மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்: ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருக்கு திவால் நோட்டீஸ்

நஜீப் ரசாக்

பட மூலாதாரம், NurPhoto / getty images

படக்குறிப்பு,

நஜீப் ரசாக்

ஊழல் வழக்குகளையும் சிறை தண்டனையையும் எதிர்நோக்கியுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக், மேலும் ஒரு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

வருமான வரி செலுத்தவில்லை என்ற காரணத்தை முன்வைத்து அவருக்கு மலேசிய உள்நாட்டு வருமான வரி ஆணையம் திவால் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

மலேசிய அரசின் இந்த நடவடிக்கையானது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தம்மை தகுதி நீக்கம் செய்வதற்கான முயற்சி என்றும், மீண்டும் பிரதமர் பதவிக்கு தாம் போட்டியிடுவதை தடுப்பதற்கான முயற்சி என்றும் நஜீப் புகார் எழுப்பியுள்ளார்.

ஊழல் வழக்கு ஒன்றில் முன்னாள் பிரதமரான நஜீப்புக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வருமான வரியாக 1.69 பில்லியன் மலேசிய ரிங்கிட் (ஒரு ரிங்கிட் = சுமார் 18 இந்திய ரூபாய்) தொகையைச் செலுத்த வேண்டும் என்றும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தத் தொகையை செலுத்தாததை அடுத்து வருமான வரி வாரியத்தின் மூலம் மலேசிய அரசு இந்த திவால் நோட்டீசை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, 1.69 பில்லியன் மலேசிய ரிங்கிட் தொகையை ஆண்டுக்கு ஐந்து விழுக்காடு வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்பட்டுள்ளார் நஜீப். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கத் திட்டம்?

இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை திடீரென மேற்கொள்ளப்பட என்ன காரணம் என நஜீப் கேள்வி எழுப்பியுள்ளார்.

தாம் மீண்டும் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதை தடுக்கும் வண்ணம் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்று அவர் சந்தேகம் கிளப்பியுள்ளார்.

தமது அரசியல் வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் முந்தைய "பக்காத்தான் ஹராப்பான்" ஆட்சி நிர்வாகம் தம் மீது தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததாகவும், அந்த வழக்கை நடப்பு பிரதமர் மொஹிதீன் யாசின் தலைமையிலான "பெரிக்கத்தான் கூட்டணி" அரசு தொடர்வதாகவும் நஜீப் தெரிவித்துள்ளார்.

"மலேசியா இன்னொரு பொதுத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. இத்தகைய சூழலில் திவால் நோட்டீஸ் வழங்கப்படுகிறது எனில் நான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற தகுதியை இழக்க நேரிடும். மேலும் 15வது பொதுத் தேர்தலிலும், நான் சார்ந்துள்ள அம்னோ கட்சித் தேர்தலிலும் போட்டியிட இயலாது.

"பிரதமராகப் பதவி வகித்தபோது ஒவ்வோர் ஆண்டும் முறையாக வருமான வரி செலுத்தி வந்துள்ளேன். வருமான வரி வாரியத்தின் நடவடிக்கையால் பதவி இழப்பதுடன் அரசாங்கத்தில் பணியாற்றியதன் மூலம் நான் வைத்துள்ள அனைத்து சேமிப்புகளையும் இழப்பேன்.

"மேலும் வழக்கறிஞர்களுக்குரிய கட்டணத்தையும் கூட இனி என்னால் செலுத்த முடியாமல் போகும். ஒருவேளை இந்த வழக்குகளில் நான் வெற்றி பெற்றாலும் கூட என் தரப்பிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட எனது உடமைகளையும் பணத்தையும் திரும்பப் பெற இயலாது," என்று நஜீப் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மலேசியா

"நான் மீண்டும் பிரதமர் ஆவதை பெரும்பாலானோர் விரும்புகிறார்கள்"

ஊழல் வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் பிரதமரான நஜீப் மேல் முறையீடு செய்துள்ளார். அவரது மனுவின் மீதான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் ஏன் திடீரென தமக்கு திவால் நோட்டீசை வழங்க வேண்டும் என்பதே அவரது கேள்வி. இது புண்பட்ட இடத்தில் உப்பை தடவுவதற்கு இணையான நடவடிக்கை என அவர் கூறியுள்ளார்.

"எதிர்வரும் பொதுத்தேர்தலில் நான் பங்குபெறுவதைத் தடுக்கும் நோக்கத்தில் திவால் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன். அண்மையில் உத்தாரா மலேசிய பல்கலைக்கழகம் (Universiti Utara Malaysia) நடத்திய ஆய்வின் விவரங்கள் தெரிய வந்துள்ளன, " என நஜீப் ரசாக் கூறியுள்ளார்.

தாம் சௌதி அரேபியாவில் இருந்து அரசியல் நன்கொடைகளைப் பெற்றதாக கூறுகிறார் நஜீப். ஆனால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

"நன்கொடையாக பெற்ற தொகையைக் கொண்டு நாடு முழுவதும் சுமார் நான்காண்டு காலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏராளமான பள்ளிவாசல்களுக்கும் உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதற்காக 1.69 பில்லியன் மலேசிய ரிங்கிட் வருமானவரி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது அர்த்தமற்ற செயல்பாடு.

"பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வழிபாட்டுத் தலங்களுக்கும் உரிய உதவிகளும் பணமும் சென்று சேர வேண்டும் என்பதை உறுதி செய்தோம். மேலும் தேவை உள்ளவர்களுக்கு யாருடைய தலையீடும் இன்றி உதவி செய்தோம்.

"ஆனால் அரசியல் நன்கொடைகளுக்கு வரி கிடையாது என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரி விதித்துள்ளனர். எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து தொடர்ந்து போராடுவேன். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் நான் அப்பாவி என்பதையும் நிரூபிப்பேன்," என்று முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

அரசியல் குழப்பத்தால் பொதுத்தேர்தல் வர வாய்ப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மலேசிய பிரதமர் மொகிதீன் யாசின்

மலேசியாவில் கடந்த ஓராண்டாக அரசியல் களத்தில் குழப்பம் நீடித்து வருகிறது.

பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. உடனடியாக பிரதமர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திடீர் திருப்பமாக எதிர்க்கட்.சி உறுப்பினர்கள் சிலர் ஆளும் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

"கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கவே அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இது ராணுவப் புரட்சி அல்ல," என பிரதமர் மொஹிதின் யாசின் விளக்கம் அளித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் வரை அவசரநிலை நீடிக்கும் என்றும், அதற்குள் வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் பட்சத்தில் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் பிரதமர் மொஹிதின் உறுதி அளித்துள்ளார்.

இத்தகைய சூழலில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள நஜீப் மீண்டும் அரசியல் களத்தில் தம்மை முன்னிலைப்படுத்த முயற்சி செய்வது தெரிய வந்துள்ளது. மீண்டும் பிரதமர் ஆக விருப்பம் கொண்டுள்ளார் என்பதும் அவர் மூலமாகவே உறுதியாகி உள்ளது.

வரும் மே 2ஆம் தேதி வரை ஊழல் வழக்கில் பெற்றுள்ள சிறை தண்டனையை எதிர்த்து நஜீப் தொடுத்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவடைய உள்ளது. அதன் பின்னர் அவரது அரசியல் எதிர்காலம் குறித்து தெரிய வரும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: