ஆப்கானிஸ்தான் அல்காய்தா, ஐஎஸ் அமைப்புகளின் கூடாரமாகுமா? கள நிலவரம்
- ஃப்ராங்க் கார்ட்னர்
- பாதுகாப்பு செய்தியாளர்

பட மூலாதாரம், Reuters
ஆப்கானிஸ்தானின் சாலைகளில் நடமாடும் தாலிபன்கள்
ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பைன் மரங்கள் நிறைந்த பள்ளத்தாக்குகளிலும், ஆன்லைன் ஜிஹாதிகளின் அரட்டை மன்றங்களிலும் அல்-காய்தா ஆதரவாளர்கள் இது தாலிபன்களின் "வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி" என மகிழ்ச்சியடைகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன் தாலிபன் மற்றும் அல்-காய்தா ஆகிய இரு அமைப்புகளையும் தற்காலிகமாக வெளியேற்றிய, மேற்குலக படைகளின் அவமானகரமான பின்வாங்கலுக்குப் பிறகு, உலகெங்கிலும் மேற்குலகுக்கு எதிர் மனநிலையில் இருக்கும் ஜிஹாதிகளுக்கு இது ஒரு பெரிய மன உறுதியாக அமைந்திருக்கிறது.
இராக் மற்றும் சிரியாவில் சுயமாக அறிவித்துக் கொண்டு ஆட்சி செய்த இஸ்லாமிய அரசு தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஒரு புதிய தளத்தைக் கண்டுபிடிக்க விரும்பும் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) குழுவுக்கு ஆப்கானிஸ்தான் ஒரு நல்ல மறைவிடமாக அமையலாம்.
அல்-காய்தா ஆப்கானிஸ்தானுக்குத் திரும்புவதைத் தவிர்க்க முடியாது, என மேற்கத்திய படைகளின் ஜெனரல்களும் அரசியல்வாதிகளும் எச்சரிக்கிறார்கள்.
ஓர் அவசர நெருக்கடி கூட்டத்துக்குப் பிறகு பேசிய பிரிட்டன் நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கானிஸ்தான் மீண்டும் சர்வதேச பயங்கரவாத குழுக்களின் புகலிடமாக மாறுவதை தடுக்க மேற்கத்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என எச்சரித்தார்.
கடந்த திங்களன்று, ஆப்கானிஸ்தானில் நிலவும் உலகளாவிய பயங்கரவாத அச்சுறுத்தலை ஒடுக்க தங்களிடம் இருக்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த ஐநா பாதுகாப்பு சபைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ்.
ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் அதிகாரத்துக்கு திரும்புவது, அல்-காய்தாவின் வருகைக்கு வழிவகுக்குமா? அது மேற்குலக நாடுகளுக்கு எதிரான தீவிரவாத செயல்களுக்கான தளமாகுமா?
அப்படி நடக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
அங்கீகாரத்திற்கான தேடல்
பட மூலாதாரம், Getty Images
ஆயுதத்தோடு நடமாடும் போராளிகள்
கடந்த 1996 - 2001 வரை, தாலிபன்கள் முழு நாட்டையும் ஆட்சி செய்தனர், எதார்த்தத்தில் பல நாடுகள் ஆப்கானிஸ்தானைச் சேர்த்துக் கொள்ளாமல், ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
செளதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே அந்நாட்டை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தன.
தாலிபன்கள் தங்களின் சொந்த மக்களை மிருகத்தனமாக தாக்கியதோடு, ஒசாமா பின்லேடனின் அல்-காய்தா அமைப்புக்கு தாலிபன்கள் பாதுகாப்பான சரணாலயமாகத் திகழ்ந்தனர், அதே அமைப்பு 2001 இல் அமெரிக்காவில் 9/11 தாக்குதல்களை நடத்தியது, கிட்டத்தட்ட 3,000 பேர் பலியாயினர்.
உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 20,000 போராளிகள் அல்-காய்தாவின் பயிற்சி முகாம்களில் அதிபயங்கர பயிற்சி பெற்று தங்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது ஆப்கான் தீவிரவாத பல்கலைக்கழகம் என்று அறியப்பட்டது.
இன்றும் தாங்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் கூட, ஆப்கானிஸ்தானை ஆளும் உரிமை டங்கள்க்குத் தான் உள்ளது என தாலிபன்கள் கருதுகின்றனர். அதோடு கொஞ்சம் சர்வதேச அங்கீகாரங்களையும் எதிர்பார்க்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட ஊழல், மோதல்களுக்குப் பிறகு, ஒழுங்கு, அமைதி மற்றும் அதிகாரத்தை நிலைநாட்ட வந்திருக்கிறார்கள் என்கிற கருத்தை நிறுவி வெளிப்படுத்த விரும்புவது போலத் தோன்றுகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஆயுதத்தோடு நடமாடும் போராளிகள்
தோஹாவில் நடந்த தோல்வியுற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் போது கூட, அல்-காய்தாவில் இருந்து தங்களை முற்றிலுமாக விலக்கிக் கொண்டால் தான் அவர்கள் விரும்பும் அங்கீகாரம் கிடைக்கும் என தாலிபன் பேச்சுவார்த்தையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் ஏற்கனவே அல்-காய்தாவிடம் இருந்து ஒதுங்கி இருக்கிறோம் என்றது தாலிபன். ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையோ அப்படி செய்யவில்லை என்றது. மேலும் தாலிபன் மற்றும் அல்-காஉதாவுக்கு மத்தியில் இருக்கும் மலைவாழ் மற்றும் திருமண பந்த தொடர்புகளை சுட்டிக்காட்டியது.
தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை வியத்தகு முறையில் கைப்பற்றியபோது, "வெளிநாட்டவர்கள்" தாலிபன்கள் தரப்பில், அதாவது ஆப்கானிஸ்தான் அல்லாத போராளிகளைப் பார்த்ததாக பல அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.
தாலிபனின் ஒருசாரார் பேசும் மிதமான, நடைமுறை எதார்த்த வார்த்தைகளும் - பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் தாலிபன் தரப்பினரின் சொற்களுக்கும், களத்தில் நடக்கும் சில காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கும் இடையே ஒரு ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகிறது.
ஆகஸ்ட் 12ஆம் தேதி, தாலிபன்கள் தலைநகரில் முன்னேறிக் கொண்டிருக்கையில், தாலிபன்களின் தோஹா அறிக்கைகள் உள்ள விஷயங்கள் படாக்ஷான், கஜினி, ஹெல்மண்ட், காந்தஹார் ஆகிய இடங்களில் எதிரொலிக்கவில்லை. வன்முறையின் மூலம் அதிகாரத்தை ஏகபோகமாக்கும் முயற்சிகள், பயம், போர், சர்வதேச தனிமைப்படுத்தலுக்கு மட்டுமே வழிவகுக்கும்" என ட்விட்டரில் பதிவிட்டார் காபூலில் இருந்த அமெரிக்க பொறுப்பாளர்.
மேற்கு நாடுகள் ஜிஹாதிகளை அடக்க போராடலாம்
பட மூலாதாரம், Getty Images
ஒசாமா பின் லேடன்
ஆப்கானிஸ்தானில் தங்களின் கடுமையான இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி செய்ய மட்டுமே விரும்புகிறது தாலிபன்.
ஆனால் அல்-காய்தா மற்றும் ஐஎஸ்ஸில் உள்ள மற்ற ஜிஹாதிகளுக்கு எல்லைகளுக்கு அப்பால் செல்லும் லட்சியங்கள் இருக்கலாம். புதிய தாலிபன் அரசும் அவர்களை கட்டுப்படுத்தலாம்.
ஆசியா பசிபிக் அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர் சஜ்ஜன் கோஹல், தற்போது குனாரில் இருப்பதாகக் கருதப்படும் 200 - 500 அல்-காய்தா உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்.
"தாலிபன்கள் கைப்பற்றியுள்ள குனார் மாகாணம் மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது. காரணம் அப்பகுதி அடர்ந்த காடுகளால் நிறைந்த பள்ளத்தாக்குகளைக் கொண்ட சவாலான நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. ஏற்கனவே அல்காய்தா அப்பகுதியில் இருப்பதால் மேலும் அங்கு அல்காய்தா விரிவடையலாம்"
அப்படி நடந்தால், மேற்குலகம் அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் NDS என்றழைக்கப்பட்ட, ஆப்கானிய உளவுத்துறையை பெரிதும் நம்பியிருந்தது, மனித தகவல் அளிப்பவர்களின் அமைப்புகளோடும், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆப்கானிஸ்தான் சிறப்புப் படைகளின் துரித எதிர்வினைக் குழுக்களும் அதில் இடம்பெற்றிருந்தன.
உளவுத்துறை மொழியில் சொல்வதென்றால், அந்த காலம் எல்லாம் இப்போது மலையேறி விட்டது.
ஒருவேளை பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் இனி ஆப்கானிஸ்தானில் காணப்பட்டால், அதை இலக்கு வைத்து அழிக்க அமெரிக்க ட்ரோன்களாலோ கப்பலில் இருந்து ஏவுகணை மூலம் தாக்குவதோ கடினமான காரியமாகும். 1998இல் ஒசாமா பின்லேடனை இலக்கு வைத்தது போல் எல்லாம் இனி அந்த வல்லரசு நாடுகளால் முடியாது.
இருந்தபோதும், ஆப்கன் போராளிகளை தமது நாட்டுப் பிராந்தியத்துக்குள் பாகிஸ்தான் அனுமதிப்பைப் பொறுத்தே இதில் மேலும் நிலைமை எப்படி இருக்கும் என்பது தெரிய வரும் என்கிறார் கோஹல்.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவின் 'மகா ஆட்டம்' - என்ன நடக்கப் போகிறது?
- மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி: அவசரப்பட்டு விட்டாரா ராமதாஸ்?
- முத்த வரலாறு: மனிதர்கள் ஏன் முத்தம் கொடுக்கிறார்கள்?
- கொரோனா வைரஸ் ஆடும் பரமபதம் - கவலையில் அமெரிக்க மருத்துவர்கள்
- ஆப்கானிஸ்தான் அதிர்ந்து கொண்டிருந்த நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்
- ஆப்கன் ஆபத்தை விவரிக்கும் காட்சிகள் - ஓடுபாதையில் புறப்பட்ட விமானத்தில் ஏறிய மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்