சீன மக்கள்தொகை பெருக்கம் குறைவதன் எதிரொலி: 3 குழந்தைகள் பெற்றெடுக்கும் திட்டம் வெற்றியடையுமா?

மூன்று குழந்தைகள் வரை பெற்றெடுக்க சீன அரசு அனுமதி - கோபத்தில் மக்கள்

பட மூலாதாரம், EPA

சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு, மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினர்களுடனான கூட்டத்துக்குப் பிறகு இந்த கொள்கை மாற்றத்துக்கு அதிபர் ஷி ஜின்பிங் ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகமான ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் மக்கள்தொகை பெருக்கம் கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு கடந்த 10 ஆண்டுகளில் குறைந்துள்ளதாக சமீபத்தில் வெளியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் தெரியவந்தது.

அந்த தரவு ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக, சீன அரசு அந்நாட்டு மக்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவித்து, மக்கள் தொகை வீழ்ச்சியை கட்டுப்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

அதாவது, சீனாவில் குழந்தைகளின் பிறப்பு குறைவதால், நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை இளம் வயதினரை விட அதிகமாகும் கவலை எழுந்தது.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், எதிர்காலத்தில் வயதானவர்களுக்கு ஆதரவளிக்க தேவையான பணியாளர்கள் இல்லாமல், நாடுமுழுவதும் மருத்துவம் மற்றும் சமூகப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அளவில் தேவை ஏற்படும் என்று வல்லுநர்கள் அச்சம் தெரிவித்திருந்தனர்.

முன்னதாக, சீனாவில் பல தசாப்தங்களாக நடைமுறையில் இருந்து வந்த ஒரு குழந்தை பெற்றுக்கொள்ளும் கட்டுப்பாடு கடந்த 2016ஆம் ஆண்டு தளர்த்தப்பட்டு, அந்த எண்ணிக்கை இரண்டாக மாற்றப்பட்டது.

எனினும், கொள்கை ரீதியிலான மாற்றம் தவிர்த்து பெரியளவிலான ஊக்குவிப்பு திட்டம் ஏதுமில்லாததால் இந்த திட்டம் மக்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை.

சீனாவின் முக்கிய நகரங்களில் குழந்தையை பெற்றெடுத்து, வளர்ப்பதற்கு ஆகும் செலவு தொடர்ந்து உயர்ந்து வருவது தம்பதியினர் இடையே குழந்தைகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வமின்மையை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், முந்தைய திட்டத்தை போன்று இந்த திட்டமும் தோல்வியடைவதை தவிர்க்கும் வகையில், எண்ணற்ற திட்டங்களை சீன அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிகிறது.

"நம் நாட்டின் மக்கள்தொகை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் வகையிலும், அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டும் ஆதரவு நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும்" என்று ஷின்ஹுவா வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த திட்டம் உண்மையிலேயே ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சில வல்லுநர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

"குழந்தை பெற்றெடுப்பு தொடர்பான கொள்கையை தளர்த்துவது பயனுள்ளதாக இருந்திருந்தால், தற்போது நடைமுறையில் உள்ள இரு குழந்தை பெற்றெடுப்பு கொள்கையும் பயனுள்ளதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும்" என்று காமர்ஸ் பேங்கின் மூத்த பொருளாதார நிபுணர் ஹாவ் ஷோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

"ஆனால், யார் மூன்று குழந்தைகளைப் பெற விரும்புகிறார்கள்? இளைஞர்கள் அதிகபட்சம் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள். அன்றாட வாழ்க்கைச் செலவுகள் மிக அதிகமாக இருப்பதும் வாழ்க்கை அழுத்தமிக்கதாக இருப்பதும் இங்கு அடிப்படை பிரச்னையாக உள்ளது."

கடுமையாக எதிர்வினையாற்றும் சீன குடிமக்கள்

சீனாவின் மூன்று குழந்தைகள் பெற்றெடுத்து கொள்ளும் கொள்கை முடிவுக்கு அந்த நாட்டின் முன்னணி ஊடகங்கள் ஆதரவுடன் கூடிய முக்கியத்துவத்தை அளித்து வருகின்றன.

சீன தேசிய செய்தித்தாளான பீப்பிள்ஸ் டெய்லி, தொலைக்காட்சியான சிசிடிவி, ஷின்ஹுவா செய்தி முகமை என ஊடகங்கள் அனைத்தும் குழந்தைகளின் கார்ட்டூன் படத்தை தங்களது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்து இதுகுறித்த செய்தியை பதிவிட்டு வருவதாக சீன ஊடக ஆய்வாளர் கெர்ரி ஆலன் கூறுகிறார்.

எனினும், சீன மக்கள் இந்த செய்திகளுக்கு கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். குறிப்பாக, ஷின்ஹுவாவின் பதிவில் மக்கள் புதிய கொள்கை முடிவுக்கு எதிரான கருத்துகளை பதிவிட்டு வருவதாக கெர்ரி கூறுகிறார். "ஒரு குழந்தை கூட பெற்றுக்கொள்ள விருப்பமில்லாத அளவுக்கு மக்கள் குறைந்த வருமானம் கொண்டுள்ள நிலையில், மூன்று குழந்தைகள் பெற்றெடுக்கும் திட்டமா?" என்று ஒருவர் பதிவிட்டதற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

"இந்த தருணத்தில் வாழ்க்கையில் ஏகப்பட்ட அழுத்தங்கள் உள்ளன" என்று மற்றொருவரின் பதிவிலும், "இளம் வயதினர் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராக இல்லை" என்று இன்னொருவரின் பதிவிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இதுமட்டுமின்றி, பெண்கள் மகப்பேறு விடுமுறை எடுப்பதிலும், ஆண்கள் மனைவி மற்றும் குழந்தைக்காக விடுப்பு எடுப்பதிலும் உள்ள "பணியிடம் சார்ந்த சங்கடங்கள்" குறித்து பலரும் தங்களது கவலைகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இன்று சீனாவில் உள்ள இளைஞர்கள் அந்த நாட்டின் ஒரு குழந்தை கொள்கையில் பிறந்தவர்கள். இவர்களின் பெற்றோர் ஓய்வுபெறும் வயதை நெருங்குவதால் அவர்களை பராமரிக்கும் பொறுப்பு இவர்களுடையதாக மாறுகிறது. இதுமட்டுமின்றி, தற்போது ஓய்வுபெற்று வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இளைஞர்கள் பலர் இயல்பை விட அதிக நேரம் பணிபுரிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இது இளைய தலைமுறையினருக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கையை சமநிலைப்படுத்த இயலாத அழுத்தத்தை உருவாக்குகிறது.

அதுமட்டுமின்றி, உலகின் மற்ற சில நாடுகளை போன்று சீனாவிலும் பெண் சிசுக்கொலைகள் அதிகரித்து காணப்பட்டதால், பல லட்சக்கணக்கான சீன ஆண்கள் தங்களது வாழ்நாளில் வாழ்க்கை துணை என்று ஒருவரை பார்க்கவே போவதில்லை என்ற முடிவுடன் வாழும் அவலநிலையும் காணப்படுகிறது. அதே சமயத்தில், ஏற்கனவே ஆண்களை விட குறைந்த எண்ணிக்கையில் உள்ள பெண்களில் பலரும் இளம் வயதில் குடும்ப வாழ்க்கையை தொடங்க விரும்பாமல் உயர் கல்வி பயின்று பணியாற்றவே விரும்புகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: