பெகாசஸ் ஸ்பைவேர்: நீங்கள் எப்போது வேண்டுமானாலும் உளவு பார்க்கப்படலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

  • கார்டன் கோரோரா
  • பாதுகாப்பு செய்தியாளர்
என் எஸ் ஓ

பட மூலாதாரம், Getty Images

பெகாசஸ் ஸ்பைவேர் மென்பொருள் பத்திரிகையாளர்கள், செயற்பாட்டாளர்கள், ஏன் அரசியல் தலைவர்களையும் கூட உளவுப் பார்க்க பயன்படுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டின் மூலம், உளவுப் பார்த்தல் என்பது விற்பனைக்கான ஒன்று என்பது தெரிகிறது.

இந்த மென்பொருள் தயாரிப்புக்கு பின்னணியில் உள்ள என்எஸ்ஓ குழுமம், இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கிறது அதுமட்டுமல்லாமல் தங்களின் வாடிக்கையாளர்கள் கவனமாக மதிப்பீடு செய்யப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த பெகாசஸ் விவகாரம் நமக்கு உணர்த்தும் மற்றொரு விஷயம் என்னவென்றால், ஒரு சில நாடுகளால் உளவுப் பார்க்க பயன்படுத்தப்பட்ட அதி நவீன தொழில்நுட்பங்கள் தற்போது பரவலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் இன்றைய டிஜிட்டல் உலகில் நமது தனிமை மற்றும் பாதுகாப்பிற்கு அது சவலாகவும் உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு உளவு நிறுவனம் உங்களின் தனிநபர் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அந்நிறுவனம் கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் அலைப்பேசியை டேப்கள் மூலம் ஒற்றுக் கேட்க வேண்டும் அல்லது யாருக்கும் தெரியாமல் உரையாடலை ரகசியமாக பதிவு செய்யும் நுண் ஒலிப்பதிவு கருவியை வீட்டில் மறைத்து வைக்க வேண்டும். அல்லது உங்களை பின் தொடர ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் யாரை தொடர்பு கொண்டீர்கள் அல்லது நீங்கள் எவ்வாறு வாழ்ந்தீர்கள் என்பதை கண்டறிய நேரமும் பொறுமையும் தேவை.

ஆனால் இப்போது நீங்கள் என்ன பேசுகிறீர்கள், எங்கு இருந்தீர்கள்? நீங்கள் யாரை சந்தித்தீர்கள்? உங்களின் விருப்பம் என்ன இது எல்லாமே நீங்கள் வைத்திருக்கும் கருவியின் மூலம் ஒருவர் அறிந்து கொள்ளலாம். உங்களின் அலைப்பேசியை யாரும் தொடாமலேயே தூரத்திலிருந்தும் அவற்றை ஹேக் செய்ய முடியும். அதே போன்று உங்களின் குரல் கேட்டு வேலை செய்யும் டிஜிட்டல் கருவிகள் யாருக்கேனும் உளவு வேலை பார்ப்பதற்கான கருவியாககூட இருக்கலாம்.

உங்கள் அலைப்பேசியை தூரத்திலிருந்து இயக்க சில நாடுகளால் மட்டுமே முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் நவீன உளவு பார்க்கும் வசதி தற்போது பல நாடுகளின் கையில் உள்ளது. நாடுகள் ஏன்? சிறு குழுக்கள், தனி நபர்கள் என அனைவரிடத்திலும் உள்ளது.

முன்னாள் அமெரிக்க உளவு பார்ப்பு ஒப்பந்ததாரர் எட்வேர்ட் ஸ்னோடென், சர்வதேச தொலை தொடர்பில் அமெரிக்க மற்றும் பிரிட்டனின் உளவு அமைப்புகளுக்கு இருக்கும் ஊடுறுவும் சக்தி குறித்து 2013ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

அந்த முகமைகள் எப்போதும் தங்களது திறமைகள் ஒரு ஜனநாயக நாட்டின் அங்கீகாரத்திற்கும், மேற்பார்வைக்கும் உட்பட்டது என தெரிவித்தன. ஆனால் சில சமயங்களில் இந்த அங்கீகாரம் வலுவற்றதாக இருந்தது ஆனால் அது நாளடைவில் வலுப்பெற்றது.

எட்வேர்ட் வெளியிட்ட கருத்துக்கள் பிற நாடுகள் தங்களுக்கான வாய்ப்பை தேடும் சந்தர்ப்பத்தை உருவாக்கியது. பல நாடுகளும் இம்மாதிரியான உளவுப் பார்க்கும், பணியில் ஈடுபட நினைத்தன. எனவே அதுவரை வெளியில் பெரிதும் வெளிவராத குழுக்கள் தங்களின் விற்பனையை தொடங்கின.

இஸ்ரேல் எப்போதுமே உளவுப் பார்க்கும் வசதிகளில் சக்தி வாய்ந்த முதல் தர நாடாக இருந்து வருகிறது. அதன் நிறுவனங்களான என்எஸ்ஓ குழுமம் உளவு பார்க்கும் உலகத்தின் ஜாம்பவான்களால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் உளவுப் பார்க்கும் தொழில்நுட்பத்தை வர்த்தகம் ஆக்கியது.

என்எஸ்ஓ குழுமம் தங்களின் உளவு மென்பொருள், குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவதற்கு மட்டுமே விற்கப்படுகிறது என்று தெரிவிக்கிறது. ஆனால் அது எவ்வாறு வரையறுக்கபப்டுகிறது என்பதுதான் பிரச்னை.

ஏனென்றால் பல நாடுகள் பத்திரிகையாளர்கள், அரசுக்கு எதிரானவர்கள், மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கின்றன. அவர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயல்படுவதாக தெரிவிக்கின்றன. எனவே இதன் மூலம் அவர்கள் கண்காணிப்பு வளைத்திற்குள் வரலாம் அல்லவா?

என்க்ரிப்ஷன் வசதி அதிகரித்ததும் (ஒரு தகவலை `கோட்`டாக மாற்றுவது) மக்களின் அலைப்பேசிகளில் அரசு ஊடுறுவது அதிகரித்துள்ளது. அலைப்பேசி உரையாடல் என்பது அத்தியாவசமான நிலையில் ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் அலைப்பேசி லைன் வசதியில் ஒயரை இணைக்க (wiretap) செய்ய சொல்வது என்பது எளிதானதே.

தற்போது தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்படுவதால் அந்த கருவியினுள் நாம் ஊடுறுவ வேண்டும். ஆனால் கையில் உள்ள கருவி என்பது ஒரு தகவல் களஞ்சியம்.

சில சமயம் நாடுகள் இதை விவரமாக செயல்படுத்துகின்றன. அதற்கு ஒரு சமீபத்திய எடுத்துக் காட்டு அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டு நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் அதீத பாதுகாப்பு என்று கருதிய அலைப்பேசிகள் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்டன. ஆனால் அது அரசால் இயக்கப்பட்டன.

ஆனால் அலைப்பேசியை ஒட்டு கேட்பதை காட்டிலும் விஷயம் பெரிதாகி கொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

ஆன்லைன் வர்த்தகத்தை ஹேக் செய்யும் வசதிகூட இப்போது எளிதானதாகிவிட்டது.

முன்னொரு காலத்தில் உங்களின் கம்ப்யூட்டரை ஹேக் செய்து அதை விடுவிக்க ஹேக்கர்கள் பணம் கேட்பார்கள் ஆனால் இன்றைய ’கள்ள ஆன்லைன்’ உலகத்தில் அது ஒரு சேவையாக விற்கப்படுகிறது.

ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி லாபமாக ஒரு தொகை கொடுத்தால் இந்த மாதிரியான கருவிகளை விற்று விடுகிறார்கள். விற்ற பிறகு அதற்கான சேவை மற்றும் வழிகாட்டுதலுக்கு உதவி அழைப்பு எண்களும் வழங்கப்படுகின்றன.

அதேபோன்று ஒருவரின் இருப்பிடத்தை கண்டறிவது, ஒருவரின் செய்கை மற்றும் பழக்க வழக்கத்தை கண்டறிவது இதற்கெல்லாம் முந்தைய காலத்தில் பெரும் வசதி தேவை ஆனால் இப்போது இதற்கான கருவி எல்லாம் இலவசமாக உள்ளன.

உளவுப் பார்த்தல் என்பது நாடுகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டுமல்ல.

சில நிறுவனங்களும் நம்மை பற்றிய தகவல்களை சேகரிக்கின்றன. இதை ஒரு உளவு மென்பொருளை பொறுத்திதான் செய்ய வேண்டும் என்பதில்லை. நாம் சமூக வலைத்தளங்களில் எதை அதிகமாக பார்க்கிறோம் எதை அதிகமாக தேடுகிறோம் என நிறுவனங்கள் தகவல்களை சேகரித்து அதை வர்த்தகத்திற்கு பயன்படுத்துகின்றன.

இம்மாதிரியாக நிறுவனங்களால் சேகரிக்கப்படும் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படும் அபாயமும் உள்ளது.

சில உளவு பார்க்கும் கருவிகள் அல்லது வசதிகள் அனைவரும் வாங்க கூடியதாக உள்ளது. தங்களின் குடும்பத்தின் இருப்பிடத்தை தெரிந்து கொள்ள இம்மாதிரியான உளவு கருவியை வாங்குவோரும் உண்டு.

இது எல்லாவற்றையும் சேர்த்து பார்த்தால் நாம் யார் வேண்டுமென்றாலும் யாரை வேண்டும் மென்றாலும் உளவுப் பார்க்கலாம். அதே போன்று நம்மையும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உளவுப் பார்க்க நேரிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :