சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சிறுவனுக்கு மாரடைப்பு: ரூ.1.25 கோடி நிதியுதவி

  • சதீஷ் பார்த்திபன்
  • பிபிசி தமிழுக்காக
மலேசியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக தயார்படுத்தும் ஒரு சுகாதார ஊழியர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக தயார்படுத்தும் ஒரு சுகாதார ஊழியர்.

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 16 வயதுச் சிறுவனுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து 2,25,000 சிங்கப்பூர் டாலர் (இந்திய ரூபாயில் 1.23 கோடி) நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுவனுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறாவது நாள் திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. தனது முதல் தவணை கொரோனா தடுப்பூசியை அச்சிறுவன் ஜூன் 26ஆம் தேதி போட்டுக் கொண்டார்.

அடுத்த ஐந்து தினங்களுக்கு இயல்பாக வலம் வந்த சிறுவனிடம் மாரடைப்பு வருவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆறாவது நாளன்று (ஜூலை 3) உடற்பயிற்சிக் கூடத்துக்கு சென்ற சிறுவன், அங்கு அதிக அளவிலான எடையைத் தூக்கி பயிற்சி செய்துள்ளார்.

அதன் பின்னர் வீடு திரும்பிய சிறுவன் மயங்கி விழுந்தார். அவரது இதயத்தின் தசை வீங்கியதாகவும், அதன் காரணமாக இதயத்துடிப்பு நின்று போனதாகவும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்தது. மேலும், அதிகப்படியான எடையை தூக்கி உடற்பயிற்சி மேற்கொண்டதன் காரணமாக பாதிப்பு அதிகரித்திருக்கக் கூடும் என்றும் கூறப்பட்டது.

"தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த சிறுவனை நன்கு பயிற்சி பெற்ற மருத்துவப் பணியாளர்கள் பரிசோதித்தனர். தடுப்பூசி செலுத்தலாம் என்று அவர்கள் அனுமதி அளித்த பிறகே முதல் தவணை ஊசி போடப்பட்டுள்ளது. அதன் பிறகு 30 நிமிடங்களுக்கு தடுப்பூசி மையத்தில் கண்காணிப்பில் இருந்த பிறகே அவர் கிளம்பிச் சென்றார்," என்று சுகாதார அமைச்சின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இலவசமாக அனைவருக்கும் தடுப்பூசி

சிங்கப்பூரில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். அங்கு பணியாற்றும் வெளிநாட்டினருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அந்நாட்டு மக்கள் தொகையில் இதுவரை சுமார் 75 சதவீதம் பேருக்கு முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால், மருத்துவ ரீதியில் அது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் அண்மையில் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட சிறுவன் உட்பட இருவருக்கு 2,25,000 சிங்கப்பூர் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பாதிப்பு நிதியுதவித் திட்டத்தின் (Vaccine Injury Financial Assistance Programme-VIFAP) கீழ் இந்த நிதி வழங்கப்படுகிறது.

இதுவரை நாடு முழுவதும் 144 பேருக்கு மொத்தம் 7,82,000 டாலர் நிதியாக அளிக்கப்பட்டுள்தாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும் பக்க விளைவுகளின் தன்மை குறித்து நன்கு ஆராயப்பட்டு, நிதி பெறக்கூடிய அளவுக்குப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிதி கிடைக்கிறது.

கொரோனா தடுப்பூசியால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகளை, பாதிப்புகளை சிங்கப்பூரில் மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர்.

இறப்பு அல்லது நிரந்தர முடக்கத்தால் பாதிக்கப்படுவோர்க்கு 2,25,000 சிங்கப்பூர் டாலர் வழங்கப்படும்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் மீண்டு வருவோருக்கு பத்தாயிரம் சிங்கப்பூர் டாலர் வழங்கப்படுகிறது. இது இரண்டாவது வகை.

மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பும் மூன்றாம் வகையினருக்கு இரண்டாயிரம் சிங்கப்பூர் டாலர்கள் வழங்கப்படுகிறது.

16 வயது சிறுவன் Pfizer-BioNTech/Comirnaty தடுப்பூசியை போட்டுக்கொண்ட நிலையில், myocarditis என்று குறிப்பிடப்படும் இதய தசை வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளான்.

தன் உடல் எடையை விட இரு மடங்கு எடையை உடற்பயிற்சி மையத்தில் தூக்கியதால், இதய பாதிப்பு மோசமடைந்திருக்கக் கூடும் என்கிறது சிங்கப்பூர் சுகாதார அமைச்சு.

பட மூலாதாரம், Getty Images

ஆகஸ்ட் 16ஆம் தேதி அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், myocarditis என்பது கொரோனா தடுப்பூசியால் ஏற்படக்கூடிய மிக ஆபத்தான பக்க விளைவு எனக் குறிப்பிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட அக்குறிப்பிட்ட சிறுவன் அதிகளவு எடையை தூக்கியதுடன், கஃபைன் அதிகம் உள்ள பானங்களை எடுத்துக்கொண்டதும் பாதிப்பு மோசமடைய முக்கிய காரணிகளாக இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் 16 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்ட அதே தொகை மற்றொருவருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இரண்டாவது நபர் யார் என்றும் எந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்படவில்லை.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனை சிறப்பு மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அடுத்து வரும் சில வாரங்களில் அச்சிறுவன் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப இயலும் என்றும், யாருடைய உதவியும் இன்றி தனது அன்றாட நடவடிக்கைகளில் சிறுவனால் ஈடுபட முடியும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் அவர் வெளி நோயாளியாக குறிப்பிட்ட காலத்துக்கு சிகிச்சை பெற வேண்டியிருக்கலாம். அதன் பிறகே அவரால் மீண்டும் பள்ளிக்குச் செல்லவும் பிற நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடியும் எனவும் அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :