இஸ்ரேல் - பாலத்தீனம்: முடிவுக்கு வருகிறதா நெதன்யாகுவின் ஆட்சி? இரானை குறிப்பிட்டு புதிய கூட்டணிக்கு எச்சரிக்கை

நெதன்யாகு

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலில் முன்வைக்கப்பட்டிருக்கும் புதிய கூட்டணி ஆட்சி அமைந்தால் அது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் என்று அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

நெதன்யாகுவுக்கு எதிரான மையவாதக் கட்சியுடன் அதிகாரப் பகிர்வு செய்து கொள்ளப் போவதாக அதிதீவிர தேசியவாதத் தலைவர் நெப்தலி பென்னட் அறிவித்திருக்கிறார்.

ஆனால் அப்படியொரு உடன்பாட்டை ஆதரிக்க வேண்டாம் என வலதுசாரித் தலைவர்களை பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தியுள்ளார்.

பென்னெட்டின் திட்டம் வெற்றி பெற்றால், நீண்டகாலமாக பிரதமராக இருக்கும் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்ததில் நெதன்யாகுவின் அணிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. கடந்த இரு ஆண்டுகளில் உறுதியான முடிவு கிடைக்காத நான்காவது தேர்தலாக இது அமைந்துவிட்டது. நெதன்யாகுவால் ஆட்சியமைக்கும் அளவுக்கு கூட்டணி ஆதரவையும் திரட்டமுடியவில்லை.

"இடதுசாரி ஆட்சியை அமைக்காதீர்கள். அது இஸ்ரேலின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் ஆபத்தாக அமைந்துவிடும்." என்று நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

71-வயதான நெதன்யாகு 12 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளார். நீண்ட காலமாக இஸ்ரேலிய அரசியலில் செல்வாக்குப் பெற்றிருக்கிறார். அவர் மீது மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறது.

மக்களைத் தவறாக வழிநடத்துவதாக பென்னட் மீது குற்றம்சாட்டியிருக்கும் நெதன்யாகு "நூற்றாண்டின் மோசடியை" செயல்படுத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

49 வயதான பென்னட் இஸ்ரேலில் ஆட்சியமைக்கும் பேச்சுகளில் பங்கேற்கப் போவதாக தொலைக்காட்சி உரை மூலமாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

"வலதுசாரி அரசு ஒன்றை அமைப்பதற்கு நெதன்யாகு இனியும் முயற்சி செய்ய மாட்டார். ஏனெனில் அப்படியொன்று இல்லையென்பது அவருக்குத் தெரியும். தன்னுடைய நிலைப்பாட்டை நோக்கி ஒட்டுமொத்த நாட்டையும் அழைத்துச் செல்ல அவர் விரும்புகிறார் " என பென்னெட் குற்றம்சாட்டினார்.

"எனது நண்பர் லேபிட்டுடன் சேர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு அரசை அமைப்பதற்கு ஆவன அனைத்தையும் செய்வேன்" என்றும் அவர் கூறினார்.

அந்த அறிவிப்புக்கு முன்னதாக பென்னெட் பிரதமராகப் பதவியேற்பார் என்றும் பின்னர் சுழற்சி முறையில் யாயில் லேபிட்டுக்கு அந்தப் பதவியை தருவார் என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் கூறின.

தற்போது திட்டமிடப்பட்டுள்ள புதிய கூட்டணியில் இஸ்ரேலிய அரசியலின் வலது, இடது, மையவாதக் கட்சிகளின் பிரிவுகள் இடம்பெறுகின்றன. அரசியல் ரீதியாக இவர்களுக்கு பொதுவான கொள்கை ஏதுமில்லை. ஆனால் நெதன்யாகுவின் அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைகிறார்கள்.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

லேபிட் மற்றும் பென்னெட்

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நெதன்யாகுவால் ஆட்சியமைக்க முடியாமல் போனதால், லேபிட் ஆட்சியமைப்பதற்கு வரும் ஜூன் 2-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நெதன்யாகுவின் லிகுட் கட்சிக்கு அடுத்தபடியாக லேபிட்டின் யேஷ் ஆடிட் கட்சி அதிக இடங்களில் வென்றிருக்கிறது.

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பென்னெட்டின் கட்சி ஆறே இடங்கள்தான் கிடைத்திருக்கின்றன. ஆயினும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதற்கு இது அவசியமாகி இருக்கிறது.

தொடர்ந்து மல்லுக்கட்டும் நெதன்யாகு - யோலென்டே நெல், மத்திய கிழக்கு செய்தியாளர்

ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான அரசியல் காட்சிகளுக்குப் பிறகு புதிய கூட்டணி ஆட்சியமைப்பதற்கு நெருங்கியிருக்கிறது. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பிரதமர் அகற்றப்பட இருக்கிறார். ஆனால் நெதன்யாகு எளிதில் விட்டுவிடப்போவதில்லை.

புதிய கூட்டணி அறிவிப்பு வெளியானதும் நெதன்யாகு எதிர்வினையாற்றினார். புதிய கூட்டணியில் சேர வேண்டாம் என பென்னெட்டின் யாமினா கட்சியிலும், நியூ ஹோப் கட்சியிலும் உள்ள வலதுசாரிகளைக் கடுமையாக எச்சரித்தார்.

"குடியேற்றங்களை யார் பார்த்துக் கொள்வார்கள்" என்று வலதுசாரிகளை நோக்கி கேலியாகக் கேட்டார். புதிய கூட்டணி அரசு இஸ்ரேலின் எதிரியான ஈரானை எதிர்த்துப் போராட இயலாத பலவீனமான அரசையை அவர்களால் வழங்க இயலும் என்றும் விமர்சனம் செய்தார்.

பட மூலாதாரம், PACIFIC PRESS/GETTY IMAGES

இத்தகைய கடுமையான எதிர்வினை மூலம் நெதன்யாகுவால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடிந்தால், புதிய கூட்டணி அரசு அமைக்கும் திட்டம் ஆட்டம் காணும்.

புதிய கூட்டணி அரசு பதவியேற்றாலும்கூட அது முரண்பாடுகளின் தொகுதியாகவும் முறிந்துபோகும் தன்மை கொண்டதாகவும்தான் இருக்கும். அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக பல முக்கிய விவகாரங்கள் மேலும் சிக்கலாவதற்கும் வாய்ப்பிருக்கிறது.

பென்னெட்டுக்கு சுழற்சி முறையில் பிரதமர் பதவியை வழங்குவதற்கு நெதன்யாகுவின் லிகுட் கட்சி கடந்த சனிக்கிழமை ஒப்புக் கொண்டது. ஆனால் இதை பென்னெட் ஏற்கவில்லை. நெதன்யாகு இதே திட்டத்தை மீண்டும் முன்வைத்திருக்கிறார்.

இஸ்ரேலின் விகிதாசார பிரதிநிதித்துவத் தேர்தல் முறையின் கீழ் எந்தக்கட்சிக்கும் தனியாக பெரும்பான்மை கிடைப்பது மிகவும் கடினம். அதன் சிறு கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது.

லேபிட் ஆட்சியமைப்பதற்கு 28 நாள் அவகாசம் தரப்பட்டது. காஸாவுடனான மோதலால் இதில் இடையூறு ஏற்பட்டது. இந்தச் சண்டை காரணமாக இந்தக் கூட்டணியில் இருந்து அரபு இஸ்லாமிஸ்ட் கட்சி வெளியேறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :