மியான்மர் ராணுவ ஆட்சி: வன்முறையில் தப்பிக்க இந்தியாவுக்கு தப்பி வரும் மக்களின் துயரக் கதை

இந்த சிறுமி எல்லையில் பதுங்கி இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்
படக்குறிப்பு,

இந்த சிறுமி எல்லையில் பதுங்கி இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்

மியான்மரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடக்கும் வன்முறைகளில் இருந்து தப்புவதற்காக ஏராளமான மக்கள் இந்தியாவுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. எல்லையோரத்தில் வசிப்போர் புகலிடம் தேடி இந்தியாவுக்கு வர முயற்சிப்பதாக பிபிசி ஹிந்தி சேவை செய்தியாளர் ராகவேந்திர ராவ் தெரிவிக்கிறார்.

42 வயதான மக்காய்க்கும் இந்தியாவுக்குச் செல்லவே விருப்பம். அவரது மூன்றாவது முயற்சி இது. காடுகளும் சகதியும் நிறைந்த பாதை வழியைத் தேர்வு செய்தார். வேறு சிலர் இருபுற எல்லையைக் கடந்து செல்லும் வடிகால் வழியாக இந்தியாவுக்குள் வந்தார்கள். சூழல் முன்பு போல இல்லை. இந்த முறை மக்காய் எல்லையைத் தாண்ட முயன்ற போது இந்தியப் படையினர் அவரைத் தடுக்கவில்லை.

அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக அவரது பெயர் மாற்றப் பட்டுள்ளது. மியான்மரின் எல்லைப்புற மாவட்டமான தாமுவில் உள்ள தனது வீட்டில் இருந்து சகோதரிகள் மற்றும் மகளுடன் கடந்த மாதம் வெளியேறினார் அவர். எல்லையைக் கடந்த இந்தியாவின் வடமேற்கு மாநிலமான மணிப்பூருக்குள் அவர்கள் வந்தார்கள். அது ஒன்றே அவர்களுக்கு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியாக இருந்தது என்று மக்காய் கூறுகிறார்.

"எங்களுக்கு தப்பிப் பிழைக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது. இன்னும் கொஞ்சம் காத்திருந்தால் அப்படியொரு வாய்ப்புக் கிடைக்காமலேயே போயிருக்கும்" என்கிறார் அவர்.

பர்மா என்றும் அறியப்படும் மியான்மர் வன்முறையில் சிக்கியிருக்கிறது. கடந்த பிப்ரவரியில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை அகற்றிவிட்டு ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆங் சான் சூச்சியைக் கைது செய்தது ராணுவம். ஆட்சிக்கு எதிரான போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கியது.

இதுவரை 43 குழந்தைகள் உள்பட 600-க்கும் அதிகமானோரை ராணுவம் கொன்றுவிட்டதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளை உடைத்து உள்ளே புகுந்து வன்புணர்வு செய்து மக்களைக் கொல்வதாக மக்காய் கூறுகிறார்.

படக்குறிப்பு,

இந்தியா மற்றும் மியான்மர் எல்லை பெருந்தொற்றால் மூடப்பட்டுள்ளது

தெருக்களிலும், வீடுகளில் மக்கள் கொலை செய்யப்படுவதாக நேரில் பார்த்தவர்கள் நினைவுகூர்கிறார்கள். ஆறு வயதுச் சிறுமி தனது தந்தையை நோக்கி ஓடியபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ராணுவம் இதை மறுக்கிறது. ராணுவம் ஒரு போதும் வீடு புகுந்து குழந்தையைக் கொல்லாது. அப்படி நடந்திருந்தால் அது பற்றி விசாரிக்கப்படும் என்று ராணுவச் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஸா மின் துன் சமீபத்திய நேர்காணலின்போது தெரிவித்தார்.

ராணுவத்தின் அத்துமீறல்கள் பற்றிய தகவல்கள் பரந்துவிரிந்திருக்கின்றன. சர்வதேச அளவில் உரத்த குரல்கள் எழுப்பப்படுகின்றன.

"வன்முறை தொடங்கியது முதல் வீட்டில் இருப்பதற்குக்கூட அச்சமாக இருந்தது. இரவு நேரங்களில் காட்டுக்குள் மறைந்தபடியே கழித்தோம்" என்கிறார் மாக்காய்.

அடைக்கலம் கேட்டு வருவோரை சுமுகமாகப் பேசி திருப்பி அனுப்பிவிடும்படி எல்லையோர மாவட்டங்களுக்கு மணிப்பூர் மாநில அரசு கூறியிருந்தது. பின்னர் எதிர்ப்பு தோன்றியதால் திரும்பப் பெற்றது. காயமடைந்த அகதிகளுக்குச் சிகிச்சையளிப்பது உள்ளிட்ட "அனைத்துவகை மனிதநேய நடவடிக்கைகள்" எடுக்கப்படும் என்று அடுத்த உத்தரவில் கூறியது.

சட்டவிரோதமான குடியேற்றங்கள் என்பது இந்தியாவைப் பொருத்தவரை அரசியல் தூண்டலுக்குரிய அம்சம். அதுவும் வரலாற்றில் ஏராளமான அகதிகளை ஏற்றிருக்கும் மேற்குவங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நிலையில் இது முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தியாவுக்குள் வந்தவர்கள் உடனடியாக மியான்மருக்குத் திரும்ப விரும்பவில்லை. சூழல் மேம்பட்டால் மட்டுமே ஊருக்குச் செல்வோம் என்று மக்காயுடன் வந்திருந்த மேலும் இரு பெண்கள் பிபிசியிடம் கூறினார்கள். அவர்களது கணவர்களும் குடும்பத்தில் உள்ள பிற ஆண்களும் இன்னும் மியான்மரிலேயே இருக்கிறார

"தேவை ஏற்பட்டால் ஆண்கள் சண்டையிடுவார்கள். ராணுவம் திடீரென வீட்டின் கதவைத் தட்டினால் பெண்கள் எங்களால் என்ன செய்யமுடியும்" என்கிறார் தனது பதின்ம வயது மகளுடன் இந்தியாவுக்குள் வந்திருக்கும் வின்யி. இதுவும் மாற்றப்பட்ட பெயர்தான்.

இவர்கள் மணிப்பூர் மாநிலம் மோரே மாவட்டத்தில் உள்ள தங்களது உறவினர் வீடுகளில் தங்கியிருக்கிறார்கள். மோரே மாவட்டம் இந்திய - மியான்மர் எல்லையில் அமைந்துள்ளது. எல்லையைக் கடந்து இந்த மாவட்டதுக்கு வரும் அனைத்துப் பாதைகளும் இப்போது அடைக்கப்பட்டிருக்கின்றன.

பல ஆண்டுகளாக மியான்மருக்கும் இந்தியாவுக்கும் இடையே மக்கள் விரும்பியபடி சென்றுவர அனுமதிக்கப்பட்டனர். இரு நாட்டு எல்லைகளுக்குள் 16 கிலோ மீட்டர் தொலைவு வரை 14 நாள்கள் தங்கியிருக்க உள்ளூர் மக்களுக்கு அனுமதி உண்டு. கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் 2020-ஆம் ஆண்டு மார்ச்சில் இந்த நடைமுறை ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டில் எல்லைகள் திறக்கப்படும் என்ற மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள். ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்பு அந்த எதிர்பார்ப்புகளைச் சிதறடித்துவிட்டது.

ஆயினும் எல்லையைக் கடந்தாக வேண்டிய நிலை மியான்மர் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில நாள்தோறும் இந்தியாவுக்குள் வந்துவிட்டு மியான்மருக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

"இந்தியாவுக்குள் நுழைவது மிகவும் கடினம். பல நேரங்களில் இந்தியப் படையினர் தடுத்துவிடுவார்கள். அதைக் கடந்து நாங்கள் எப்படியாவது நுழைந்துவிடுவோம்" என்கிறார் மோரே பகுதிக்கு நாள்தோறும் வந்து பால் விற்கும் வணிகர் ஒருவர்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால் மியான்மர் ராணுவம் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. அதனால் எல்லையில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இந்தியத் தரப்பிலும் அதிக அளவிலான ராணுவம் குவிக்கப்படவில்லை. இது எல்லையைக் கடப்போருக்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

படக்குறிப்பு,

எப்போது திறந்திருக்கும் நட்புப் பாலம் இப்போது மூடப்பட்டுள்ளது

இந்தியப் பகுதிக்குள் வந்து பொருள்களை விற்கும் மியான்மர் வணிகர்கள், சேறும், புதர்களும் நிறைந்த காட்டுப் பாதையில் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பிவிடுகிறார்கள். இருநாட்டுப் படைகளும் தங்களைக் கண்டுகொள்வதில்லை என அவர்களில் பலருக்கு நம்பிக்கை இருக்கிறது.

மோரேயில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள அரசு மருத்துவமனையில் மியான்மரைச் சேர்ந்த இருவர் குண்டு காயங்களுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

"தாமு நகரில் ஒரு நகைக்கடையைச் சூறையாட மியான்மர் ராணுவ வீரர்கள் முயன்றார்கள். உள்ளூர்க்காரர்கள் அதை எதிர்த்தார்கள். ராணுவத்தின் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். என்னைக் குண்டு துளைத்தது" என்றார் சிகிச்சை பெற்று வரும் ஒருவர்.

காயம்பட்ட இரவிலேயே அவர்கள் மியான்மரில் இருந்து மோரே நகருக்குக் கொண்டு வரப்பட்டார்கள். விரைவில் நாட்டுக்குத் திரும்பிவிட வேண்டும் என்பது இவர்களது விருப்பம்.

இம்பாலில் உள்ள குக்கி மாணவர் அமைப்பினர் காயம்பட்டவர்களுக்கு உதவுகிறார்கள். வீட்டில் சமைத்துக் கொண்டுவந்து தருகிறார்கள். மோரே நகரில் உள்ள மருத்துவமனையில் குண்டு காயங்களுக்குச் சிகிச்சையளிக்கும் வசதி இல்லாததால் இம்பாலுக்கு அவர்கள் கொண்டு வரப்படுவார்கள் என்கிறார் குக்கி அணைப்பின் துணைத் தலைவர் ஜங்கோலென் கோன்சாய்.

குக்கி இனத்தவர் இந்தியா, வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகளின் எல்லையோர மலைகளில் வசிக்கும் பழங்குடிகள். எனவே அவர்களுக்கு இடையே எல்லை கடந்த உறவு உண்டு. அதனால்தான் அரசின் கட்டுப்பாடுகளையும் மீறி அகதிகளுக்கு அவர்கள் உதவி வருகிறார்கள்.

வரும் நாள்களில் மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியான்மரில் துன்பப்படுவோருக்கு இந்தியா உதவ வேண்டும் என்று மோரேயில் வசிக்கும் பலர் விரும்புகிறார்கள்.

ஆனால் மியான்மரில் இருந்து இந்தியாவுக்குள் வந்திருப்போருக்கு ஒவ்வொரு நொடியும் அச்சத்துடனேயே கழிகிறது. எப்போதும் தங்களைத் திருப்பியனுப்பி விடுவார்கள் என்ற பயம் அவர்கள் மனதில் நிறைந்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: