இஸ்ரேல் - பாலத்தீன மோதலைத் தடுக்க செளதி கடைப்பிடிக்கும் உத்தி என்ன?

ஐநா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அன்டோனியோ கூட்டரெஷ், ஐ.நா பொதுச்செயலாளர்

காசாவில் சர்வதேச ஊடக அலுவலகங்களின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்கள் குறித்து தாம் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அன்டோனியோ கூட்டரெஷின் அறிக்கையில், "அண்மையில், ஹமாஸ் தலைவர் ஒருவரைக் குறி வைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் பலியான சம்பவம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் மிகுந்த கவலை அடைந்துள்ளார். இந்த மோதலில் பலியாகும் பாலத்தீனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை கொண்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

ஊடக நிறுவனங்களின் கட்டடத்தின் மீதான சமீபத்திய தாக்குதலுடன் சேர்த்து, அல் ஜாலா என்ற குடியிருப்புப் பகுதி கட்டடமும் தாக்கப்பட்டது, அவரை மேலும் கவலையடையச் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

கடந்த சனிக்கிழமை, காசாவில் அமைந்துள்ள அல்-ஜாலா என்ற 12 மாடி கட்டடத்தை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது.

ஹமாஸ் என்ற போராளிகள் குழுவின் அலுவலகம் அந்தக் கட்டடத்தில் இயங்கி வந்ததாக இஸ்ரேல் கூறுகிறது. கட்டடத்தின் உரிமையாளர் இதை மறுக்கிறார். அந்த கட்டடத்தில் அல்-ஜசீரா, ஏ பி மற்றும் பிற ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தன என்று அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த ஆறு நாட்களில், 100க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த இடங்களைக் குறி வைத்துச் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் தலைவர்களைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தனது அறிக்கையில், "சாதாரண குடிமக்களை குறி வைத்து ஊடகங்களைத் தாக்குவது போர்க்குற்றங்கள் என்ற பிரிவின் கீழ் வருகிறது. இத்தகைய செயல் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இது வரை உயிரிழப்பு 145க்கும் மேல்

காசா, மேற்குக் கரை மற்றும் எருசலேமில் திங்கள்கிழமை முதல் வன்முறை மோதல்களில் இதுவரை 41 குழந்தைகள் உட்பட 215க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் அல்லது ராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகப் பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய மோதல், 2014க்குப் பிறகான மோதல்களில் மிகவும் மோசமான வன்முறை மோதல் என்று கூறப்படுகிறது.

பாலத்தீன ஆயுதக் குழுக்களும் இஸ்ரேலைத் தாக்கி வருகின்றன. திங்கட்கிழமை முதல் ஹமாஸ் குறைந்தது 2,300 ராக்கெட்டுகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது, இதன் காரணமாக ஒரு குழந்தை மற்றும் ஒரு வீரர் உட்பட 12 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images

ஹமாஸின் ராக்கெட் தாக்குதலில் 560 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர். இருப்பினும், இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பின் திறமையால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஏனெனில் அந்த அமைப்பு ஹமாஸால் வானத்தில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான தற்போதைய பதற்றம் குறித்து விவாதிக்க வரும் ஞாயிற்றுக்கிழமை ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது, அதன் பின்னர் இந்த விவகாரத்தில் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்

பட மூலாதாரம், Getty Images

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செளதி அரேபியாவின் நிரந்தர பிரதிநிதி அப்துல்லா அல் மௌலாமி, ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் நிரந்தர தூதுக்குழுவைச் சந்தித்தார். மே மாதம் முழுவதும் சீனா தான் பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தலைமை தாங்குகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் பாலத்தீன பிரச்னையில் அரபு நாடுகளின் நடவடிக்கைக்கு செளதி அரேபியா முன்னிலை வகிக்கிறது.

இந்தச் சிறிய குழுக்களுக்கு இடையேயான கூட்டங்களின் நோக்கம் பாலத்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தெரிவிப்பதாகும்.

குறிப்பாக, அண்மைக் காலங்களில் வன்முறைத் தாக்குதல்களில் மக்கள் உயிரிழந்தது குறித்து எடுத்துக்கூறி, சர்வதேச சமூகம் குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற வலியுறுத்துவது இதன் நோக்கமாகும்.

இந்தக் கூட்டத்தில் செளதி அரேபியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர தூதுக்குழுவின் சிறப்பு அரசியல் குழு அதிகாரி பைசல் அல்-ஹக்பானியும் கலந்து கொண்டார்.

செளதி அரேபியாவின் முயற்சிகள்

பட மூலாதாரம், Getty Images

பாலத்தீனத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய இயக்கத்திற்கு செளதி அரேபியா தலைமை தாங்குவதால் அல்-மௌலாமி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின் தலைவர் வோல்கன் போஸாகிரையும் சந்தித்தார்.

பொதுச் சபைத் தலைவருடனான சந்திப்பின் நோக்கம், இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறுவதாகும். இதனால் குடிமக்களைப் பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்தப்படலாம்.

ஐக்கிய நாடுகள் சபையில் பாலத்தீனத்தின் பிரச்னைகளுக்கு செளதி அரேபியா எப்போதும் ஆதரவளித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர, சர்வதேச சமூகங்களுக்கு முன்னிலையில், அவர்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுப்பதிலும் உறுதுணையாக இருந்து வருகிறது.

வெள்ளிக்கிழமை, செளதி வெளியுறவுத் துறை அமைச்சர், பாலத்தீனத்தின் வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் மாலிகியுடன் தொலைபேசியில் பேசினார்.

இந்த உரையாடலின் போது, இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் இஸ்ரேலிய அதிகாரிகளின் சட்டவிரோத தாக்குதல்களை செளதி அரேபியா கண்டித்ததை உறுதிப்படுத்தினார். அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் மரபுகளையும் மீறும் அந்நாட்டின் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

செளதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில், ஜெருசலேம் மற்றும் காசாவின் நிலைமை குறித்து விவாதிக்க இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஞாயிற்றுக்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளது.

OIC இன் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் பாலத்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்துப் பேசுவார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :