பிரேசிலை அச்சுறுத்தும் P.1 கொரோனா - ஒரே நாளில் 4,000 மரணங்கள் - என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், EPA
தென்னமெரிக்க நாடான பிரேசிலில் முதல்முறையாக ஒரே நாளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன, சிகிச்சைக்காக பல நாள்கள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக சுகாதாரக் கட்டமைப்பை நிலைகுலைந்து போகும் சூழல் உருவாகி இருக்கிறது.
உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக உயிர்களைப் பறிகொடுத்திருக்கும் நாடு பிரேசில். இங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,37,000.
ஆனால் அதிபர் பொல்சனோரோ இன்னும் மாறவில்லை. கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் கூடாது என்று கூறிவந்தார். இன்னும் அந்த வாதங்களை அவர் விட்டுவிடவில்லை. கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பைவிட, பொதுமுடக்கத்தால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகள் அதிகம் என்கிறார் போல்சனாரோ. உள்ளூர் நிர்வாகங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார்.
உடல் பருமனும், மன அழுத்தமும் கோவிட் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று பேசினார். தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தார்.
புதன்கிழமை மட்டும் பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,195. மொத்த பாதிப்பு 1.3 கோடியைக் கடந்துவிட்டது.
பிரேசிலின் நிலை, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் உலக நாடுகளின் முயற்சிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அந்நாட்டின் நிலையைக் கண்காணித்து வரும் மிகுயேல் நிகோலெலிஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.
"ஒவ்வொரு நாளும் புதிய வகையில் உருமாற்றம் பெரும் கொரோனா வைரஸ்கள் பரவி வரும் நிலையில், பிரேசில் நிலை மட்டும் கட்டுக்குள் இருந்து விட்டால் பூமியே பாதுகாப்பாக மாறிவிடும்" என்கிறார் அவர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் 90 சதவிகித படுக்கைகள், கொரோனா பாதித்தவர்களால் நிரம்பியிருக்கிறது. பல மாநிலங்களில் ஆக்சிஸனும், மயக்க மருந்துகளும் போதிய அளவில் இல்லை. நிலை மோசமாக இருந்தாலும் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தத் தொடங்கியிருக்கின்றன.
"உண்மையில் அதிபர் பொல்சனாரோவின் கருத்து வெற்றி பெற்று விட்டது" என்கிறார் பிரேசில் சுகாதார கொள்கைகளுக்கான கல்வி அமைப்பின் மிகுயேல் லேகோ. அதிபர் பொல்சனரோவின் ஆதரவாளர்களும், தொழிலதிபர்களாலும் தங்களுக்குச் சிக்கல் ஏற்படும் என்பதால் மேயர்களும் ஆளுநர்களும் கொரோனா கட்டுப்பாடுகளை வலியுறுத்துவதில்லை என்கிறார் அவர்.
கொரோனா கட்டுப்பாடுகளைப் பற்றி மட்டுமின்றி, தடுப்பூசிகளுக்கு எதிராகவும் பேசுபவர் பொல்சனாரோ. ஆய்வில் உறுதி செய்யப்படாத சிகிச்சை முறைகளை பரிந்துரை செய்பவர் அவர்.
பிரேசில் நாட்டில் 92 கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் "P.1" எனப்படும் பிரேசில் திரிபு, மிக வேகமாகப் பரவக்கூடியது. கடந்த நவம்பர் மாதம் அமேசானோஸ் மாகாணத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், ஜனவரி மாதத்துக்குள்ளாக 73 சதவிகித பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்தது. வேறு நாடுகளுக்கும் அது பரவி வருகிறது.
பிற செய்திகள்:
- கொரோனா அச்சத்துடன் நாளை தொடங்குகிறது ஐபிஎல்: சி.எஸ்.கே. வெற்றி வாய்ப்பு எப்படி?
- திருவிழாக்களுக்கு தடை: பேருந்துகள், ஆட்டோக்களுக்கு நிபந்தனை - தமிழகத்தில் மீண்டும் கொரனோ கட்டுப்பாடுகள்
- பிரிட்டனில் உள்ள மியான்மர் தூதரகத்தில் இருந்து அந்நாட்டுத் தூதர் வெளியேற்றம்: யார் காரணம்?
- காசோலை மோசடி வழக்கில் ராதிகா, சரத்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: