மலேசிய மாமன்னர், பிரதமர் இடையே மோதலா? - மொஹிதின் யாசின் மீது 'ராஜ துரோக' விமர்சனம்

மலேசிய பிரதமர்

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் ஆளும் பெரிக்கத்தான் நேசனல் அரசுக்கும் அந்நாட்டின் மாமன்னர் சுல்தான் அப்துல்லாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள திடீர் கருத்து வேறுபாடு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அவசரநிலை சட்டம் தொடர்பான மலேசிய அரசின் செயல்பாடு காரணமாக தாம் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாக மாமன்னர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மொஹிதின் யாசின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தி தலைநகர் கோலாலம்பூரில் இன்று காலை நடைபெற்ற போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியைக் கையாள்வதிலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் ஆளும் பெரிக்கத்தான் நேசனல் அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

மேலும், நாட்டில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டங்களை கடந்த 21ஆம் தேதியே திரும்பப் பெற்றுவிட்டதாக அரசாங்கம் தெரிவித்திருப்பதும் சர்ச்சையாகி உள்ளது.

அவசரநிலை சட்டங்களைத் திரும்பப் பெற மலேசிய மாமன்னரின் ஒப்புதல் தேவை. ஆனால்,

அதைப் பெற அரசாங்கம் தவறிவிட்டதாகவும், தமது ஒப்புதல் இன்றி அரசு செயல்பட்டுள்ளதாகவும் மாமன்னரே அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசுக்கும் அரண்மனைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அரசு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.

இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் 'எதிர்த்துப் போராடுவோம்' என்ற இயக்கத்தை சிலர் தொடங்கி உள்ளனர். அதன் மூலம் 'தோல்வியடைந்த அரசாங்கம்' எனும் முழக்கம் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட அவசரநிலை

மலேசியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து, நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், மலேசிய மாமன்னரின் ஒப்புதலைப் பெற்று கடந்த ஜனவரி 12ஆம் தேதி அவசரநிலையை அறிவித்தார் பிரதமர் மொஹிதின் யாசின். ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நாட்டில் அவசரநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கொரோனா பரவல் அதிகரிப்பால் ஜனவரி மாதம் நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது

கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த அவசரநிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், தேசிய தடுப்பூசித் திட்டம், தேசிய மீட்புத் திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இதையடுத்து, மலாய் ஆட்சியர்கள் எனக் குறிப்பிடப்படும் மாநில சுல்தான்களுடன் ஆலோசனை மேற்கொண்ட மாமன்னர், இயன்ற விரைவில் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு அரசுக்கு அறிவுறுத்தினார். அதன்படி, கடந்த 26ஆம் தேதி முதல் நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த 21ஆம் தேதியே அவசரநிலை சட்டங்களைத் திரும்பப் பெற்றுவிட்டதாக நாடாளுமன்றத்தில் மலேசிய சட்ட அமைச்சர் தக்கியுதின் ஹாசன் தெரிவித்தார். இதுவே தற்போதைய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

’எனது ஒப்புதலைப் பெறவில்லை’: மலேசிய மாமன்னர் வருத்தம்

அவசரகால சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான ஒப்புதலை தாம் வழங்கவில்லை என மாமன்னர் தெரிவித்துள்ளார்.

கடந்த 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பேசிய சட்ட அமைச்சர் தகியுதின், அவசர நிலையை நீட்டிப்பதில்லை என பெரிக்கத்தான் அரசாங்கம் முடிவெடுத்து இருப்பதாவும், அவசரகால சட்டங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு நீடிக்காது என்றும் குறிப்பிட்டார்.

இதற்கு மாமன்னரின் ஒப்புதல் பெறப்பட்டதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அரசாங்கம் முன்வைத்த பதில் எதிர்க்கட்சிகளுக்கு திருப்தி அளிக்காத நிலையில், மாமன்னரின் அறிக்கையை வெளியிட்டது அரண்மனை.

பட மூலாதாரம், IstanaNegaraOfficial /Facebook

அவசரநிலை அறிவிப்பை திரும்பப் பெறுவது தொடர்பில் தாம் எந்தவித ஒப்புதலும் அளிக்கவில்லை என்றும், சட்ட அமைச்சர் தக்கியுதின், அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ இட்ருஸ் ஹாருடனான காணொளி வழிச் சந்திப்பின்போது இதுகுறித்து தமக்கு எந்தவித விவரமும் தெரிவிக்கப்படவில்லை என்றும் மாமன்னர் கூறியுள்ளார்.

"ஜூலை 26ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியான அறிவிப்பால் மாமன்னர் வருத்தம் அடைந்துள்ளார். அவரது ஒப்புதலின் பேரில் அவசரநிலை காலம் முழுவதும் அமலில் இருந்த அனைத்துச் சட்டங்களையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளது. இது மாமன்னரை மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது," என்று அரண்மனைக் காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசாங்கம் செயல்பட்டுள்ளது: பிரதமர் அலுவலகம்

இந்நிலையில், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே அவசரகால சட்டங்கள் திரும்பப் பெறப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மலேசிய பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நடவடிக்கை தொடர்பாக கடந்த 23ஆம் தேதி கடிதம் வழி மாமன்னருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதாகவும் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

மலேசிய பிரதமர் பதவி விலகுவாரா? அடுத்து என்ன நடக்கும்?

மாமன்னர் அறிக்கைக்குப் பின்னர் நிலவும் பரபரப்பின் உச்சகட்டமாக பிரதமர் மொஹிதின் யாசின் பதவி விலகுவாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. அவர் அரண்மனைக்கு எதிராகச் செயல்படுவதாகவும், ராஜ துரோகம் இழைத்துவிட்டதாகவும் பல்வேறு தரப்பினர் விமர்சித்துள்ளனர்.

பிரதமர் உடனடியாக நாடாளுமன்றத்தில் தமக்குள்ள பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், முன்னாள் பிரதமர் மகாதீர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :