பருவநிலை மாற்றம்: சீனாவின் கொள்கைகளுக்கு உலக அரங்கு ஏன் இவ்வளவு கவனம் கொடுக்கிறது?

  • டேவிட் பிரவுன்
  • பிபிசி செய்திகள்
சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சீன பொருளாதாரம்

சீனா தன் கார்பன் உமிழ்வு அளவை கணிசமாக குறைக்கவில்லை எனில், உலகம் தன் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் வெற்றி காண முடியாது என நிபுணர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

2030ஆம் ஆண்டுக்கு முன்பே சீனா தன் உச்சகட்ட கார்பன் உமிழ்வை அடையும் என கூறியுள்ளார் சீன அதிபர் ஷி ஜின்பிங். 2060ஆம் ஆண்டுக்குள் சீனா கார்பன் நியூட்ராலிட்டி (நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு) நிலையை அடையும் எனவும் கூறியுள்ளார்.

ஆனால் எப்படி இந்த மிகப் பெரிய இலக்கை அடையப் போகிறார்கள் எனக் கூறவில்லை.

அதீத வளர்ச்சி

உலக நாடுகள் அனைத்தும் தங்கள் கார்பன் வெளியீட்டு அளவைக் குறைக்க போராடிக் கொண்டிருக்கிறது. அதில் சீனாவும் அடக்கம்.

உலகிலேயே மிக அதிக அளவில் கார்பன் உமிழும் நாடாக இருக்கிறது சீனா. 140 கோடி மக்கள் தொகை, அதிரடி பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகள் தான், எல்லா நாடுகளை விடவும் சீனா அதிகமாக கார்பன் உமிழ காரணமாக அமைந்தது.

சீனா 2006ஆம் ஆண்டு உலகிலேயே அதிக கார்பன் டை ஆக்ஸைடை உமிழும் நாடாக உருவெடுத்தது. தற்போது உலக அளவில் 25 சதவீத பசுமை இல்ல வாயுவை உமிழும் நாடாகவும் இருக்கிறது சீனா.

நிலக்கரியில் இருந்து மாற்று

படக்குறிப்பு,

நிலக்கரியை அதிகம் சார்ந்திருக்கும் சீனா

சீனா கார்பன் உமிழ்வைக் குறைப்பது சாத்தியமானது தான் என்கிறார்கள் நிபுணர்கள். ஆனால் மிகப் பெரிய மாற்றங்கள் தேவை எனவு சுட்டிக் காட்டுகிறார்கள்.

கடந்த பல தசாப்தங்களாக சீனாவின் எரிசக்திக்கு நிலக்கரி தான் முக்கிய எரிபொருளாக இருந்து வருகிறது. தற்போது கூட சீனாவில் நிலக்கரிக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

2026ஆம் ஆண்டிலிருந்து சீனா நிலக்கரி பயன்பாட்டை குறைக்கத் தொடங்கும் என அறிவித்தது, நியாயமல்ல என பல அரசாங்கங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பிரசாரகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

2050ஆம் ஆண்டு முதல் சீனா மின்சாரத்தைத் தயாரிக்க முழுமையாக நிலக்கரி பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என பீஜிங்கில் இருக்கும் சிங்குவா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

ஆனால், சீனாவில் 60-க்கு மேற்பட்ட இடங்களில் புதிதாக நிலக்கரியைப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. இதில் சில இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் நிலையங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

பொதுவாக புதிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் 30 - 40 ஆண்டுகள் செயல்படும். எனவே சீனா மின் நிலையங்களின் உற்பத்தி அளவைக் குறைக்க வேண்டும், அதே நேரத்தில் பழைய நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை மூட வேண்டும் என பாரிஸில் உள்ள சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃபிலிப்பெ கெய்ஸ் கூறுகிறார்.

மேற்குலக நாடுகள் கடந்த காலங்களில் செய்ததைப் போல, சீனாவுக்கும் தன் பொருளாதாரத்தை மேம்படுத்தவது மற்றும் வறுமையை குறைக்கும் முனைப்பில் கார்பன் டை ஆக்ஸைடை வெளியிடும் உரிமை உள்ளது என்கிறது சீனா.

சீனா தன் நாட்டில் மட்டுமின்றி, நாட்டுக்கு வெளியிலும் பெல்ட் அண்ட் ரோட் திட்டம் மூலம் நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு செயல்படும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மரபுசாரா எரிசக்தி நோக்கிய பயணத்தில் சீனா

படக்குறிப்பு,

சோலார் மின்சார உற்பத்தியில் சீனா

2050ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த மின் உற்பத்தியில் 90 சதவீதம் அணுசக்தி மற்றும் மரபுசாரா எரிசக்தியில் இருந்து வர வேண்டும் என்கிறது சிங்குவா பல்கலைக்கழகம்

சீனாவில் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வரும் சோலார் ஒளித்தகடுகள், மின்கலங்கள் போன்றவை, சீனா அத்திசையில் பயணித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. சீனா தன் இலக்கை அடைய இதெல்லாம் உதவும்.

சீனா தன் நாட்டில் காற்று மாசுபாட்டைக் குறைக்க, மரபுசாரா எரிசக்தி பக்கம் திரும்பியது. பிறகு வெளிநாட்டு கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை நம்பி இருக்காமல், மரபுசாரா எரிசக்தி துறை மூலம் சீனாவிலேயே லட்சக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்கிற பொருளாதார வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறது.

"சீனா மரபுசாரா எரிசக்தியை நோக்கிய பயணத்தில் முன்னிலை வகிக்கிறது" என்கிறார் ஓவர்சீஸ் டெவலெப்மெண்ட் இன்ஸ்டிட்யூட் அமைப்பைச் சேர்ந்த யூ காவ். "விலை மலிவான மரபுசாரா எரிசக்திக்கு சீனா தான் காரணம்" என்கிறார்.

உலகிலேயே சீனா தான் அதிக அளவில் சோலார் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. 2020ஆம் ஆண்டில் மற்ற எந்த நாட்டை விடவும் மூன்று மடங்கு அதிகமாக காற்றாலைகளை நிறுவியது.

2030ஆம் ஆண்டுக்குள் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மரபுசாரா எரிசக்தி ஒட்டு மொத்த மின் உற்பத்தியில் 25 சதவீதமாக இருக்க வேண்டும் என்கிறது சீனா. இந்த இலக்கை 2030ஆம் ஆண்டுக்கு முன்பே சீனா அடைந்துவிடும் என பலரும் கருதுகின்றனர்.

மின்சார வாகனங்கள்

படக்குறிப்பு,

மின்சார வாகனங்களை வாங்கும் சீனர்கள்

ஒரு நாட்டின் மொத்த கார் விற்பனையில் அதிக மின்சார வாகனங்கள் விற்பனையாகும் நாடுகள் (சதவீத கணக்கில்) பட்டியலில் சீனாவுக்கு ஏழாவது இடம். ஆனால் எண்ணிக்கை அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது.

மின்சார வாகனங்களுக்கு மாறுவதால் கார்பன் உமிழ்வு எவ்வளவு குறையும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை விட மின்சார வாகனங்களின் கார்பன் உமிழ்வு காலப் போக்கில் குறைவாகவே இருக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஒட்டுமொத்த கார்பன் உமிழ்வில் சுமார் 25 சதவீத உமிழ்வு சாலை போக்குவரத்து வாகனங்களில் இருந்து வருகின்றன. எனவே இதுவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்குள், உலக நாடுகள் கண்டுபிடித்திருக்கும் கொள்ளளவை விட இரு மடங்கு அதிக திறன் கொண்ட மின்கலன்களை சீனா உற்பத்தி செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இது மரபுசாரா எரிசக்தி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை சேகரிக்கும் மற்றும் பயன்படுத்தும் அளவை கணிசமாக மாற்றும் என இது தொடர்பான விவரங்களை கண்காணித்து வருபவர்கள் கூறுகிறார்கள்.

மரம் வளர்ப்பு

படக்குறிப்பு,

பசுமை அடைந்து வரும் சீனா

நிகர பூஜ்ஜிய பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வு என்றால், சீனா பசுமை இல்ல வாயுக்களை வெளியிடாது என்று பொருளல்ல. சீனா வெளியிடும் கார்பனை கணிசமான அளவுக்கு குறைக்கும் என்று பொருள்.

அதிகம் மரம் வளர்ப்பது கார்பன் வெளியீட்டைக் குறைக்கும். உலக நாடுகளோடு ஒப்பிடும் போது அதிவேகமாக சீனாவில் பசுமை பரப்புகள் விரிவடைந்து வருகின்றன. மண் அரிப்பு, மாசுபாடு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க காடுகளை வளர்க்கும் திட்டங்கள் மூலம் இது சாத்தியமாகி இருக்கிறது.

மேலும், ஒரு ஆண்டில் விவசாய நிலங்களில் ஒரு போகத்தைத் தாண்டி கூடுதல் போகங்கள் பயிர் செய்வதும் சீனாவின் நில பரப்பை பசுமையாக வைத்திருக்க உதவுகிறது.

அடுத்து என்ன?

சீனா வெற்றி பெற வேண்டும் என உலகம் எதிர்பார்க்கிறது.

"சீனா கார்பன் உமிழ்வு பிரச்சனையை சமாளிக்காத வரை, நம்மால் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க முடியாது" என்கிறார் லான்காஸ்டர் சுற்றுச்சூழல் மையத்தின் பேராசிரியர் டேவிட் டைஃபீல்ட்.

நீண்ட கால உத்திகளைக் கடைப்பிடிக்கும் மற்றும் பெரிய அளவிலான முதலீடுகளைத் திரட்டும் திறன் என சீனா சில நன்மைகளைக் கொண்டுள்ளது. சீன அதிகாரிகள் மாபெரும் பணியை எதிர்கொள்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :