ஆப்கன் தாலிபனின் வெற்றிக்கு உதவிய ராணுவ முறைகேடுகளும் உளவியல் சிக்கல்களும்

  • ராகவேந்திர ராவ்
  • பிபிசி செய்தியாளர்
தாலிபன்

பட மூலாதாரம், Scott Olson/Getty Images

படக்குறிப்பு,

காந்தஹாரில் நடந்த சண்டையில் பங்கேற்ற ஆப்கன் ராணுவ வீரர்

தேதி: ஜூலை 8, 2021. அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் ஒரு பத்திரிகையாளருக்கும் இடையிலான உரையாடலைக் கவனமாகப் பாருங்கள்

கேள்வி: ஆஃப்கானிஸ்தானில் தாலிபன் ஆக்கிரமிப்பு இப்போது உறுதியாக உள்ளதா?

பதில்: இல்லை, அது அவ்வாறு இல்லை.

கேள்வி: ஏன் அப்படி?

பதில்: ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மூன்று லட்சம் பேர் கொண்ட ஓர் ஒழுங்கமைக்கப்பட்ட ராணுவத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு விமானப்படை உள்ளது. அதே நேரத்தில் தாலிபான்களின் எண்ணிக்கை சுமார் 75 ஆயிரம் தான். ஆக்கிரமிப்பு சாத்தியமில்லை.

அதே பத்திரிகையாளர் சந்திப்பில், பைடன் தாலிபன்களை நம்புகிறாரா என்று கேட்கப்பட்டது. இது ஒரு முக்கியமான கேள்வியா என்று அவர் கேட்டார். ஆம் என்று நிருபர் கூறியதற்கு அவர், "இல்லை, நான் நம்பவில்லை." என்றார்.

தாலிபன்களிடம் நாட்டை ஒப்படைப்பதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று பத்திரிகையாளர் கேட்டபோது, பைடன், "இல்லை, நான் தாலிபன்களை நம்பவில்லை." என்று பதிலளித்தார்.

வேறு சில கேள்விகளுக்குப் பதிலளித்த பைடன், 2001 முதல் தாலிபன்கள் ராணுவ ரீதியாக வலுவான நிலையில் இருப்பதை ஒப்புக் கொண்டார், ஆனால் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி, நாட்டையே தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவது சாத்தியமில்லை என்றும் கூறினார்.

சுமார் ஒரு மாதத்திற்குள் ஆஃப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை தாலிபன்கள் கைப்பற்றியதைப் பார்க்கும் போது, , தாலிபன்களின் பலம் மற்றும் ஆப்கானியப் படைகளின் பலவீனம் பற்றி அமெரிக்காவுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

இப்போது பைடன் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தலைவர்கள், ஏன் தாலிபன்களே கூட, இவ்வளவு எளிதாக நாட்டைக் கைப்பற்ற முடியும் என்று கற்பனை செய்யவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

சமீபத்தில் கசிந்த அமெரிக்க உளவுத்துறை அறிக்கை, சில வாரங்களுக்குள் காபூல் தாக்கப்படலாம் என்றும் 90 நாட்களுக்குள் அரசாங்கம் வீழ்த்தப்படும் என்றும் கணித்துள்ளது. வரும் சில மாதங்களில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றலாம் என்ற அதே ஊகம் உலகெங்கிலும் உள்ள நாடுகளில் உருவாக்கப்பட்டது.

ஆனால் கடந்த சில நாட்களில் ஆஃப்கானிஸ்தானில் காணப்பட்ட வேகமான நகர்வுகள், இவை அனைத்தும் மிக விரைவாகவும் எளிதாகவும் நடக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை என்பதையே காட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images

ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான தாலிபன்களின் பயணம்

ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 15 வரையிலான காலகட்டத்தை உற்று நோக்கினால் ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் எவ்வளவு விரைவாகப் பல பகுதிகளைக் கைப்பற்றினார்கள் என்பதை உணரலாம்.

ஜூலை 9 நிலவரப்படி, ஆஃப்கானிஸ்தானில் உள்ள மொத்த 398 மாவட்டங்களில், தாலிபன் கட்டுப்பாட்டில் 90 மாவட்டங்களே இருந்தன. மீதமுள்ள மாவட்டங்களில், 141 ஆஃப்கான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன, ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையிலான சண்டை 167 மாவட்டங்களில் தொடர்ந்து வந்தது.

தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வந்தது என்றால், நிர்வாக மையங்கள், காவல்துறை தலைமையகம் மற்றும் மற்ற அனைத்து அரசு நிறுவனங்களும் தாலிபன்களின் கட்டுப்பாட்டில் வந்தன என்று பொருள்.

ஜூலை 9 அன்று, வடக்கு ஆப்கானிஸ்தான் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு பெரிய தாக்குதலில் ஈரான் மற்றும் துர்க்மெனிஸ்தானுடனான முக்கிய எல்லைப் பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றினர். ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள இஸ்லாம்கலன் மற்றும் துர்க்மெனிஸ்தானின் எல்லைக்கு அருகிலுள்ள தொர்குண்டி ஆகிய எல்லைக் கடப்புகள் அவர்களின் கட்டுப்பாட்டில் வந்தன.

ஜூலை 29 க்குள், தாலிபான்கள் 105 மாவட்டங்களைக் கையகப்படுத்தினர். 135 மாவட்டங்கள் மட்டுமே ஆப்கன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன. இருவருக்கும் இடையிலான போராட்டம் இன்னும் 158 மாவட்டங்களில் நடந்து கொண்டிருந்தது.

ஆகஸ்ட் 10 வரை, நிலைமையில் பெரிய மாற்றம் இல்லை-தாலிபன் கட்டுப்பாட்டில் 109 மாவட்டங்கள், ஆப்கானிஸ்தான் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழ் 127 மாவட்டங்கள் மற்றும் இருவருக்கும் இடையே மோதலில் 162 மாவட்டங்கள் இருந்தன. ஆனால், டோலோகன், குண்டுஸ் மற்றும் ஷெபர்கான் போன்ற நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றியிருந்தனர் என்பது கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.

ஆனால் ஆகஸ்ட் 11 முதல் தாலிபன்களின் அணுகுமுறை தீவிரமடைந்தது. தாலிபன்கள் ஃபைசாபாத் மற்றும் புல்-இ-கும்ரியைக் கைப்பற்றி மொத்தம் 117 மாவட்டங்களில் தங்கள் சிறகுகளை விரித்தனர். ஆகஸ்ட் 11 நிலவரப்படி, 122 மாவட்டங்கள் மட்டுமே ஆஃப்கானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தன. மேலும் 159 மாவட்டங்களில் இருவருக்கும் இடையே மோதல் இன்னும் நடந்து கொண்டிருந்தது.

ஆகஸ்ட் 12 அன்று, தாலிபன்கள் கஜ்னி மற்றும் ஹெராத்தை கைப்பற்றினர், ஆகஸ்ட் 13 க்குள், கந்தஹார் மற்றும் லஷ்கர் காஹ்வும் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தன.

பட மூலாதாரம், WAKIL KOHSAR/Getty Images

ஆகஸ்ட் 13 அன்று, தாலிபான்களின் கட்டுப்பாட்டில் 132 மாவட்டங்களும், ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் 114 மாவட்டங்களும், இருவருக்குமிடையே மோதலில் 152 மாவட்டங்களும் இருந்தன.

ஆகஸ்ட் 15 அன்று, தாலிபான்கள் மொத்தமுள்ள 398 மாவட்டங்களில் 345 ஐ கைப்பற்றியபோது நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியது. தாலிபான்கள் மசார்-இ-ஷெரீப் மற்றும் ஜலாலாபாத்தையும் கைப்பற்றிய நாள் இது.

அன்றைய தினத்தில், 12 மாவட்டங்கள் மட்டுமே ஆஃப்கானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்தன மற்றும் 41 மாவட்டங்கள் தாலிபான்களுக்கும் ஆஃப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருந்தது.

ஆப்கன் ராணுவத்தின் நம்பகத்தன்மை குறித்த ஐயம்

அஜ்மல் அஹ்மதி ஆஃப்கானிஸ்தான் வங்கியின் ஆளுநராகவும், ஆஃப்கானிஸ்தான் ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

ஆகஸ்ட் 16 மாலை, அவர் வெளியிட்ட தொடர் ட்வீட்கள், காபூலில் இருந்து அவர் தப்பித்ததை உறுதிப்படுத்தியதுடன் ஆஃப்கன் பாதுகாப்புப் படைகளின் விசுவாசத்தையும் கேள்விக்குள்ளாக்கின.

"கடந்த வாரம் ஆஃப்கானிஸ்தான் அரசின் வீழ்ச்சி புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு விரைவாக இருந்தது." என்று அவர் ட்வீட் செய்திருந்தார்.

கடந்த சில மாதங்களில் பெரும்பாலான கிராமப்புறங்கள் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டிருந்தாலும், முதல் மாகாண தலைநகரம் ஒன்று, கடந்த பத்து நாட்களுக்கு முன் தான் அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஆகஸ்ட் 6 வெள்ளிக்கிழமை ஜராஞ்ச் பகுதி தாலிபன்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாகவும், அடுத்த ஆறு நாட்களில் பல மாகாணங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன என்றும் அவர் ட்வீட்டில் தெரிவித்திருந்தார்.

"சண்டையிட வேண்டாம் என்று மேலிட உத்தரவுகள் வந்துள்ளதாகப் பல வதந்திகள் வெளிவந்தன. இதை அத்தா நூர் மற்றும் இஸ்மாயில் கான் ஆகியோரும் வலியுறுத்தியுள்ளனர்." என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்தா நூர் பல்க் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர். அவர் மஜார்-இ-ஷெரீப், தாலிபன்களால் கைப்பற்றப்பட்டபோது பிராந்திய ராணுவத்தின் தலைவராக இருந்தார். "எங்கள் வலுவான எதிர்ப்பு இருந்தபோதிலும், ஒரு பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் கோழைத்தனமான சதியின் விளைவாக, அரசாங்கமும் அரசு இயந்திரமும் முழுவதுமாகத் தாலிபனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன." என்று நூர் ட்வீட் செய்தார்.

பட மூலாதாரம், Majid Saeedi/Getty Images

'ஹெராத்தின் சிங்கம்' என்று அழைக்கப்படும் உள்ளூர் தளபதி இஸ்மாயில் கான், ஹெராத்தில் தாலிபன்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் ராணுவத்தை வழிநடத்திக்கொண்டிருந்தார், அப்போது தாலிபன்கள் ஹெராத்தை கைப்பற்றினர்.

"நம்பவே முடியவில்லை. ஆனால் ஆப்கன் படைகள் ஏன் பின்வாங்கின என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது சந்தேகத்தை எழுப்புகிறது" என்று அஹ்மதி ட்வீட் செய்தார்.

இந்த வேகம் எப்படிச் சாத்தியமாயிற்று?

சில பகுதிகளை தாலிபான்கள் பலத்தால் கைப்பற்றினாலும், சில பகுதிகளில் ஆப்கானிஸ்தான் தேசிய இராணுவம் எதிர்த் தாக்குதல் செய்யாமல் பின்வாங்கியது. ஆகஸ்ட் 6 அன்று, தாலிபான்கள் பிராந்திய தலைநகர் ஜராஞ்சின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். அடுத்த 10 நாட்களில் அது நாடு முழுவதும் வேகமாக விரிவடைந்தது.

ஜூலை மாதத்தில் பெரும்பாலான அமெரிக்க துருப்புக்கள் வெளியேறினாலும், பல ஆயிரம் அமெரிக்க வீரர்கள் தலைநகரிலிருந்து தங்கள் குடிமக்களை வெளியேற்ற உதவ காபூலுக்குத் திரும்பினர். ஆப்கானிஸ்தானுக்கு வெளியே இருக்கும் அமெரிக்கப் படைகள் சமீபத்தில் தாலிபான் நிலைகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, ஆனால் அவர்களின் முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது.

தாலிபான்கள் அனைத்து முக்கிய எல்லைக் கடப்புகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதால், நாட்டை விட்டு வெளியேறும் ஒரே வழி காபூல் விமான நிலையம் தான் என்ற நிலை ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிபிசியின் பாதுகாப்பு விவகாரங்கள் நிருபர் ஜொனாதன் பீல், அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்குப் பயிற்சி அளிப்பதற்கும், அவர்களை மன உறுதியடையச் செய்யவும் கடந்த 20 ஆண்டுகளில் பெரும் பகுதியைச் செலவிட்டனர் என்று கூறுகிறார்.

எண்ணற்ற அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தளபதிகள் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் திறமையான ஆப்கான் இராணுவத்தை உருவாக்குவதாக உறுதி கூறியிருந்தனர். ஆனால் இன்று அந்த வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளாகத் தோன்றுகின்றன என்கிறார் அவர்.

ஆப்கன் அரசாங்கம் தனது கொள்கையில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். காரணம், அவர்களின் படைகள் மூன்று லட்சம் பேருக்கும் அதிகமானவர்களைக் கொண்டதாகக் கூறப்பட்டது.

"ஆனால் உண்மையில் எப்போதுமே தனது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய அந்நாடு போராடியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் ராணுவத்திற்கு ஒரு ஊழல் வரலாறு உள்ளது. சில நேர்மையற்ற தளபதிகள் உண்மையில் இல்லாத வீரர்களுக்கான சம்பளத்தை வசூலித்தனர்," என்று அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

ஆஃப்கானிஸ்தான் புனரமைப்புக்கான சிறப்புக் கண்காணிப்பாளர் (SIGAR) "ஊழலின் மோசமான விளைவுகள் மற்றும் படையின் உண்மையான எண்ணிக்கை குறித்த சந்தேகங்கள்" குறித்து தீவிர கவலைகளை வெளிப்படுத்தியிருந்தார் என்று பீல் தெரிவிக்கிறார்.

தாலிபான்கள் முன்னேறியது எப்படி?

கடந்த பல வருடங்களாக ஆஃப்கானிஸ்தான் அரசாங்கம் பெற்ற நிதி உதவியைக் கணக்கில் கொண்டு பார்த்தால், பணம் மற்றும் ஆயுதங்களின் அடிப்படையில் அது முன்னிலை பெற்றிருக்க வேண்டும். மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தானுக்கு வீரர்களின் சம்பளம் மற்றும் உபகரணங்களுக்கு பில்லியன் கணக்கான டாலர்களை வழங்கியுள்ளது.

ஜூலை 2021 அறிக்கையில், SIGAR ஆஃப்கானிஸ்தானின் பாதுகாப்பிற்காக 88 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிடப்பட்டுள்ளதாகக் கூறியது.

தாலிபான்களுக்கு எதிரான போரில் ஆஃப்கானிஸ்தான் விமானப்படை குறிப்பிடத்தக்க முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் விமானப்படை தனது 211 விமானங்களையும் பணியாளர்களையும் பராமரிக்கத் தொடர்ந்து போராடி வருகிறது.

ஆஃப்கானிஸ்தான் விமானப்படை தளத்தில் உள்ள தளபதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு இதுவே காரணம். ஆஃப்கன் விமானிகளைக் குறிவைத்துத் தாலிபான்கள் தாக்கியது நிலைமையை மேலும் மோசமடையச் செய்தது.

மறுபுறம், ஆஃப்கானிஸ்தான் இராணுவம் கடந்த பல ஆண்டுகளாகவே, போதிய பயிற்சி இல்லாமை, ஊழல், மோசமான தலைமை ஆகியவற்றின் காரணமாக மன உறுதியிழந்த நிலையிலேயே இருந்துள்ளது.

பல இடங்களில், ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் தாலிபான்களுக்கு முன்னால் சரணடைந்து தங்கள் உயிரைக் காத்துக்கொள்வது புத்திசாலித்தனம் என்று நினைத்ததற்கும் இந்த மன உறுதியின்மையே காரணம்.

தாலிபன்கள் உளவியல் ரீதியான போரில் ஈடுபட்டனர். சரணடைந்தாலோ தங்களுடன் ஒத்துழைத்தாலோ உயிர் பிழைக்கலாம் என்ற செய்தியை அவர்கள் அனுப்பினர்.

ஆப்கானிஸ்தான் வீரர்கள் பல இடங்களில் சண்டையிடாமல், தாலிபன்களுக்குப் பாதுகாப்பான வழியை வகுத்துக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :