ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆயுதங்கள் என்னென்ன? எங்கிருந்து கிடைக்கின்றன? ராணுவம் அஞ்சியது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
ஆப்கானிஸ்தானிலேயே அதிக வலிமை கொண்ட தரப்பு எது என்று கேட்டால் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படை, அதன் பிறகு ஆப்கானிஸ்தானிய ராணுவம், கடைசியில் தாலிபன்கள் என்றுதான் வரிசைப்படுத்த முடியும்.
எண்ணிக்கையிலும் அளவிலும் ஆப்கானிஸ்தானின் அரசுப் படைகள்தான் மிகப் பெரியவை. தாலிபன்கள் என்ற ஓர் ஆயுதக் குழுவிடம் அவர்கள் இவ்வளவு எளிதாக வீழ்ந்திருக்கக்கூடாது என்பதுதான் ஒரு சராசரியான கணிப்பாக இருக்கும்.
ஆனால் மிக எளிதாக நாட்டின் அதிகாரத்தை தாலிபன்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். சில இடங்களில் ஒரு குண்டு கூட சுடப்படாமலேயே ஆப்கானிஸ்தானிய ராணுவம் தாலிபன்களிடம் பணிந்து சென்றிருக்கிறது.
தலைமை, நம்பிக்கை, ஊழல், போர்க்கள அறிவு என பல வகையான அம்சங்களைக் கொண்டுதான் இந்தப் படைகளை ஒப்பிட வேண்டியிருக்கிறது.
ஆப்கானிஸ்தானின் அனைத்து வகையான படைகளையும் சேர்த்து 3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் இருக்கிறார்கள். இது ஆவணங்களில் உள்ள எண்ணிக்கை. உண்மையில் இந்த எண்ணிக்கை குறையலாம். ராணுவம், விமானப்படை, காவல்துறை ஆகிய பிரிவுகளும் இதில் அடங்குகின்றன.
ஆனால் ராணுவத்திலும் காவல்துறையிலும் சேருவதற்கு யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. இளைஞர்கள் அஞ்சுகிறார்கள். தேவையான ஆள்கள் கிடைக்காமல் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகள் தவித்திருக்கின்றன.
இதற்குக் காரணம் தாலிபன் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களைக் கண்டு அச்சம்தான். ஆப்கானிஸ்தானிய ராணுவமும் காவல்துறையும் போர்களில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்திருக்கின்றன. பெரும்பாலான மனிதவெடிகுண்டுத் தாக்குதல்கள் பாதுகாப்புப் படைகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டிருக்கின்றன.
இதுமட்டுமல்ல பாதுகாப்புப் படைகளில் "கறுப்பு ஆடுகள்" பிரச்னையும் இருக்கிறது. சீருடைக்குள் இருந்து கொண்டே ராணுவத்தினருக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்திய பல சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் நடந்திருக்கின்றன.
ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளும் ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் உண்டு. இல்லாத வீரர்களின் பெயர்களில் தளபதிகள் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளவதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் ஆவணத்தில் இருப்போரின் எண்ணிக்கையும், உண்ணையில் சண்டைக்குச் செல்லும் வீரர்களின் எண்ணிக்கையும் பெருமளவு வேறுபடுகிறது.
பட மூலாதாரம், Getty Images
சில இடங்களில் ஒரு குண்டு கூட சுடப்படாமலேயே ஆப்கானிஸ்தானிய ராணுவம் தாலிபன்களிடம் பணிந்து சென்றிருக்கிறது
அதனால் ஏட்டளவில்தான் ஆப்கானிஸ்தானிய பாதுகாப்புப் படையினர் வலிமையானவர்கள் என்று அமெரிக்காவின் ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
ஆப்கானிஸ்தானின் ராணுவத்தில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பது யாருக்குமே தெரியாது என்பதுதான் உண்மை என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
தொடர்பே இல்லாத பகுதிகளுக்கு பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்படுவதால், மன உறுதி தளர்ந்து, சண்டையிடாமல் அப்படியே விட்டுச் செல்லும் போக்கு ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் பரவலாக இருப்பதையும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
தாலிபன்களின் பலம் என்ன?
ஆப்கானிஸ்தான் ராணுவத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதையே கணிக்க இயலாது எனும்போது, தாலிபன் இயக்கத்தில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கணிப்பது சாத்தியமே இல்லாதது.
இருப்பினும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு தாலிபன் இயக்கத்தில் மட்டும் சுமார் 60 ஆயிரம் வீரர்கள் இருப்பதாக கணித்தது. கூடவே பிற பழங்குடி ஆயுதக் குழுக்களையும் சேர்த்தால் மொத்தம் 2 லட்சம் பேர் வரலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால் தாலிபன்களை ஒரே குழுவாக வரையறுப்பது ஆபத்தானது என்று பிரிட்டிஷ் முன்னாள் ராணுவ அதிகாரி மைக் மார்ட்டின் கூறுகிறார். இவர் பாஷ்தோ மொழி பேசக் கூடியவர். ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த சண்டைகள் குறித்து நெருக்கமாகக் கவனித்தவர்.
ஆங்காங்கே இருக்கும் ஓரளவு தொடர்புடைய குழுக்களை தற்காலிகமாக ஒன்று சேர்க்கும் அமைப்பு என்று வேண்டுமானால் தாலிபன்களைக் குறிப்பிடலாம் என்கிறார் அவர்.
அரசுப் படைகளில் இருப்போர் மாத்திமல்ல, ஆயுதக் குழுக்களில் இருப்போரும் தங்களுடைய பிழைப்புக்காக அவ்வப்போது எதிரணிக்குப் போய்விடுவது உண்டு என்பது இங்கு நடக்கும் சண்டையின் மிக முக்கியமான அம்சம்.
இந்த விவரங்களை எல்லாம் ஆய்வு செய்து பார்த்தாலும் கூட ஆப்கானிஸ்தான் ராணுவம்தான் வலிமையில் முந்தி நிற்க வேண்டும். நிதி, தொழில்நுட்பம், அதிகாரம், ஆயுதம் என அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.
பட மூலாதாரம், Getty Images
காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்க வீரர்
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினரின் சம்பளத்துக்காகவும், ஆயுதங்களுக்காகவும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக அமெரிக்காவின் ஓர் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
தாலிபன்களுக்கு விமானப் படை எதுவும் கிடையாது. ஆனால் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு 200க்கும் மேற்பட்ட விமானங்கள் இருக்கின்றன. இவை ராணுவத்துக்கு முன்னிலையைத் தந்திருக்க வேண்டும்.
ஆனால் தாலிபன்கள் விமானிகளைக் குறிவைத்து அதிகமான தாக்குதல்களை நடத்தினார்கள். அதனால் விமானிகள் கிடைக்காமல் ஆப்கானிஸ்தான் விமானப்படை திண்டாடியது.
ஆகவேதான் தாலிபன்களின் தாக்குதலுக்கு உள்ளாகும் சில பகுதிகளில் அமெரிக்க விமானப் படை சென்று உதவி செய்ய நேரிட்டது.
தாலிபன்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்னென்ன?
தலிபான்கள் பெரும்பாலும் போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து வருவாயை நம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் இருந்து ஆதரவு இருப்பதாகவும் கருதப்படுகிறது.
ஆயினும் தாலிபன்களிடம் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்டவைதான். தற்போது தாலிபன்களிடம் இருக்கும் ஹம்வீ எனப்படும் ராணுவ வாகனம் இப்படிக் கிடைத்ததுதான்.
இதே போல இயந்திரத் துப்பாக்கிகள், இருளில் காணப் பயன்படும் உபகரணங்கள், பீரங்கிகள், எறிகணைகள் என பல வகையான ஆயுதங்களை ராணுவத்திடம் இருந்தே தாலிபன்கள் பெற்றிருக்கிறார்கள்.
கடைசி சில வாரங்களில் ஏராளமான ஆயுதங்களையும் உபகரணங்களையும் போட்டுவிட்டு ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் ஓடிவிட்டார்கள். சண்டைபோடுகிறீர்களா சரணடைகிறீர்களா என்று கேட்டபோது, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைவதையே ஆப்கானிஸ்தானிய வீரர்கள் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.
அப்படிக் கிடைத்த ஆயுதங்கள் அனைத்தும் இப்போது தாலிபன்களிடம் இருக்கின்றன. அவர்களுக்கு விமானங்கள் கிடைத்திருப்பதாகவும் கருதப்படுகிறது.
பட மூலாதாரம், Getty Images
தாலிபன்களிடம் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கப் படைகளிடம் இருந்து பறிக்கப்பட்டவை
மிக விரைவாக அவர்களுக்கு ஆயுதங்களும் உபகரணங்களும் கிடைத்ததால்தான் அவர்களால் எதிர்பாராத வேகத்தில் காபூலைக் கைப்பற்ற முடிந்தது என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் ராணுவத்தைக் கட்டமைக்கவும், மேம்படுத்தவும் அமெரிக்கா செலவு செய்த பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயும் உண்மையில் இப்போது தாலிபன்களுக்கு பயன்படுகிறது.
மக்கள் நெருக்கம் நிறைந்த பகுதிகளில் தாக்குதல் நடத்தும் அவர்களது உத்தி அஞ்சத்தக்கது. காடு, மலை, பள்ளத்தாக்கு என அனைத்து வகையான பரப்புகளையும் தாலிபன்கள் அறிந்து வைத்திருப்பது ராணுவத்துக்கு இல்லாத கூடுதல் பலம்.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவின் 'மகா ஆட்டம்' - என்ன நடக்கப் போகிறது?
- மீண்டும் மாற்றம், முன்னேற்றம், அன்புமணி: அவசரப்பட்டு விட்டாரா ராமதாஸ்?
- முத்த வரலாறு: மனிதர்கள் ஏன் முத்தம் கொடுக்கிறார்கள்?
- கொரோனா வைரஸ் ஆடும் பரமபதம் - கவலையில் அமெரிக்க மருத்துவர்கள்
- ஆப்கானிஸ்தான் அதிர்ந்து கொண்டிருந்த நாளில் காபூல் வானில் போராடிய இந்திய விமானம்
- ஆப்கன் ஆபத்தை விவரிக்கும் காட்சிகள் - ஓடுபாதையில் புறப்பட்ட விமானத்தில் ஏறிய மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்