இந்தியாவின் அனுமதியின்றி லட்சத்தீவு அருகே பயிற்சி நடத்திய அமெரிக்கக் கடற்படை

  • ராகவேந்திர ராவ்
  • பிபிசி செய்தியாளர்
கப்பல்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஜான் பால் ஜோன்ஸ் (டி.டி.ஜி 53), லட்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலத்தில் ஒரு பயிற்சியை இந்த வாரம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி ஏப்ரல் 7 ஆம் தேதி நடந்ததாகவும் இந்தியாவிடம் முன் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது படைத்தொகுதியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடத்துவதற்குத் தனக்கு உரிமையும் சுதந்தரமும் உண்டு என்றும் அமெரிக்க தரப்பு கூறுகிறது.

ஏழாவது படைத் தொகுதி என்பது, அமெரிக்கக் கடற்படையின் மிகப் பெரிய படையாகும். மேற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகள் இதன் பொறுப்பில் அடங்கும்.

சர்வதேச சட்டத்தின் படியே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஏழாவது படைத் தொகுதியின் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலம் அல்லது துணைக்கண்டப்பகுதியில் ராணுவப்பயிற்சி அல்லது போர்ப்பயிற்சிக்கான அனுமதி பெறப்படவேண்டும் என்று சர்வதேச சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. போக்குவரத்துச் செயல்பாட்டு உரிமைப்படி, சர்வதேச சட்டத்தின் படி, உரிமை, சுதந்தரம் மற்றும் கடலின் சட்டப்படியான பயன்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் ஆதிக்கத்துக்குச் சவால் விடுவதாகவும் உள்ளது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அமெரிக்கக் கடற்படை தினந்தோறும், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அனைத்தும் சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டே இருப்பதாகவும் ஏழாவது படைத் தொகுதி கூறியுள்ளது. சர்வதேச சட்டம் அனுமதிக்கும் அனைத்து இடங்களிலும் அமெரிக்க விமானங்கள் பறக்கும், கப்பல்கள் மிதக்கும் பயிற்சிகள் நடக்கும் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்கா, விதிமுறைகளுக்கு உட்பட்டு சாதாரணமாக இந்த ஃப்ரீடம் ஆஃப் நேவிகேஷன் ஆபரேஷனை நடத்தி வருகிறது என்றும் இது முன்னரும் நடந்தது, இனியும் நடக்கும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. `ஃப்ரீடம் ஆஃப் நேவிகேஷன் ஆபரேஷன்` என்பது எந்த ஒரு நாடு சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் கருத்து தெரிவிக்கவோ அல்ல என்றும் அது விளக்கமளிக்கிறது.

இந்தியாவின் அனுமதியின்றி அந்நிய நாட்டுக் கப்பல் வரலாமா?

பட மூலாதாரம், Getty Images

ஃப்ரீடம் ஆஃப் நேவிகேஷன்(போக்குவரத்து சுதந்தரம்) சர்வதேச சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சட்டத்தில் பல நிபந்தனைகள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலப் பகுதியில், அதன் அனுமதியின்றி அந்நிய நாட்டுக் கப்பல் வரலாமா என்பது தான் இப்போது சர்ச்சையாகியுள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் தனக்கு இந்த உரிமை இருப்பதாகவும் ஆனால் இந்தியாவின் கடல்சார் சட்டம் இதை அனுமதிக்கவில்லை என்றும் அமெரிக்கா கூறுகிறது.

எந்தவொரு வெளிநாட்டுக் கப்பலும் தன் அனுமதியின்றி இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதார மண்டலம் வழியாகச் செல்ல முடியாது என்று இந்தியா கூறுகிறது.

இந்தியாவின் கருத்து

இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளது. "சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும் துணைக்கண்டப் பிராந்தியத்திலும் பிற நாடுகள் ராணுவ, ஆயுதப் பயிற்சி, குறிப்பாக, கடலோர நாட்டின் அனுமதியின்றி ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்கள் பயன்படுத்தும் பயிற்சியை மேற்கொள்ள கடல்சார் சட்டம் குறித்த ஐக்கிய நாடுகளின் சட்டம் அதிகாரம் அளிக்கவில்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு" என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

வெளியுறவு அமைச்சகம், "யுஎஸ்எஸ் ஜான் பால் ஜோன்ஸ் தொடர்ந்து பாரசீக வளைகுடாவிலிருந்து மலாக்கா ஜலசந்தி நோக்கி கண்காணிக்கப்பட்டு வந்தது. அமெரிக்க அரசாங்கத்திற்கு நாங்கள் இராஜதந்திர ரீதியாக இது குறித்த எங்கள் கவலையைத் தெரிவித்துள்ளோம்." என்றும் தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இந்தியக் கடற்படையின் ஓய்வுபெற்ற கொமடோர் சி. உதய பாஸ்கர், சொஸைட்டி ஃபார் பப்லிக் ஸ்டடீஸ்-ன் இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார். அவர், "ஐ நா-வின் கடல் சார் சட்டம் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் வெவ்வேறு விளக்கங்களை மேற்கோள் காட்டுகின்றன. இந்தப் பயிற்சியின் போது அமெரிக்கா துப்பாக்கிச் சூடு நடத்தியதா என்பதை நாம் பார்க்க வேண்டும், ஏனெனில் இந்தப் பயிற்சியின் தன்மையை இது பாதித்திருக்கக்கூடும்." என்று கூறுகிறார்.

"பயிற்சிக்கு முன்னர், எந்த நாட்டின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் வழியாகச் செல்லவேண்டுமோ அந்த நாட்டுக்குத் தகவல் கொடுக்கும் நடைமுறை ஒன்று உள்ளது. அதன் பெயர் 'இன்னொசன்ட் பாசேஜ்' என்பதாகும். இதன்படி, பயிற்சியின் போது, துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதானால், நோட்டிஸ் டு மரைனர்ஸ் என்ற நோட்டெம் வழங்கப்படவேண்டும்" என்று உதய பாஸ்கர் கூறுகிறார்.

"இவற்றில் எது இப்போது நடந்துள்ளது என்று சொல்வது கடினம், ஏனென்றால் துப்பாக்கிச் சூடு நடந்திருந்தால், அது இந்தப் பயிற்சியின் தன்மையையே மாற்றியிருக்கக்கூடும்." என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், RYAN MCGINNIS / GETTY IMAGES

"இந்தியாவும் அமெரிக்காவும் ஐநா.,வின் கடல் சார் சட்டத்திற்கு வழங்கும் விளக்கங்கள் வெவ்வேறானவையாக இருப்பது தான் இதன் மையப்புள்ளி. இதில் அமெரிக்காவின் நிலை சற்று விசித்திரமாகத் தான் இருக்கிறது. இந்த ஐ நா-வின் கடல் சார் சட்டத்தை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், அனைத்து விதிமுறைகளையும் தான் பின்பற்றியுள்ளதாக அது வலியுறுத்துகிறது. இது தான் புரியவில்லை." என்று அவர் கூறுகிறார்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பது என்ன?

எந்த ஒரு நாட்டின் கடலோரப் பகுதியிலிருந்தும், 200 கடல் மைல்கள் அதாவது 370 கிமீ தொலைவு வரை அந்த நாட்டின் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஆகும்.

அமெரிக்க கடற்படையின் ஏழாவது படைத் தொகுதி ஏப்ரல் 7 ம் தேதி மாலத்தீவின் கடல் எல்லை மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலம் வழியாகச் சென்றது.

இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகளாக இருப்பதாலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுக்க ஒன்றிணைந்து செயல்படுவதாலும், இந்த நிகழ்வு நிச்சயமாக இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளிப்பதாகவே இருக்கும்.

இரு நாடுகளும் குவாட் குழுமத்தின் உறுப்பினர்களாக உள்ளன, இதன் முக்கிய நோக்கம் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுப்பதாகும். இந்தப் பின்னணியில், இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்ட விதம் மற்றும் அது குறித்த அறிவிப்பு வெளியான விதம் இவற்றை இந்தியா புறந்தள்ள முடியாது என்பது தான் உண்மை

எழுப்பப்படும் கேள்விகள்

இந்தியக் கடற்படையின் முன்னாள் கடற்படைத் தலைவர் அருண் பிரகாஷ், 1995-ல் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டத்தை இந்தியா அங்கீகரித்துள்ள நிலையில் அமெரிக்கா இன்று வரை அதைச் செய்யத் தவறிவிட்டது என்பது முரண்பாடானது என்று ட்வீட் செய்துள்ளார்.

ஏழாவது படைத் தொகுதி நமது நாட்டின் சட்டத்தை மீறி இந்தியப் பொருளாதாரப் பகுதியில் ஊடுருவி இந்தப் பயிற்சியை மேற்கொண்டதே ஒரு மோசமான விஷயம். இதை இவர்கள் பெருமையாக அறிவிப்பது ஆச்சரியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தென் சீனக் கடலில் அமெரிக்கக் கப்பல்களால் மேற்கொள்ளப்பட்ட ஃப்ரீடம் ஆஃப் நேவிகேஷன் ஆபரேஷன், (அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது வேறு விஷயம்) தென் சீனக் கடலைச் சுற்றியுள்ள பிரத்யேகப் பொருளாதார மண்டலம் ஒரு அளவுக்கு அதிமகமான உரிமைகோரல் என்ற செய்தியை சீனாவுக்கு வழங்கியது. இந்தியாவுக்கு ஏழாவது படைத் தொகுதி கூற விரும்பும் செய்தி என்ன? என்று அருண் பிரகாஷ் கேள்வி எழுப்புகிறார்.

ஏழாவது படைத் தொகுதி என்பது என்ன?

இது அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த முன்னணிப் படைத் தொகுதியாகும். எந்த நேரத்திலும், இதில், 50 முதல் 70 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள், 150 விமானங்கள் மற்றும் 20,000 கடற்படை வீரர்கள் தயாராக இருப்பார்கள்.

இந்தப் படைத் தொகுதி, கடற்படையின் ஃப்ளாக் அதிகாரியால் மூன்று நிலைகளில் கட்டளையிடப்படுகிறது.

இந்த ஏழாவது படைத் தொகுதியின் செயல்பாடு, 124 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது, இது சர்வதேச டேட்லைன் முதல் இந்தோ-பாகிஸ்தான் எல்லை வரையிலும், வடக்கில் குரில் தீவுகள் முதல் தெற்கில் அண்டார்டிக் வரையிலும் நீண்டுள்ளது.

ஏழாவது படைத் தொகுதியின் செயல்பாட்டு பகுதி 36 நாடுகளை உள்ளடக்கியது மற்றும் உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்தை உள்ளடக்கியது. ஏழாவது படைத் தொகுதி, இந்தோ பசிபிக் பகுதியில் 75 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது இருப்பை நிலைநிறுத்தி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: