அழகை பராமரிக்க உடலுறவுக்கு துணியும் பெண்கள் - யார் இவர்கள்?
- லிண்டா ப்ரெஸ்லே
- பிபிசி செய்திகள், குலியகன்

பட மூலாதாரம், Getty Images
மெக்ஸிகோ நாட்டிலேயே மிகவும் சக்திவாய்ந்த மற்றும் மோசமான போதைப்பொருள் வலைபின்னலின் முகமையாக விளங்குவது அங்குள்ள சினாலோ மாகாணம்.
இதில் புழங்கும் பணம், அங்குள்ள இளம் பெண்களுக்கும் போதைப்பொருட்களை கையாள்பவர்களுக்கும் இடையே உள்ள உறவிலும் அழுத்தமான தடத்தைப் பதித்திருக்கிறது. பல இளம்பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
குலியகானில் உள்ள தனது க்ளினிக்கில் அறுவை சிகிச்சையை விரும்பும் பெண்களின் பெரிய பட்டியலை வைத்திருக்கிறார் மருத்துவர் ரஃபேலா மார்டினஸ் தெரஸாஸ். "நார்கோ - ஆஸ்தெட்டிக்" என்று வருணிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட தோற்றத்தைப் பெறுவதற்குப் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள்.
"சிறிய ஒயிலான இடை, அகலமான இடுப்பு, பெரிய பிருட்டங்கள், பெரிய மார்பகங்கள் கொண்ட உடலமைப்பு இது" என்கிறார் மார்டினெஸ்.
இப்படிப்பட்ட அதீத பெண் தன்மை கொண்ட உடலைமைப்பைக் கொண்ட ஒரு பெண், டிசைனர் பொருட்களை விரும்புகிறவராகவும், நார்க்கோ காதலனைக் கொண்டவராகவும் இருந்து விட்டால் அவர் 'லா புகோனா' என்று அழைக்கப்படுகிறார்.
"பெரும்பாலும் என்னிடம் வரும் பெண்களின் வயது 30 முதல் 40 வரை இருக்கும். சில நேரங்களில் 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்களும் வருவார்கள்.யாருக்கு சிறப்பான உடல் இருக்கிறது, யாருக்கு சிறிய இடை இருக்கிறது என்றெல்லாம் அவர்கள் போட்டி போட்டுக் கொள்வார்கள்.
பட மூலாதாரம், Getty Images
அம்மாக்களிடமோ தோழிகளிடமோ கலந்து ஆலோசித்துவிட்டு அவர்கள் வருகிறார்கள். வேறு சிலர் ஒரு ஆணுடனோ தனியாகவோ வருவார்கள்.
காதலனுடன் வரும் பெண்களுக்கு அவன் அறுவை சிகிச்சைக் கட்டணத்தைக் கட்டி விடுகிறான். சில சமயம் என்னை தொலைபேசியில் அழைக்கும் ஆண்கள், நான் உங்களிடம் அறுவை சிகிச்சைக்காக ஒரு பெண்ணை அனுப்புகிறேன் என்பார்கள்.
ஒருவர் என்னை அழைத்து, நான் உங்களிடம் ஒரு பெண்ணை அனுப்புகிறேன், அவள் சொல்வதைக் கண்டுகொள்ள வேண்டாம். எனக்கு என்ன பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியும், அதன்படி செய்யுங்கள், அதற்காகத் தான் உங்களுக்குப் பணம் தருகிறேன்" என்றார்.
"அவரிடம் நான் மறுத்து விட்டேன். என் மருத்துவமனைக்கு வந்த பிறகு முடிவுகளை அவள்தான் எடுக்க வேண்டும் என்பதால், இதுபோன்ற பிரச்னைகளை அவர்களுக்குள்ளேயே பேசித் தீர்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டேன்" என்கிறார்.
லா புகோனா என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்தப் பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சையால் மாற்றியமைக்கப்பட்ட, மணல் கடிகாரம் போன்ற வளைவுகள் உள்ள உடல், பளபளப்பான உடைகள், விலையுயர்ந்த ஆபரணங்கள் எல்லாம் இதில் அடங்கும்.
நார்கோக்களுக்கு லா புகானா பெண் நண்பர்களைப் பிடித்திருக்கிறது, அவர்களுக்கு உதவுகிறார்கள். ஆனால் இதுபோன்ற உடலை வடிவமைத்துக்கொள்ளும் பல பெண்கள் இதை ஒரு ஃபேஷனுக்காகவே செய்கிறார்கள். அவர்களுக்கும் போதைப்பொருள் கடத்தலுக்கும் எந்த தொடர்பு இருப்பதில்லை.
கிம் கர்தாஷியனின் உடலமைப்பு சில சமயங்களில் இப்படி அழைக்கப்படுகிறது.
ஒரே ஒருவர் கிட்டத்தட்ட 30 பெண்களை ரஃபேலாவிடம் அனுப்பியிருக்கிறார். லிப்போ ஸ்கல்ப்சருக்கே 6,500 டாலர்கள் செலவாகும் நிலை இருக்கிறது. பெரும்பாலும் கட்டணங்கள் பணமாகவே செலுத்தப்படுகின்றன.
"இதுபோன்ற சந்தர்ப்பங்களில் போதைப்பொருள் கடத்தலிலிருந்துதான் பணம் வந்திருக்கவேண்டும். இது சரியில்லை என்று முன்பெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பேன். இப்போது நான் மாறிவிடவில்லை, ஆனால் அறுவை சிகிச்சைக்கு முன்னால் பெரிதாக யோசிப்பதும் இல்லை. சினலோவாவில் உணவகங்கள் மதுவிடுதிகள் மருத்துவமனைகள் என மொத்த பொருளாதாரமே போதைப்பொருள் கடத்தலைத்தான் நம்பியிருக்கிறது" என்கிறார்.
ஒரு பெண்ணின் அறுவை சிகிச்சைக்காகக் காதலன் பணம் கட்டும்போது அவரிடம் தான் பேசுவதாகக் குறிப்பிடுகிறார் மார்ட்டினெஸ்.
"இந்த அறுவைசிகிச்சையை அந்தப் பெண் நிஜமாகவே விரும்புகிறாளா என்று கேட்பேன். சில சமயம் அவனுக்கு எது பிடிக்குமோ அது என்று பதில் சொல்வார்கள்.காதலன் பிரிந்தபின்னும் அவர்கள் உடல் அவர்களுடன்தான் இருக்கும் என்று விளக்குவேன். ஆகவே அவனுக்கு என்ன வேண்டும் என்பதை யோசிக்காமல் தனக்கு என்ன வேண்டும் என்று அவர்களை யோசிக்கச் சொல்லி வலியுறுத்துவேன்" என்கிறார்.
சில சமயங்களில் தற்காலிக ஆண் - பெண் உறவுகளையும் அவர் எதிர்கொள்கிறார். போதைப்பொருள் கடத்தலால் உருவான உறவுகள் இவை.
பட மூலாதாரம், Getty Images
"ஒரு நார்க்கோவுக்கு அழகான பெண்ணின் இருப்பு தேவைப்படுகிறது. அது ஒரு நார்க்கோவின் அடையாளத்தைப் போல" என்கிறார் பேட்ரோ (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
30 வயதாகும் பேட்ரோ, வலிமையான உடற்கட்டு உடையவர், தன்னை உடற்பயிற்சியாளர் என்றும் சினலோவாவில் புழங்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் என்றும் சொல்லிக்கொள்கிறார்.
"பெண்ணுக்காக ஆண்கள் சண்டை போட்டுக்கொள்வார்கள். உங்கள் மனைவி உங்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருப்பாள், மற்ற பெண்கள் பரிசுப்பொருட்களைப் போன்றவர்கள்" என்கிறார்.
நார்க்கோவின் மனைவி
சினலோவா போதைப்பொருள் கடத்தல் தலைவனான ஜோக்வின் எல் சாப்போ கஸ்மனின் மனைவி எம்மா கொரோனெல் எஸ்புரோ, ஜூன் மாதம் வாஷிடங்க்டனில் நடந்த ஒரு வழக்கு விசாரணையின்போது தான் போதைப்பொருள் விற்றது தொடர்பாக தண்டிக்கப்பட்டார்.
மெக்சிக்கோவின் டுராங்கோவில் 2007ம் ஆண்டு நடந்த ஒரு அழகிப்போட்டியில், தனது பதின்பருவ வயதில் கஸ்மனை சந்தித்ததாகவும், அன்றைக்கே அவரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதித்ததார் என கூறப்படுகிறது.
இதில் இன்னும் ஒரு அடிப்படையான விஷயமும் இருக்கிறது.
"ஆண்கள் காமத்தால் உந்தப்படுகிறார்கள், பெரிய புட்டங்களாலும் பெரிய மார்பகங்களாலும் ஈர்க்கப்படுகிறார்கள், வேறு எதையும்விட இங்கு காமம்தான் பிரதானம்" என்கிறார்
பெட்ரோ இரண்டு பெண்களின் அறுவை சிகிச்சைக்குப் பணம் கொடுத்டிருக்கிறார்.
"என் தோழிக்கு மார்பகங்களையோ புட்டங்களையோ மூக்கையோ சரி செய்ய வேண்டும், அவர் தனக்காக பணம் செலுத்த யாரையாவது எதிர்பார்ப்பார். அவள் மீது ஈர்ப்பு இருக்கும் ஆண் பணம் தருவான். அப்படி கொடுத்தால் அந்த ஆண் தான் நன்கொடையாளர் அல்லது குரு போலாகிவிடுவார்".
இப்படித் தான் ஒப்பந்தங்கள் உண்டாகும்.
"என் அறுவை சிகிச்சைக்கு நீ காசு தந்தால் ஆறு மாதங்கள் என் உடல் உனக்கு சொந்தம்" என்றுகூட அவள் சொல்ல வாய்ப்பிருக்கிறது" என்கிறார் பெட்ரோ.
இதுபோன்ற ஒப்பந்தங்கள் அறுவை சிகிச்சையோடு முடிந்துவிடுவதில்லை.
"ஏழைப் பெற்றோருக்குப் பிறந்த பெண்கள், தங்களுக்கு உதவும் ஆண் நண்பர்களைத் தேடுகிறார்கள்" ஒரு காருக்காகவோ பங்களாவுக்காகவோ பணத்துக்காகவோ சொகுசுப் பொருட்களுக்காகவோ கூட ஒரு ஆணுடன் பழக முன்வருவார்கள்" என்கிறார் பெட்ரோ.
சினலோவாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது. ஆயுதமேந்திய பல குழுக்களின் நடமாட்டத்தால் பல அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன. இதுபோன்ற ஒரு சூழலில், குரு போல ஒருவர் இருப்பது ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பைத் தருகிறது.
கார்மனும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தக் காரணத்துக்காகவே ஒரு நார்கோவுடன் பழகினார். சினலோவாவின் பெரிய நகரமான குலியகானைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஏழைக் குடும்பத்தில் பிறந்ததால் அவர் பல நாட்கள் பசியோடு வாழ வேண்டியிருந்தது.
"வறுமை காரணமாக என் குடும்பத்தினர் தர மறுத்த ஒரு வாழ்வை வாழ நான் விரும்பினேன். 16 வயதில் நான் தனியாக வசிக்கப்போகிறேன் என்று அம்மாவிடம் சொன்னேன். நீ ஒரு குழந்தை, நீ என்ன செய்வாய் என்று பாட்டி கேட்டார். எனக்குக் கையும் காலும் இருக்கிறது, நான் புத்திசாலி, பிழைத்துக் கொள்வேன் என்றேன்" என்கிறார்.
குலியகானில் குற்றப்பின்னணி கொண்ட குடும்பம் ஒன்றோடு அவர் வசிக்கத் தொடங்கினார். அங்கு அவர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானார். தான் சந்தித்த ஒருவரிடம் மனம் திறந்து இதைப் பகிர்ந்துகொண்டார்.
"நான் பயந்துபோயிருந்தேன் என்று அவர் புரிந்துகொண்டார். தன் தொலைபேசி எண்ணைக் கொடுத்தார். அந்த வீட்டை விட்டு தைரியமாக வெளியேறி அவருடன் தொடர்பில் இருந்தேன். காலப்போக்கில் அந்த உறவு பாலியல் சார்ந்த உறவாக மாறியது.
குலியகான் மாதிரியான ஒரு ஆபத்தான நகரத்தில் நீ ஒரு பெண்ணாக தனித்து இருக்கிறாய், நான் உன் காட்ஃபாதராக இருக்கிறேன் என்றார். அவர் என்னைப் பார்க்க விரும்பும் போது கூப்பிடுவார், நான் அவரை சந்திப்பேன், எல்லாருக்கும் என்னைத் தெரியும். இப்போது நான் தனியாக நடமாடுகிறேன், எனக்கு எதுவும் ஆகாது என்று எனக்குத் தெரியும்" என்கிறார்.
இதே போன்ற உறவுமுறையில் அவருடன் எத்தனை பெண்கள் பழகுகிறார்கள் என்பது கார்மனுக்குத் தெரியாது. கார்மன் தைரியமாக இருக்கிறார். உறுதியுடன் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்புகிறார், சொந்தமாக தொழில் தொடங்க விரும்புகிறார். சினலோவாவில் இருந்துகொண்டு தன் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டுமானால் ஆபத்தான இந்த மனிதனின் விருப்பங்களுக்கு வளைந்து கொடுக்க வேண்டும் என கணக்குப் போட்டிருக்கிறார்.
பட மூலாதாரம், US ATTORNEY'S OFFICE
"இன்றுவரை அவர் மீதான பயம் தெளியவில்லை. மாஃபியா பற்றியும் தன் தொழில் பற்றியும் அவர் பேசும்போது எனக்கு பயமாக இருக்கும். நான் கேட்டதையும் பார்த்ததையும் மறக்க முயற்சி செய்வேன், இல்லாவிட்டால் எனக்குப் பிரச்சனை வரும். அவர் மோசமானவராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அவர் தீய செயல்கள் செய்துள்ளார். என்னை அவர் துன்புறுத்தவில்லை என்றாலும் நினைத்தபோது அவரால் என்னைக் கொல்ல முடியும்" என்கிறார்.
அவரது சிறிய உடலமைப்பை மாற்றியமைக்குமாறு கார்மனின் காதலர் தொடர்ந்து அழுத்தம்கொடுத்து வருகிறார். இன்றுவரை கார்மன் அந்த அழுத்தத்துக்குப் பணியவில்லை.
"லா புகானாவாக மாற விரும்புகிற பெண்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தன் உடல் பற்றி ஒரு போதாமை உணர்வு இருக்கும்போல" என்கிறார்.
சினலோவாவின் பொது சமூகத்திடமும் இந்த பிளாஸ்டிக் சர்ஜரி மோகம் பரவியிருக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணர்களின் விளம்பரங்கள் குலியகானில் பரவலாக இருக்கின்றன.
உடனடியாகக் காசு தராவிட்டாலும் கடன் சொல்லிக்கொள்ளலாம் என்று அவை அறிவிக்கின்றன. பிறந்தநாளுக்கோ கிறிஸ்துமஸுக்கோ ஒரு பதின்பருவப் பெண் புதிய மார்பகங்களையோ மூக்குகளையோ பரிசாகப் பெறுவது சாதாரணமாகிவிட்டது. ஆண்களும் உடல் எடையைக் குறைத்துக் காட்டும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கிறார்கள்.
ஒரு பெரிய அழகு நிலையத்தை நடத்தி வரும் ஜெனட் க்விண்டேரோ கிட்டத்தட்ட 20 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டிருக்கிறார்.
"எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு பெண்ணுக்கு தன் உடலில் என்னென்ன பிடிக்காதோ அதையெல்லாம் மாற்றிக்கொள்ள முடியும். அறுவைசிகிச்சை அழகானது. என் 20களில் சினலோவாவிலேயே பெரிய புட்டங்கள் கொண்ட பெண்ணாக இருந்தேன். எல்லாரையும் போல இருக்கவே விரும்பினேன். இப்போது ட்ரெண்ட் மாறிவிட்டது, பெண்கள் மார்பு, புட்ட அளவைக் குறைத்துக் கொள்கிறார்கள்" என்கிறார்.
பட மூலாதாரம், ALAMY
38 வயதாகும் தொழில்முனைவோரான கேப்ரியலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு உறவுக்குப் பிறகு தன் சொந்தப் பணத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்மூலம் அவருக்கு அதீத வளைவுகளைக் கொண்ட அழகான உடல் வாகு கிடைத்தது.
"இதனால் நான் எதிர்பார்க்கும் ஒரு ஆணை இன்னும் சந்திக்க முடியவில்லை என்றாலும், இந்த உடல் என் தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. சினலோவாவில் பல பெண்கள் நார்கோ காதலர்களைத் தேடுகிறார்கள். நானோ புத்திசாலியான, உழைப்பாளியான நம்பிக்கைக்குரிய ஒருவனைத் தேடுகிறேன்" என்கிறார்.
ஆனால் இந்தப் பண்புகள் கொண்ட ஆண்களை சினலோவாவில் கண்டுபிடிப்பது கடினமானதுதான்.
"குறைந்தது 3,4 பெண்கள், காதலிகளுடன் ஆண்கள் இருப்பது இங்கே சகஜம். இங்கு அது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது". "காலம் போகப் போக ஆண்கள் வெட்கமின்றி நடந்துகொள்கிறார்கள். பணம் வருகிறது என்பதால் பெண்களும் அதை ஏற்றுக்கொள்கிறார்கள், நடப்பதைக் கண்டுகொள்ளாமல் உணராமல் இருக்கிறார்கள்" என்கிறார் கேப்ரியலா.
சினலோவாவின் பெண்களுக்காகப் பல தசாப்தங்களாகப் பேசிவரும் வழக்கறிஞர் மரியா தெரசா குவேரா, நார்கோ கலாச்சாரம் வந்தபிறகு பெண்கள் என்பவர்கள் ஆண்களால் உடைமையாக்கப்படும் பொருட்கள் என்பது போன்ற நிலை வந்துவிட்டது என்கிறார்.
இதனால் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்து வருவதைக் குறிப்பிடும் அவர், இந்த வன்முறை நார்கோ காதலர்களாலோ எதிரிகளாலோ நிகழ்த்தப்படுகிறது என்கிறார். "கடத்தல்காரரின் காதலியாக இருப்பதாலோ ஒரு ஆண் ஏமாற்றப்பட்டதாக உணரும்போதோ ஒரு பெண் கொல்லப்படுகிறாள். அவள் தன் உடைமை என்று அவன் அறிவிக்க விரும்புகிறான்" என்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
மெக்சிகோவின் மற்ற மாகாணங்களோடு ஒப்பிடும்போது சினலோவாவில் இருமடங்கு அதிக எண்ணிக்கையில் பெண்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு பலியாகின்றனர்.
"குலியகானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. அவர்களின் உடல்கள் எரிக்கப்படுகின்றன, அவர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். நார்கோவின் காதலி ஒருத்தியின் கதை நினைவுக்கு வருகிறது.
அவளது அறுவை சிகிச்சைக்கு அவன் பணம் கொடுத்தான். அவள் கொல்லப்பட்டபோது, அவன் பணம் தந்து உருமாற்றிய அவளது மார்புகளையும் இடையையும் குறிவைத்தே சுட்டார்கள் எதிரிகள். போதைப்பொருள் கடத்தல்காரர்களிடமிருந்து விலகியிருக்க விரும்பும் பெண்களுக்குக் கூட அது சிக்கலாகத்தான் இருக்கிறது.
அதிகாரிகளும் இந்தக் கலாச்சாரத்தை சரியாக எதிர்கொள்வதில்லை. இதற்கு எதிராக யாரும் போராடுவதில்லை. காப்பாற்றப்படுவது நார்கோக்கள்தான், பெண்கள் அல்ல" என்கிறார் குவேரா.
பெரிய கடத்தல்காரர் ஒருவருடன் ஆபத்தான உறவில் இருக்கும் கார்மனுக்கு இது புரிந்ததா என்று தெரியவில்லை. புரிந்தும் புரியாததுபோல் அவர் இருக்கலாம். அவரது உடலை மாற்றுவது பற்றிய அழுத்தத்துக்கு எதிராக நெடுநாட்கள் தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது என்பது மட்டும் அவருக்கு நிச்சயமாகத் தெரியும்.
"இப்போதைக்கு அவர் என்னை ஒரு தேவதையாக நடத்துகிறார்" என்கிறார்.
இருக்கலாம். ஆயுதமேந்திய சினலோவாவின் ஆண்களுக்கு எதிரே யாரும் நிற்க முடியாது.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தான் நகரங்களை நோக்கி முன்னேறும் தாலிபன்கள்: ஊரடங்கு போட்ட அரசாங்கம்
- தென்னாப்ரிக்காவில் இந்திய வம்சாவளியினர் தாக்கப்படுவது ஏன்? நிறப்பாகுபாடு காட்டுகிறார்களா?
- இலங்கை ஊடக ஜாம்பவான், ஆர்.ராஜமகேந்திரன் காலமானார்
- 30 ஆண்டு கால தாராளமய பொருளாதாரம்: நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் செய்த மாயாஜாலம்
- நடிகை யாஷிகா ஆனந்த் விபத்தில் படுகாயம்: தோழி பலி
- உத்தரபிரதேசத்தில் ஜீன்ஸ் அணிந்ததற்காக 17 வயது சிறுமி கொலையா? சம்பவத்தின் பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்