மலேசியாவில் பாலர் பள்ளி மாணவனை தூக்கி வீசிய ஆசிரியை கைது

மலேசியாவில் பாலர் பள்ளி மாணவனை தூக்கி வீசிய ஆசிரியை கைது

பட மூலாதாரம், Andrey Zhuravlev via getty images

படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

பாலர் பள்ளி மாணவன் ஒருவனை ஆசிரியை கோபத்துடன் அப்படியே தூக்கி வீசிய சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான காணொளிப் பதிவு சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் ஷா ஆலம் பகுதியில் அமைந்துள்ள பாலர் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அக்குறிப்பிட்ட வகுப்பு நடவடிக்கை ஒன்றுக்காக மாணவர்களை வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார். சில குழந்தைகள் ஆசிரியை சொன்னபடி வரிசையில் நிற்க, ஒரு சிறுவன் மட்டும் தரையில் அமர்ந்தபடி இருந்துள்ளான்.

இதனால் கடும் கோபமடைந்த ஆசிரியை சீக்கிரமாக வரிசையில் நிற்குமாறு கூறியுள்ளார்.

அதன்பிறகு திடீரென பொறுமையிழக்கும் அவர் வேகமாக வந்து தரையில் அமர்ந்திருக்கும் அந்த மாணவனை அப்படியே தூக்கி வேகமாக முன் நோக்கி வீசுகிறார். அவர் இரண்டு முறை இவ்வாறு செய்தது தெரிய வந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான ஒரு காணொளி நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. சிறுவன் தூக்கி வீசப்படுவதைக் கண்டு இணையவாசிகள் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்தனர். அதிலும் பாலர் பள்ளி ஆசிரியை இவ்வாறு பொறுமையிழந்து செயல்பட்டிருப்பதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தக் காணொளி வெளியானதை அடுத்து சம்பந்தப்பட்ட மாணவனின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், அவர் மீது சிறார் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Screenshot

வெள்ளிக்கிழமை அந்த ஆசிரியை கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை உதவி ஆணையர் பகருடீன் மட் தாய்ப் தெரிவித்துள்ளார்.

அந்த ஆசிரியை பாலர் பள்ளியில் நிரந்தர ஊழியராகப் பணியாற்றி வருவதாகவும் குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகார் தொடர்பாக விசாரணை நீடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தை தூக்கி வீசப்படும் காட்சி தொடர்பான காணொளி 10 நொடிகள் மட்டுமே நீடிக்கிறது. தரையில் அமர்ந்திருக்கும் மாணவனை நோக்கி அந்த ஆசிரியை கோபமாக சத்தம் போடுகிறார். பின்னர் அந்த மாணவன் தூக்கி வீசப்படுவதை வகுப்பில் உள்ள மற்ற குழந்தைகள் மிரட்சியுடன் பார்ப்பது காணொளியில் பதிவாகி உள்ளது.

அந்த வகுப்பறையில் மற்றொரு பெண்மணியும் காணப்படுகிறார். ஆனால், அவர் சக ஆசிரியையின் கோபமான செயல்பாட்டைக் கண்டுகொள்ளவோ தடுக்க முற்படவோ இல்லை.

இந்த மோசமான சம்பவத்தை அடுத்து பாலர் பள்ளிகள் மற்றும் காப்பகங்களுக்கான விதிமுறைகள் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என மலேசிய அரசு தெரிவித்துள்ளது.

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டுத் துறையின் துணை அமைச்சர் சித்தி சைலா முகம்மட் ஹூசுப் செய்தியாளர்களிடம் பேசுகையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே மறு ஆய்வு நடவடிக்கையின் நோக்கம் என்றார்.

நடந்துள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரைண நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: