ளிக்கிழமை என்று தெரிவித்தார்.

"இந்த கப்பலுக்குள் நீர் புகவில்லை. இது மீண்டும் மிதக்கத் தொடங்கும்போது வழக்கம்போல இயங்கும்," என்று அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: