அபோபிஸ் விண்கல் - நெருங்கி வந்த ஆபத்து; அடுத்த 100 ஆண்டுகளுக்கு கவலை இல்லை என கூறிய நாசா

விண்கல்

பட மூலாதாரம், NASA

ஒரு பெரிய எரிகல் புவியைத் தாக்கலாம் என பல ஆண்டுகளாக பயந்து கொண்டிருந்த நாம் (புவியில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்), இனி நிம்மதியாக வாழலாம்.

குறைந்தபட்சம் அடுத்த 100 ஆண்டுகளுக்கு அப்பெரிய விண்கல் புவியைத் தாக்காது என அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கூறியுள்ளது.

நாசா கடந்த 2004-ம் ஆண்டு `அபோபிஸ்` என்கிற விண்கல்லைக் கண்டுபிடித்தது. அந்த எரிகல் மிகவும் ஆபத்தானது எனக் கருதப்பட்டது.

அந்த விண்கல் 2029-ம் ஆண்டு மற்றும் 2036-ம் ஆண்டுகளில் புவியைத் தாக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருந்தது. அவை எல்லாமே புறந்தள்ளப்பட்டு, 2068-ம் ஆண்டு புவியைத் தாக்கலாம் எனக் கருதப்பட்டது.

ஆனால் தற்போது, அந்த விண்கல் தொடர்பான புதிய ஆய்வுகளின் அடிப்படையில் அக்கணிப்பையும் நிராகரித்து இருக்கிறது நாசா.

"இனி 2068-ம் ஆண்டு புவியைத் தாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எங்கள் கணக்கீடுகள் அடுத்த 100 ஆண்டுகளுக்கு ஆபத்து ஏதும் இருப்பதாகக் காட்டவில்லை" என நாசாவுக்காக புவிக்கு அருகில் இருக்கும் பொருட்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொள்ளும் டேவிடே ஃபர்நோச்சியா கடந்த வெள்ளிக்கிழமை தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

'அபோபிஸ்' என்கிற சொல் எகிப்திய கடவுளைக் குறிக்கிறது. 340 மீட்டர் பரப்பைக் கொண்ட இந்த விண்கல்லின் நீளம் பிரிட்டனின் மூன்று கால்பந்து மைதான அளவு கொண்டது.

இந்த விண்கல் கடந்த மார்ச் 5-ம் தேதி புவிக்கு அருகில், 10 மில்லியன் மைல் தொலைவுக்குள் பறந்து சென்றது.

இந்த விண்கல் சூரியனைச் சுற்றிவரும் சுற்றுவட்டப்பாதை தொடர்பான கணிப்புகளை மறு பரிசீலனை செய்ய, வானியல் ஆய்வாளர்கள் ரேடார் கண்காணிப்பைப் பயன்படுத்துகின்றனர். இதனைப் பயன்படுத்திய பின் அபோபிஸ் எரிகல் 2068-ம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகும் புவியைத் தாக்கும் என்கிற கணிப்பைப் புறந்தள்ளி இருக்கிறார்கள்.

"என் கல்லூரி படிப்புக்குப் பிறகு எரிகல் தொடர்பாக பணியாற்றத் தொடங்கிய போது, அபோபிஸ் ஒரு ஆபத்தான எரிகல்லாகப் பார்க்கப்பட்டது" என்கிறார் ஃபர்நோச்சியா. "அபோபிஸை ஆபத்தானவைகள் பட்டியலில் இருந்து நீக்கியது ஒரு வித திருப்தியைக் கொடுக்கிறது" என்கிறார்.

இதுவரை இல்லாத அளவுக்கு குளோஸ் அப்

பட மூலாதாரம், NASA

இந்த எரிகல் 2029 ஏப்ரல் 13-ம் தேதி இதுவரை இல்லாத அளவுக்கு புவிக்கு மிக அருகில் வரும் எனக் கூறுகிறார். அந்த தேதியில் அபோபிஸ் விண்கல், உலகின் பரப்பிலிருந்து 32,000 கிலோமீட்டர் தொலைவில் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையில் இருக்கும் தொலைவில் பத்தில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

2029-ம் ஆண்டு அபோபிஸ் புவிக்கு மிக அருகில் வரும் போது, பூமியின் கிழக்குப் பகுதியில் இருக்கும் ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் எரிகல்லைக் கண்காணிப்பவர்களின் கண்களுக்குத் தெரியும்.

இந்த விண்ல்லைக் காண தொலைநோக்கிகள் தேவை இல்லை. அந்த நேரத்தில் எடுக்கப்படும் ரேடார் படங்கள், நல்ல ரெசல்யூஷன்களைக் கொண்டதாக இருக்கும் என நாசா கூறியுள்ளது.

"இந்த ரேடார் அளவுக்கு வலிமையான தொலைநோக்கிகள் இருந்தால், லாஸ் ஏஞ்சலஸில் அமர்ந்து கொண்டு, நியூயார்க் நகரத்தில் இருக்கும் உணவகத்தின் உணவு விலைப் பட்டியலைப் படித்துவிடலாம்" என்கிறார் நாஸா விஞ்ஞானி மரினா ப்ரொசோவிக்.

மூன்று ஆபத்தான விண்கற்கள்

பூமிக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய விண்கற்கள் குறித்து நாசா கண்காணித்து வருகிறது. அந்த வகையில் மூன்று ஆபத்தான விண்கற்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. 1950DA, 2010RF12, 2012HG2 என அந்த மூன்று விண்கற்களுக்கு பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: