மோதியின் வங்கதேச பயணமும் 12 உயிர் பலியும் - ஏன் வெடித்தது வன்முறை?

  • அன்பரசன் எத்திராஜன்
  • பிபிசி நியூஸ்
வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதியைப் பொறுத்தவரை, உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி, எப்போதுமே அவர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக அறியப்படுகிறார். இந்தியாவில் மோதி தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு தலைமை தாங்குவது இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சி. அவரது அரசு, முஸ்லிம் சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் கொள்கைகளை கடைப்பிடிப்பதாகவும் அவர்களுக்கு எதிரான வன்முறையை ஒடுக்க போதுமான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் அடிக்கடி ஆளாகும். ஆனால், பாரதிய ஜனதா கட்சியோ அந்த குற்றச்சாட்டை மறுத்து வரும்.

அத்தகைய விவாதத்துக்குரிய மோதியின் மதிப்பு, வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அவர் பயணம் மேற்கொண்டபோது அங்கு போராட்டத்தில் ஈடுபட சிலரை தூண்டியது. அதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை வங்கதேசம் மட்டுமின்றி இந்தியாவுக்கும் தர்மசங்கடமான நிலையை சந்தேகத்துக்கிடமின்றி உருவாக்கியது எனலாம். மேலும், இத்தனைக்குப் பிறகும் இந்தியா, வங்கதேசம் இடையே இணக்கமான உறவு எப்படி தொடருகிறது என்ற விவாதமும் தூண்டப்பட்டிருக்கிறது.

வங்கதேசத்தில் என்ன நடந்தது?

வங்கதேச சுதந்திர தினத்தையொட்டி டாக்காவுக்கு கடந்த 26ஆம் தேதி வந்தார் பிரதமர் நரேந்திர மோதி. அன்றைய தினம், வங்கதேசத்தின் நிறுவனரும் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் பிறந்தநாளும் வந்தது.

இதையொட்டி நடந்த வரலாற்றுபூர்வ நிகழ்வில் மாலத்தீவு, இலங்கை, பூடான், நேபாளம் ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் 10 நாட்களுக்கு உத்தேசிக்கப்பட்ட அந்த நிகழ்வு, தீவிரமான போராட்டங்களால் வெகுவாக குறைக்கப்பட்டது.

தலைநகரில் உள்ள மசூதியில் மார்ச் 26ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு ஒரு பிரிவு முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், விரைவாகவே அங்கு திரண்ட கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளையும் வீச நேர்ந்தது.

இந்த சம்பவம், நாட்டின் பிற பகுதிகளிலும் போராட்டங்கள் தீவிரமடைய காரணமானது. இதன் தொடர்ச்சியாக கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான ஹெஃபாஸாத் இ இஸ்லாம், மோதியின் வருகைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது நடந்த தாக்குதலைக் கண்டித்து தேசிய அளவிலான கடையடைப்புக்கு மார்ச் 28ஆம் தேதி அழைப்பு விடுத்தது.

முன்னதாக, பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி பொதுமக்கள் தாக்கியதையடுத்து, அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளையும் துப்பாக்கி சூட்டின்போது ரப்பர் தோட்டங்களையும் காவல்துறையினர் பயன்படுத்தினர்.

நடந்த சம்பவத்தில் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டது டாக்கா மற்றும் பிரம்மன்பாரியா என்ற கிழக்கு மாவட்ட பகுதிதான். பேருந்துகள், ஒரு ரயில், ஒரு இந்து ஆலயம் மற்றும் அரசுக்கு சொந்தமான சில சொத்துகள் சேதம் அடைந்தன. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த பலரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பட மூலாதாரம், Salim parvez

"ஊர்வலங்களில் ஈடுபட்ட மதரஸா மாணவர்கள் மீது பாதுகாப்பு படையினரும் அவாமி லீக் கட்சித்தொண்டர்களும் தாக்குதல் நடத்தினார்கள். அதுவே மோதலுக்கு வழிவகுத்தது. ஆனால், ஆயுதமில்லாத அந்த மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்திருக்க வேண்டியதில்லை," என்று ஹெஃபாஸாத் குழுவின் துணைத் தலைவர் டாக்டர் அஹ்மத் அப்துல் காதர் பிபிசியிடம் கூறினார்.

இதுவரை 12 பேர் உயிரிழந்து விட்டதாக அதிகாரிகள் கூறினாலும், இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்கிறது இஸ்லாமியவாத குழு.

"வங்கதேசம் ஒரு ஜனநாயக நாடு. எவருக்கும் மனதில் தோன்றியதை பேச உரிமை உண்டு. ஆனால், சட்டத்தை அவர்கள் (போராட்டக்காரர்கள்) கையில் எடுத்துக் கொள்ள முடியாது," என்று பிபிசியிடம் கூறினார் வங்கதேச சட்ட அமைச்சர் அனிசுல் ஹக்.

அவர்கள் வரம்பு மீறி செயல்பட்டனர். நாட்டு மக்களை பாதுகாக்கவும் சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் சட்ட அமலாக்க அமைப்புகள் தலையிட வேண்டிய அவசியம் எழுந்தது என்றும் கூறுகிறார் ஹக்.

எதற்காக இந்த போராட்டம்?

பட மூலாதாரம், Getty Images

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள இஸ்லாமிய மத பள்ளிகளான மதரஸாவில் படிக்கும் மாணவர்கள் மற்றும் இஸ்லாமியவாதிகள் இடம்பெற்ற இடதுசாரி குழுக்களால் இந்த போராட்டம் வழிநடத்தப்பட்டது. மோதியின் வங்கதேச வருகைக்கு எதிராக அவர்கள் இருந்தனர். முஸ்லிம்களுக்கு எதிரான கொள்கைகளை மோதி கடைப்பிடிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில், ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்தவர்களும் ஆளும் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலரும் கூட, வன்முறையின்போது பாதுகாப்புப் படையினரால் போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.

நடந்த சம்பவத்தில் போராட்டக்காரர்களுக்கு நீதி கேட்டு பொதுவெளியில் அறிக்கை வெளியிட நாட்டின் தலைசிறந்த பிரபலங்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை நடந்த சம்பவம் தூண்டியது.

இந்தியா, வங்கதேசம் இடையே நல்லுறவுகள் உள்ளபோதும், வங்கதேசத்தின் ஒரு பிரிவு மக்களிடையே இந்தியாவுக்கு எதிரான உணர்வு நீரு பூத்த நெருப்பாக எப்போதுமே இருந்து வருகிறது.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அந்த இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள், மோதிக்கு எதிரான உணர்வாக தீவிரமானது என்று பிபிசியிடம் கூறினார் ஷிரீன் ஹக் என்ற பெண்ணுரிமை செயல்பாட்டாளர்.

போராட்டக்காரர்கள் இந்தியாவுக்கோ இந்தியர்களுக்கோ எதிரானவர்கள் அல்ல. அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படும் மோதிக்கு வங்கதேச அரசு விடுத்த அழைப்புக்கே எதிராக இருந்தார்கள் என்கிறார் ஷிரீன்.

"வங்கதேச அரசு இந்திய குடியரசு தலைவரை கூட அழைத்திருக்கலாம். அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும். ஆனால், அரசு மோதியை அழைத்த காரணத்தை நியாயப்படுத்தியது," என்கிறார் அவர்.

ஆனால், "ஒன்பது மாதங்கள் நடந்த விடுதலைப்போரில் வங்கதேசத்துக்கு துணையாக நின்ற இந்தியாவில் இருந்து எவராவது அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரசும் நாட்டு மக்களும் விரும்பினர்," என்று ஹக் தெரிவித்தார்.

இரு தரப்பு உறவுகளை பாதித்ததா வன்முறை?

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவும், வங்கதேசமும் சிறந்த நல்லுறவை வரலாற்று ரீதியாகவே கொண்டிருக்கின்றன.

வங்கதேசம் முன்பு கிழக்கு பாகிஸ்தான் என அழைக்கப்பட்டது. 1947இல் ஆங்கிலேயர்கள் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதியை இந்தியாவாகவும் முஸ்லிம்கள் அதிகம் உள்ள பகுதியை பாகிஸ்தானாகவும் பிரித்தபோது வங்கதேசம் பாகிஸ்தானின் அங்கமானது.

ஆனால், பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெற வங்கதேசத்துக்கு உதவியாக இந்திய ராணுவ இருந்ததால் 1971இல் அந்நாடு தனி நாடானது.

ஆனால், இந்தியாவில் அதிகாரத்துக்கு பாரதிய ஜனதா கட்சி வந்த பிறகு பிரச்னைகள் சிக்கலாயின.

சமீபத்திய மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில தேர்தல்களின்போது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள், அடிக்கடி வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறியவர்கள் விவகாரத்தை எழுப்பினார்கள். ஆனால், அவர்கள் சுமத்திய குற்றச்சாட்டை வங்கதேசம் தொடர்ச்சியாக நிராகரித்து வருகிறது.

2019ஆம் ஆண்டு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தியாவுக்குள் ஊடுருவும் நபர்கள் ஒவ்வொருவரையும் பிடித்து வங்காள விரிகுடாவில் வீசுவோம் என்றார்.

அமித் ஷாவின் கருத்துகளை, வலதுசாரி குழுக்களில் உள்ளவர்களும் வங்கதேசத்தில் உள்ளவர்களும் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால், தொடர்ச்சியாக வங்கதேசத்தில் இருந்து முஸ்லிம் குடியேறிகள் சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வருவதாக இந்தியாவில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் முன்வைத்த பரப்புரை டாக்காவில் உள்ள மக்களிடையே ஒருவித சீற்றத்தை ஏற்படுத்தியது. அடிப்படையில் இந்தியா சார்பாளராக வங்கசேத்தில் அறியப்படும் ஷேக் ஹசீனாவின் நிர்வாகம், இதன் காரணமாக அழுத்தத்தில் உள்ளது.

2019ஆம் ஆண்டில், மோதி அரசு விவாதத்துக்குரிய குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது. அதன் மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான ஒடுக்குமுறையால் தப்பித்து இந்தியாவில் தஞ்சம் அடைவோருக்கு அடைக்கலம் தர வகை செய்யப்பட்டது. ஆனால், அந்த சட்ட மசோதாவில் முஸ்லிம்கள் அடைக்கலம் கோரலாம் என பொருள்படவில்லை.

அந்த வகையில், இந்திய அரசு நிறைவேற்றிய குடிமக்கள் திருத்தச்சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது. இதனால், அது இந்தியாவில் உள்ள எதிர்கட்சிகளால் தீவிர விமர்சனத்துக்கு ஆளானது.

இந்தியாவின் அந்த சட்டம், வங்கதேசத்தையும் ஆச்சரியப்படுத்தியது. இதையடுத்து ஷேக் ஹசீனா, மத ரீதியிலான ஒடுக்குமுறையால் சிறுபான்மையினர் வங்கதேசத்தை விட்டு வெளியேறுவதாக கூறப்படுவதை மறுத்தார். 160 மில்லியனுக்கும் அதிகமானோர் வாழும் வங்கதேசத்தில் 8 சதவீதத்தினர் மட்டுமே இந்துக்கள்.

இந்தியாவின் குடிமக்கள் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்ஆர்சி ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக ஒரு கட்டத்தில் உள்நாட்டு அழுத்தம் அதிகரித்ததால், தமது நாட்டில் இருந்து இந்தியாவுக்கு செல்லவிருந்த ராஜீய அதிகாரிகளின் பயண திட்டங்களை வங்கதேச அரசு ரத்து செய்தது.

அஸ்ஸாமில் மேற்கொள்ளப்பட்ட இறுதி தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சுமார் இருபது லட்சம் பேர் மட்டுமே தாங்கள் வங்கதேசத்தில் இருந்து அனுமதியின்றி வரவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆவணங்கள் இல்லாதவர்கள் என அரியப்பட்டனர். அத்தகையோரில் உள்ள முஸ்லிம்களை வங்கதேசத்துக்கே நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவில் உள்ள கடும்போக்கு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோரி வருகிறார்கள்.

சேலையில் பாய்ந்த முள் போல இரு தரப்பு உறவை மேலும் சிக்கலாக்கியது, எல்லையில் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட வங்கதேச குடிமக்கள் சம்பவம். வங்கதேசத்தில் உள்ள வலதுசாரி குழுக்கள், 2011ஆம் ஆண்டு முதல் அதுபோல 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகின்றன. எல்லை துப்பாக்கி சூடு சம்பவங்கள் வங்கதேசத்தில் விரிவான கோப உணர்வை மக்களிடையே தூண்டுவதாகவும் பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், SALIM PARVEZ

ஆனால், இந்திய அதிகாரிகளோ பெரும்பாலும் கொல்லப்படுபவர்கள் குற்றச்செயல் குழுக்களைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் என்கின்றனர். அத்தகைய கொலைகள் நடக்காது என இந்திய அரசு உறுதியளித்த பிறகும் துப்பாக்கி சூடுகள் தொடருவதாக செயல்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தியா, வங்கதேச உறவு என வரும்போது அது எப்போதும் ஒரு வழியாகவே உள்ளது. இந்தியாவுக்கு வங்கதேசம் ஏராளமான சலுகைகளை வழங்கியிருக்கிறது. ஆனாலும் இந்தியா அதுபோல எதையும் திருப்பித்தரவில்லை. இப்போதும் கூட இரு நாட்டுக்கு இடையிலான நதி நீர்ப்பங்கீடு போன்ற பல பிரச்னைகள் தீர்க்கப்படாமலேயே உள்ளன என்கிறார் ஹக்.

இந்தியாவும், வங்கதேசமும் ஒரு நதியை தவிர 54 நதிகளை பகிர்கின்றன. அந்த 54 நதிகளும் இந்தியாவில் தொடங்கி வங்காள விரிகுடாவில் கலக்கும் முன்பாக வங்கதேசத்தில் பாய்ந்தோடுபவை. எனவே, அந்த நதி நீரை ஒழுங்குமுறைப்படுத்தும் கட்டுப்பாடு இந்தியாவிடமே உள்ளது. ஆனால், கங்கை நதி நீங்கலாக வேறு எந்த நதிநீர்ப் பகிர்வு தொடர்பான உடன்பாட்டிலும் இரு நாடுகளும் இதுவரை கையெழுத்திடவில்லை. இது வங்கதேசத்தவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

வங்கதேசத்துடன் நல்லுறவை பேணுவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியம். குறிப்பாக, பல்வேறு பிரிவினை குழுக்கள் இயங்கி வரும் வடகிழக்கு பிராந்தியத்தில் நிலைமையை சமாளிக்க அது அவசியம். ஏற்கெனவே பல குழுக்கள், வங்கதேசத்தின் உதவியால் மட்டுப்படுத்தப்பட்டு விட்டன.

வங்கதேசத்துடன் எப்போதும் சிறந்த உறவை பாராட்டி வருவதாக இந்தியா பெருமைபட்டுக் கொள்ளும். பாகிஸ்தான், சீனா போன்ற தொல்லை தரும் நட்பு நாடுகளுக்கு மத்தியில் வங்கதேசத்தின் உறவு இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்பாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், வங்கதேசத்துக்கு சமீபத்தில் வருகை தந்த மோதியின் பயணத்தின்போது அங்கு பதிவான மோதிக்கு எதிரான கோபவுணர்வு, இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட ஒருவித எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. அது, நட்பு நாட்டின் உணர்வுகளை இந்தியா புரிந்து கொள்ளாமல் போனால், வங்கதேச அரசுடன் வேண்டுமானால் இந்தியா நட்புறவை பாராட்டலாம், ஆனால், அதன் குடிமக்களின் ஆதரவு இந்தியாவுக்கு கிடைக்காது என்பதை உணர்த்துவதாகவே இருக்கிறது.

காணொளிக் குறிப்பு,

கொரோனாவுக்கு பின் நரேந்திர மோதியின் முதல் வெளிநாட்டு பயணம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: