கொரோனா வைரஸ் தடுப்பூசி: குழந்தைகளும் கோவிட்-19 தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ள வேண்டுமா?

  • ஜேம்ஸ் கலேகர்
  • சுகாதாரம் & அறிவியல் செய்தியாளர், பிபிசி
குழந்தை

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருப்பதுதான். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, போலியோ, டிப்தீரியா, ரோடா வைரஸ், கக்குவான் இருமல் போன்ற பல நோய்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த தடுப்பூசிகள் குழந்தை பிறந்த சில வார காலத்தில் இருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தடுப்பூசி

சில நாடுகள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தி வருகிறது. அமெரிக்கா, இதுவரை கிட்டத்தட்ட 6 லட்சம் (12 - 15 வயதுள்ள) குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்திவிட்டது. அடுத்த ஆண்டு 12 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த போதுமான பாதுகாப்பு தரவுகளை சேமித்து வைக்க உள்ளது அமெரிக்கா.

பிரிட்டன் பெரியவர்களுக்கு அதி விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்தி வருகிறது. இந்த ஆண்டின் ஜூலை மாதத்துக்குள் இவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விடும். ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் ஒரு தீர்மானம் எடுக்கப்படவில்லை.

இந்த நேரத்தில் ஓர் அறிவியல்பூர்வமான கேள்வி முன் வைக்கப்படுகிறது. கொரொனா தடுப்பூசியை குழந்தைகளுக்குச் செலுத்துவது, உயிரைக் காக்குமா? இந்த கேள்விக்கான விடை சிக்கலானது.

(இந்த கட்டுரையை பின்வரும் மொழியில் அவற்றின் மீது கிளிக் செய்து படிக்கலாம்: தெலுங்கு, மராத்தி,ஹிந்தி)

அதோடு ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடக் கூடியது. குழந்தைகளுக்காக ஒதுக்கப்படும் கொரோனா தடுப்பூசி டோஸ்கள், மற்ற நாடுகளில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கு வழங்கப்பட்டால் அதிக உயிர்களைக் காக்கலாம் என்கிற, மனிதபிமான மற்றும் தார்மீக அடிப்படையிலான ஒரு பார்வையும் இருக்கிறது.

குழந்தைகளுக்கு குறைவான கொரோனா பாதிப்பு

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் அவர்களுக்கு குறைந்த அளவிலான நன்மையே கிடைக்கிறது என ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

"இந்த பெருந்தொற்றில் இருக்கும் ஒரு சில நன்மைகளில், குழந்தைகள் மிகவும் அரிதாகவே கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்படுகிறார்கள்" என பேராசிரியர் ஆடம் ஃபின் கூறுகிறார். இவர் பிரிட்டனின் தடுப்பூசி மற்றும் நோய்தடுப்பு கமிட்டியில் இருக்கிறார்.

பொதுவாக குழந்தைகளுக்கு வரும் கொரோனா வைரஸ் மிகவும் லேசாகவும், அறிகுறிகளை வெளிக் காட்டாததாகவுமே இருக்கிறது. இதற்கு நேர்மாறாக, வயதானவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதில் முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது.

தி லான்செட் அறிவியல் சஞ்சிகை ஏழு நாடுகளில் நடத்திய ஆய்வில், கொரோனா பெருந்தொற்று காலத்தில், 10 லட்சம் பேரில் இரண்டுக்கும் குறைவான குழந்தைகளே கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பதாகக் கூறுகிறது.

பிரிட்டனில், கொரோனா தொற்றை அதிகரிக்கும், வேறு சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் குழந்தைகளுக்கு கூட தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை. மிக தீவிரமாக கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பவர்கள், பராமரிப்பு இல்லங்களில் வாழும் மாற்றுத் திறனாளி குழந்தைகள் ஆகியோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள்.

கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானது தான், இருப்பினும் அதனால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் நன்மைகளை கவனமாக மதிப்பிட வேண்டும்.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதன் மூலம், மற்றவர்களின் உயிரைக் காக்கலாம்.

ஃப்ளூ தொற்று விவகாரத்தில் இப்படி ஒரு விஷயம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டது. வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டிக்கு ஃப்ளூ பரவால் இருக்க, ஒவ்வோர் ஆண்டும் 2 - 12 வயதுள்ள பிரிட்டன் குழந்தைகளுக்கு நாசித் துவாரத்தில் ஒரு ஸ்பிரே செலுத்தப்பட்டது.

அதை அப்படியே கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பொருத்தினால், அது சமூக நோய் எதிர்ப்புத் திறன் (herd immunity) பெற உதவும் என ஒரு வாதமும் முன்வைக்கப்படுகிறது.

கொரோனா வைரஸில் இருந்து பலரும் பாதுகாக்கப்பட்ட பின், வைரஸ் பரவ முடியாமல் திணறும் அந்த புள்ளியைத்தான் சமூக நோய் எதிர்ப்புத் திறன் என்கிறோம்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் தடுப்பூசிகள் அருமையாக செயல்படுகின்றன. ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் கூட கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளில் குறைந்தபட்சம் பாதியைக் குறைக்கிறது.

கொரோனா வைரஸை பரப்புவதில் குழந்தைகள் பெரிய அளவில் பங்களிப்பதில்லை. ஆனால் பதின் வயது இளைஞர்கள் பங்களிக்கிறார்கள்.

"மேனிலைப் பள்ளி வயதில், கொரோனா பரவல் நடப்பதற்கு வாய்ப்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. எனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவது என்பது ஒட்டுமொத்த கொரோனா பரவலிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் டிராபிகல் மெடிசின் மருத்துவர் ஆடம் குசர்ஸ்கி கூறுகிறார். இது பலனளிக்குமா என பொதுவான ஒரு பதில் இல்லை.

இங்கிலாந்தில் வாழும் 16 மற்றும் 17 வயதான பதின் வயது இளைஞர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தாமலேயே, அவர்கள் ரத்தத்தில் கொரோனா நோய் எதிர்ப்பான்கள் (antibodies ) இருக்கின்றன.

எனவே குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்தாமலேயே, பிரிட்டன் போன்ற சில நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த போதுமான எதிர்ப்புத் திறன் இருப்பதைக் கண்டுபிடிக்கலாம்.

"அதிகம் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படாத நாடுகளில், வளர்ந்தவர்கள் அதிகம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நாடுகளில், சூழல் வேறு மாதிரியாக இருக்கும். அப்படிப்பட்ட நாடுகளில் இளம் வயதினருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும்" என்கிறார் மருத்துவர் குசர்ஸ்கி.

ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள். நியூசிலாந்து, தைவான் போன்ற நாடுகள் கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்தி இருக்கின்றன, ஆனால் அவர்கள் மத்தியில் கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தி மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

இதை தார்மீக ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியுமா?

ஒரு குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை எனில், யாருக்கு அந்த தடுப்பூசி சென்று சேரும் என்பதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பணக்கார நாடுகள், தங்கள் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, அந்த கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளௌக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியைச் செலுத்த முன்னுரிமை கொடுப்பது தார்மீக ரீதியில் தவறு என, ஆக்ஸ்போர்ட் ஆஸ்ட்ராசெனீகா தடுப்பூசியை பரிசோதனை செய்த ஆண்ட்ரூவ் பொல்லார்ட் கூறினார்.

"நம்மிடம் அளவுக்கு அதிகமாக கொரோனா தடுப்பூசி இருக்கிறது என்றால் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்தலாம். ஆனால் நம்மிடம் அத்தனை தடுப்பூசி விநியோகம் இல்லை" என எடின்பரோ பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு நிபுணர் பேராசிரியர் இலியனார் ரிலே கூறினார்.

"உலகின் வேறொரு பகுதியில் மறித்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு பதிலாக நம் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதா வேண்டாமே என்பது ஓர் அரசியல் தீர்மானம்" என கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :