பிட்காயின்களை டெஸ்லா மீண்டும் ஏற்க வாய்ப்பு? – அதிகரித்த மதிப்பு

எலான் மஸ்க்

பட மூலாதாரம், Getty Images

டெஸ்லா நிறுவனம் பிட்காயின்களை பெற்றுக் கொள்ளலாம் என எலான் மஸ்க் அறிவித்த பிறகு அதன் மதிப்பு மீண்டும் 30ஆயிரம் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.

மே மாதம் கிரிப்டோ கரன்ஸியை ஏற்று கொள்ளப் போவதில்லை என எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

பிட்காயின்கள் உருவாக்கத்தில் அதிக மின்சாரம் தேவை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

கிரிப்டோ கரன்ஸி குறித்த கூட்டம் ஒன்றில் டெஸ்லா நிறுவனம் மீண்டும் பிட் காயின்களை ஒப்புக் கொள்ளக் கூடும் என எலான் மஸ்க் தற்போது தெரிவித்துள்ளார்.

"புதுப்பிக்கத்தக்க ஆற்றலை 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பயன்படுவதை நான் உறுதி செய்ய விரும்பினேன். இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கலாம். அவ்வாறு அதிகரித்தால் டெஸ்லா பிட்காயினை மீண்டும் பெற்றுக் கொள்ள தொடங்கும் " என்று எலான் மஸ்க் தெரிவித்தார்.

முன்னதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் டெஸ்லாவின் முதலீட்டாளர்கள் சிலரும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களும் பிட்காயினை பெற்றுக் கொள்ளும் டெஸ்லாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

சுற்றுச்சூழலுக்கு பாதகம் விளைவிக்காத கார்களை தயாரிக்கும் நிறுவனம் அதிகப்படியான ஆற்றலை உட்கொள்ளும் முறையில் தயாரிக்கப்படும் கிரிப்டோகரன்ஸியை பெற்று கொள்கிறது என பலர் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பட மூலாதாரம், REUTERS/DADO RUVIC

கிரிப்டோ கரன்ஸியை உருவாக்க அதிகப்படியான ஆற்றல் தேவை என்பதால் அந்த ஆற்றல் புதுப்பிக்கப்பட்ட ஆற்றலா அல்லது புதைப்படிவ எரிபொருளா என பலர் கேள்வி எழுப்பினர்.

மேலும் உலகின் புகழ்பெற்ற மனிதராக இருக்கும் எலான் மஸ்க் தனது பெயரையும், பதவியையும் கிரிப்டோகரன்ஸியை ஆதரிக்க பயன்படுத்துகிறார் என பலர் குற்றஞ்சாட்டினர்.

பி வேர்ட் மாநாட்டில் பேசிய எலான் மஸ்க், டெஸ்லா மற்றும் தனது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான பிட்காயினை தவிர எதிரீயம் மற்றும் டாஜ்காயின் போன்ற கிரிப்டோ கரன்ஸிகளையும் தான் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிப்டோ கரன்ஸிகளை விற்பதற்கு முன்னதாக அதன் விலை செயற்கையாக அதிகரிக்க தான் உதவியதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த எலான் மஸ்க், "விலையை அதிகரித்துவிட்டு விற்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிட்காயின் வெற்றியடைய வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் டிவிட்டர் நிர்வாக தலைவர் ஜாக் டோர்சி மற்றும் ஏஆர்கே முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் கேத்தி வுட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எலான் மஸ்கின் அறிவிப்பை தொடர்ந்து பிட்காயினின் மதிப்பு 6 சதவீதம் அதிகரித்துள்ளது. எத்திரியம் 10.6 சதவீதம் அதிகரித்துள்ளது என காயின்டெஸ்க் வலைதளம் தெரிவித்துள்ளது.

பிட்காயின் என்றால் என்ன?

பிட்காயின் என்பது மின்னணு பணமான கிரிப்டோகரன்ஸி வகைகளில் ஒன்றும், உலகளாவிய பண செலுத்துகை முறையுமாகும். நீங்கள் வாங்கும் பிட்காயின்களை பல்வேறு இணையதளங்களில் உள்ள வாலெட்களில் (பணப்பை) சேமிக்கலாம். மைனிங் என்ற செயல்முறையை முடித்தபின் நீங்கள் பிட்காயின்களை பெறலாம். பிட்காயின்களை உங்களிடம் உள்ள பணத்தைக் கொண்டும் வாங்கலாம்.

பரவலாகப் பார்த்தால், கிரிப்டோகரன்ஸிகள், டோக்கன்கள் அல்லது டிஜிட்டல் "நாணயங்கள்" வடிவத்தில் இருக்கும் மெய்நிகர் அல்லது டிஜிட்டல் பணம்.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவை சேர்ந்த ஈலோன் மஸ்க்கிற்கு சொந்தமான கார் நிறுவனமான டெஸ்லா, 150 கோடி டாலருக்கு மறையீட்டு நாணயமான (கிரிப்டோகரன்சி) பிட்காயினை ஜனவரி மாதம் வாங்கியுள்ளதாக அறிவித்தது.

மேலும், வருங்காலத்தில் பிட்காயினை கட்டணம் பெறும் முறையாக ஏற்றுக்கொள்ளும் திட்டத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது.

இந்த அறிவிப்பின் காரணமாக, ஊசலாடி கொண்டிருந்த பிட்காயினின் விலை 17 சதவீதம் உயர்ந்து. அந்த சமயத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் 44,220 டாலர்கள் என்ற உச்சத்தை அடைந்தது.

பின் மே மாதம் டெஸ்லா நிறுவனம் பிட் காயின்களை பெற்று கொள்ளாது என்று அவர் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :