கொரோனா வைரஸ்: சீனாவின் 'ஜீரோ கோவிட் திட்டம்' - அச்சுறுத்தும் 'டெல்டா திரிபு'

  • டெஸ்ஸா வாங்
  • பிபிசி செய்திகள்
சீனாவில் கொரோனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சீனாவில் கொரோனா

கொரோனா வைரஸ் இல்லாத இடமாக தமது நாட்டை மாற்ற சீனா முற்பட்டிருக்கும் வேளையில், கொரோனா டெல்டா திரிபு அதன் நடவடிக்கையில் மிகப்பெரிய அச்சுறுத்தலாகியிருக்கிறது. எப்படி இது நிகழ்ந்தது?

ஏர் சீனா சிஏ 910 விமானம் ஜூலை 10ஆம் தேதியன்று சீன நகரமான நாஞ்சிங்கில் தரை இறங்கிய போது, மாஸ்கோவிலிருந்து பயணம் செய்தவர்களில் ஒருவருக்கு கொரோனாவின் 'டெல்டா திரிபு' இருந்தது.

அவர்கள் விமானத்தை விட்டு வெளியேறிய பிறகு, நாஞ்சிங் லுகோ விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் விமானத்தை சுத்தம் செய்ய உள்ளே நுழைந்தனர்.

அந்த ஊழியர்கள் விமானத்தில் இருந்து வெளியேறியபோது அவர்கள் கொரோனா டெல்டா திரிபையும் வெளி உலகிற்கு கொண்டு வந்தனர் என்கிறார்கள் சீன அதிகாரிகள் தரப்பினர்.

இந்த வகை கொரோனாதான், வூஹான் நகருக்குப் பிறகு சீனாவில் இப்போது பெரிய பரவலாக மாறி இருக்கிறது.

கடந்த சில வாரங்களில், கோடைகால பயணத்தின் உச்சத்தில், கொரோனா வைரஸ் டெல்டா திரிபு குறைந்தது 16 சீன மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. பல க்ளஸ்டர்கள் நாஞ்சிங்கோடு தொடர்புடையதாக உள்ளன.

சில நூறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், பெய்ஜிங், ஷாங்காய், வூஹான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வைரஸ் தோன்றியதில் பலருக்கு அச்சமில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சீனாவில் கொரோனா

கொரோனா பரவலுக்கு பதிலளிக்கும் விதமாக, சீனா தன் வழக்கமான முறைகளில் இருந்து பின்வாங்கியுள்ளது. இந்த முறை லட்சக் கணக்கானவர்கள் சோதிக்கப்பட்டனர், சில நேரங்களில் ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். நகரங்களில் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டன, சில பகுதிகளில் போக்குவரத்து இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சீனாவில் மட்டுமல்ல, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் போன்ற பிற இடங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகள் காணப்படுகின்றன. இதை பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அல்லது தொடக்கத்திலேயே நோயை ஒழிக்கும் உத்தி என்கிறார்கள் நிபுணர்கள்.

கொரோனா டெல்டா திரிபின் பரவல் வேகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது, சீனாவின் இந்த அணுகுமுறை உண்மையிலேயே நீடித்த பலனைக் கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது.

'பிடித்த உடன் கொல்லுங்கள்'

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கொரோனா சோதனை மேற்கொள்ளப்படும் சீனர்கள்

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக, மக்கள் தங்களின் பாதுகாப்பு நடைமுறைகளை கைவிடும் அறிகுறிகள் இருந்தன. அதை நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாஞ்சிங்கிற்கு முன்பு, குவாங்டாங் பகுதியிலும், ரஷ்யா மற்றும் மியான்மரின் எல்லைகளிலும் பல சிறிய நோய் பரவல் சம்பவங்கள் இருந்தன.

தொற்றுநோயின் தொடக்கத்தை விட முகக் கவசம் அணிவது குறைந்து விட்டது. மக்கள் கூட்டமாக கூடுவது மீண்டும் வழக்கமாகி விட்டது. ஹூனான் மாகாணத்தில் உள்ள சுற்றுலா தலமான ஜாங்ஜியாஜியில் ஒரு அரங்க நிகழ்ச்சி, சுமார் 2,000 பேர் கலந்து கொண்டனர், தற்போதைய நோய் பரவலில் இது சாத்தியமான சூப்பர்-ஸ்ப்ரெடர் நிகழ்வாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

நாஞ்சிங் விமான நிலையத்தில் நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

விமான நிலையத்தின் துப்புரவு பணியாளர்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவில்லை என அதிகாரிகள் நம்புகிறார்கள், மேலும் கோவிட்-பாசிட்டிவ் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக விமானம் பல முறை பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும், விமானம் தரையிறங்க அனுமதிக்கப்பட்டதாக ஒப்புக்கொண்டனர்.

தளர்வான அணுகுமுறைகளிலிருந்து கடினமான பொது முடக்கத்துக்கு விரைவாக மாறுவது சீன நிர்வாகத்தில் இருக்கும் ஒரு பொது சிக்கலை விளக்குகிறது என்கிறார் ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணர் ஜின் டோங்யான்.

"நீங்கள் பிடிக்கும்போது கொன்றுவிடு, அதை போகவிட்டால் குழப்பம் ஏற்படும்" என ஒரு பழமொழி உண்டு. சீன பாணி மிகவும் தீவிரமானது," என அவர் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கொரோனா வைரஸ்

இதற்கு மத்தியில் நாஞ்சிங்கில் கொரோனாவால் தொடக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பலரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என அதிகாரிகள் கூறிய பிறகு, சீன தடுப்பூசிகள் பயனுள்ளதா என்று சிலர் கவலைப்படத் தொடங்கி உள்ளனர்.

பூஸ்டர் ஷாட்கள் ( முழுமையாக தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் வழங்கப்படும் ஊக்குவிப்பு டோஸ்கள்) கொடுப்பதைக் குறித்து ஆலோசித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோயைத் தடுக்கக்கூடிய தடுப்பூசி இல்லை என்றாலும், "தற்போது பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் வைரஸின் அனைத்து திரிபுகளையும் கட்டுப்படுத்தக் கூடியது தான் என கூறியுள்ளார் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தைச் சேர்ந்த ஷாவோ யிமிங்.

சீனா ஏற்கனவே 1.7 பில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை வழங்கியுள்ளது, இருப்பினும் எத்தனை பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கூறவில்லை.

பரவலாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு, மற்ற நாடுகள் தங்கள் எல்லைகளைத் திறந்திருக்கின்றன. சமீபத்தைய வெடிப்புக்கு பதிலளித்த விதத்தை வைத்துப் பார்க்கும்போது, சீனா தன்னை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை என்பது போலத் தெரிகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

"தங்கள் தடுப்பூசிகளின் மீது இருக்கும் இந்த நம்பிக்கையின்மை போலத் தோன்றுகிறது, இது அவர்கள் தந்திரத்தின் தொடர்ச்சியை நியாயப்படுத்துகிறது" என வெளிநாட்டு உறவுகளுக்கான கவுன்சிலைச் சேர்ந்த யான்சோங் ஹுவாங் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கொரோனா வைரஸ்

சமீபத்திய குளோபல் டைம்ஸ் தலையங்கம் இங்கிலாந்தின் பாணியில் மீண்டும் திறக்கும் யோசனையை நிராகரித்துள்ளது.

இது "கற்பனை செய்ய முடியாத சமூக செலவுகள் மற்றும் வலியை" ஏற்படுத்தும் என்பதால், "இது கிட்டத்தட்ட அரசியல் ரீதியாக சிந்திக்க முடியாதது" என கூறியுள்ளது அப்பத்திரிகை.

அதற்கு பதிலாக வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ளும் விதத்தில் "கட்டுப்படுத்தக்கூடிய ஜன்னல்கள்" கொண்ட "டைனமிக் ஜீரோ கொரோனா" அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

சமீபத்திய வெடிப்பு "மீண்டும் எப்போதும் இருக்கும் வைரஸை நமக்கு மீண்டும் நினைவூட்டுகிறது" என கைக்சின் குளோபல் என்கிற பத்திரிகையில், மருத்துவ நிபுணர் ஜாங் வென்ஹாங் ஒப்புக் கொண்டார்.

"நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், எதிர்காலத்தில் எப்போதுமே ஆபத்துகள் இருக்கும்," என்று அவர் கூறியுள்ளார். சீனா தன் குடிமக்களை வைரஸ் பயத்திலிருந்து பாதுகாக்கும் அதே நேரத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதை ஊக்குவிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.

போர்

பட மூலாதாரம், Getty Images

வழக்குகளைக் காட்டிலும் இறப்புகளைக் குறைக்கும் உத்திக்கு திடீரென எளிதில் மாற்ற முடியாது.

ஆபத்தை விரும்பாத சீன பொதுமக்களை எப்படி சம்மதிக்க வைப்பது என்பது தான் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்று என ஜாங் குறிப்பதாகத் தோன்றியது.

"அவர்களுக்கு வூஹானில் என்ன நடந்தது என்பதில் அவர்களுக்கு ஒரு பெரிய அனுபவம் இருக்கிறது, சுகாதார அமைப்புகள் முற்றிலுமாக தத்தளித்தன. அவர்கள் மீண்டும் நாட்டைத் திறந்தால், சீன சுகாதார அமைப்பால் [மற்றொரு நோஉ பரவலை] கையாள முடியாது என்று அவர்கள் பயப்படுகிறார்கள், குறிப்பாக கிராமப்புறங்களில்" என்கிறார் பேராசிரியர் ஹுவாங்.

பேராசிரியர் ஜின், மாநில ஊடகங்கள் வைரஸை சித்தரிக்கும் விதம் இந்த பயத்தை தூண்டியது என்கிறார்.

பூஜ்ஜிய கோவிட் வெற்றிகள் சீன அரசாங்கத்தை "இந்த அணுகுமுறை மேற்கத்திய அணுகுமுறையை விட உயர்ந்தது என்று கூற அனுமதித்தது, மேலும் சீன அரசியல் அமைப்பின் மேன்மையைக் கூட போற்றிக் கூறுகிறது" என பேராசிரியர் ஹுவாங் கூறினார்.

"அவர்கள் அதைக் கைவிட்டு, தணிப்பு முறைக்குத் திரும்பினால், அவர்கள் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்த மேற்கத்திய அணுகுமுறையை ஆதரிக்கிறார்கள் என்று பொருள்படும்."

வூஹானில் கொரோனா பரவத் தொடங்கியதிலிருந்து ஒப்பீட்டளவில் குறைவான இறப்புகளும், மீண்டு வரும் பொருளாதாரம் போன்ற காரணங்களால், சீனாவில் மாற்றம் தேவை என சிலர் கருதவில்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சீன பொருளாதாரம்

ஆனால் நீண்ட கால பூஜ்ஜிய கோவிட் தந்திரத்தில் சில அபாயங்களையும் கொண்டுள்ளது.

ஊரடங்குகள் மற்றவர்களை விட ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கின்றன, மேலும் நீண்ட காலத்தில் பார்க்கும் போது அது மக்களின் மன நலனையும் பாதிக்கும் என வாஷிங்டன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பயோ எதிக்ஸ் பேராசிரியர் நான்சி ஜெக்கர் சுட்டிக்காட்டினார்.

"சீனா போதுமான அளவு வேகமாக மாறவில்லை என்றால், சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

உள்ளூர்மயமாக்கப்பட்ட ஊரடங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும் போது பள்ளிகள் திறந்திருக்க அனுமதிப்பது போன்ற சில குழுக்களுக்கு முன்னுரிமை அளிப்பது போன்ற நுணுக்கமான அணுகுமுறைக்கு அவர் அழைப்பு விடுக்கிறார்.

மற்ற நாடுகள் மீண்டும் திறக்கப்படும்போது சீனாவுக்கான நீண்டகால பிம்பப் பிரச்னை குறித்து எச்சரித்தார் பேராசிரியர் ஹுவாங்.

ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற கோவிட் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நாடுகள் சமீபத்தில் 80% தடுப்பூசி விகிதங்களை அறிவித்துள்ளன.

இறுதியில் உலகம் இரண்டு வகையான நாடுகளாகப் பிரிக்கப்படும் என கூறும் பேராசிரியர் ஜெக்கர், அதில் ஒன்று பூஜ்ஜிய கோவிட் உத்தியைத் தொடர்ந்து பின்பற்றுபவர்கள் மற்றும் தணிப்புத் திட்டத்துக்கு மாறியவர்கள் என்று வகைப்படுத்துகிறார்.

"ஆனால் இறுதியில் நமக்கு இந்த வைரஸுடன் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை. தொற்றுக்குப் பிந்தைய கட்டத்தில், இறப்புகள் குறையும், ஆனால் வைரஸ் ஆண்டுதோறும் குளிர் காலம் வருவது போல மீண்டும், மீண்டும் தோன்றக்கூடும்," என்று அவர் கூறுகிறார்.

"அது சரியாக இருந்தால், சீனா அதனுடன் வாழ வேண்டி இருக்கும்."

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :