ஆப்கன் தாலிபன்களிடம் அமெரிக்காவின் தோல்வி: உலகளவில் ஏற்படும் விளைவுகள் என்ன?

  • ஜோனாத்தன் மார்கஸ்
  • ராஜீய விவகாரங்கள் நிபுணர், பிபிசியின் முன்னாள் பாதுகாப்பு மற்றும் ராஜீய விவகாரங்கள் செய்தியாளர்
பைடன்

பட மூலாதாரம், Getty Images

ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டு அவசர அவசரமாக வெளியேறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நடவடிக்கையை அரசியல் பார்வையாளர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். இது தேவையற்றது, நம்பியவர்களுக்குச் செய்யும் துரோகம் என்றெல்லாம் பேசப்படுகிறது.

காபூல் விமான நிலையத்தில் இருந்து வந்த இதயத்தை நொறுங்கச் செய்யும் புகைப்படங்கள், இந்த விமர்சனங்களுக்கு வலுச் சேர்க்கின்றன. மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானில் நிறைய ரத்தத்தைச் சிந்தியிருக்கின்றன. பல்லாண்டுக்கணக்கில் பெரும் பணத்தை செலவிட்டிருக்கின்றன. இவற்றை விட ஆப்கானியர்கள் கொடுத்திருக்கும் விலை இன்னும் அதிகம்.

பைடன் நிர்வாகம் அவசரமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது தொடர்பான விமர்சனங்களுக்கு எதிராக வாதிடுவது மிகவும் கடினம். ஆப்கானிஸ்தான் உண்மையிலேயே காப்பாற்ற முடியாத நாடாக இருக்கலாம். அதன் ஆளுகைக் கட்டமைப்புகள் ஊழல் மலிந்தவையாக இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்தவை இல்லையே? கடந்த இருபது ஆண்டுகளில்தானே நடந்திருக்கின்றன?

என்ன வாதிட்டாலும் சட்டென வெட்டி வீசிவிட்டு புறப்பட்டிருப்பது அமெரிக்காவின் நம்பகத் தன்மை மீது மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு கூட்டாளியாகவும், உலக விவகாரங்களில் தலையிடும் தார்மிக உரிமை கொண்டதாகவும் இருக்கும் அமெரிக்காவின் நம்பகத் தன்மைக்கு இது களங்கம்தான்.

வியட்நாமுடன் ஒப்பிட முடியுமா?

எதிரியிடம் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் ஒரு நகரத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மக்களை வெளியேற்றும் நிகழ்வு செய்தித் தாள்களின் முதல்பக்கத்தில் தவிர்க்கவே முடியாதது. அன்று வியட்நாமில் நடந்தது, இன்று ஆப்கானிஸ்தானில் நடப்பதாக ஒப்பிடப்படுகிறது. ஆயினும் இதில் மேலோட்டமான ஒற்றுமை இருந்தாலும் சில முக்கியமான வேறுபாடுகளும் உள்ளன.

அமெரிக்கப் படைகள் வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தெற்கு வியட்நாம் வீழ்ந்தது. ஆப்கானிஸ்தான் அப்படியில்லை. முற்றாக வெளியேறுவதற்கு முன்னரே தலைநகரம் கைப்பற்றப்பட்டு அரசு வீழ்ந்திருக்கிறது. இதைப் பார்க்கும்போது தாங்கள் பயிற்சி கொடுத்த ஆப்கானிய ராணுவம் இன்னும் சில காலத்துக்கு தலைநகரைப் பாதுகாப்பார்கள் என்று அமெரிக்கா நம்பிக் கொண்டிருந்ததைப் போலவே தோன்றுகிறது.

வியட்நாமால் அமெரிக்காவின் மரியாதை தாழ்ந்து போனது. ராணுவ உறுதி சிதைந்தது. மக்கள் மத்தியில் ஆழமான பிளவு ஏற்பட்டது.

ஆனால் பனிப்போரின் ஒரு பக்க நிகழ்வுதான் வியட்நாம் போர். அங்கு சறுக்கல் ஏற்பட்டாலும் பனிப்போரின் இறுதியில் வென்றது அமெரிக்காதான். அப்போது நேட்டோ அமைப்பு பலவீனமடையவில்லை. அமெரிக்காவின் உதவியை நாடுவதற்கு உலகம் தயங்கவில்லை. ஆகப் பெரிய வல்லரசாகவே அமெரிக்கா நீடித்தது.

ஆப்கானிஸ்தான் முற்றிலும் வேறுபட்டது. இந்தப் போரால் அமெரிக்காவுக்குள் ஏற்பட்டிருக்கும் பிளவுகளை வியட்நாமுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்டிருக்கும் போருக்கு உள்நாட்டில் நிச்சயமாக ஆதரவு இல்லை. அதே நேரத்தில் போருக்கு எதிராகபெரிய அளவில் போராட்டங்களும் நடக்கவில்லை.

முக்கியமாக, இன்றைய சர்வதேச சூழல் 1970 களில் இருந்ததை விட வியத்தகு முறையில் வேறுபட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் உலகமெங்கும் பல வகையான மோதல்களிலும் போட்டிகளிலும் ஈடுபட்டிருக்கின்றன. சிலவற்றில் அவை தெளிவாக வெற்றியடைந்திருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இப்போது ஏற்பட்டிருக்கும் சறுக்கல், பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற முழக்கத்துக்கு ஏற்பட்டிருக்கும் பேரழிவு. ஆயினும் ஆனால் ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான பரந்துபட்ட மோதலில், அமெரிக்காவின் தோல்வியை ஒரு தீவிர பின்னடைவாக மட்டுமே பார்க்க முடியும்.

பட மூலாதாரம், Getty Images

மாஸ்கோவிலும் பெய்ஜிங்கிலும் குறைந்தபட்சம் இப்போதைக்காவது ஒரு குறுநகை இருக்கும். ஜனநாயகத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் நிறுவுவதற்காக மேற்கு நாடுகள் பரப்பும் தாராளவாத தலையீட்டின் மேற்கத்திய மாதிரி ஆப்கானிஸ்தானில் பேரழிவுக்கு உள்பட்டிருக்கிறது. இதுபோன்ற தலையீடுகளை வருங்காலத்தில் இனி யாரும் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

கூட்டாளிகளுக்குப் பெருங்கவலை

ஆப்கானிஸ்தானின் போரில் அமெரிக்காவுடன் இணைந்த கூட்டாளிகள் மிக மோசமாகத் தோற்றுப் போனதாக உணர்கிறார்கள். வாஷிங்டனுடன் பொறாமைப் படத்தக்க "சிறப்பு உறவு" கொண்டிருந்த பிரிட்டிஷ் அமைச்சர்கள் கூட பைடனின் அவசர முடிவு குறித்து வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள்.

ஐரோப்பியக் கூட்டாளிகள் எந்த அளவு அமெரிக்காவை சார்ந்திருக்கிறார்கள் என்பதை இந்தப் போர் தெளிவாகக் கோடிட்டுக் காட்டிவிட்டது. அமெரிக்கா ஒரு முடிவை எடுத்து அதன் போக்கில் செல்லத் தொடங்கிய பிறகு ஏதும் பேசாமல் அந்த வழியையே பின்பற்ற வேண்டிய நிலை இருப்பதையும் உணர்த்திவிட்டது.

மேற்கத்திய நாடுகளுக்கு இது மோசமான செய்தி. ஆனாஸ் சீனா, ரஷ்யா, பாகிஸ்தானில் பூத்திருக்கும் புன்னகை இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடித்திருக்குப் போகிறது? தன்னுடைய உத்திசார் ஆதாயத்துக்காக தாலிபன்களுக்கு புகலிடம் அளித்து பாதுகாத்து வந்தது பாகிஸ்தான்.

ஆனால் புதுப்பிக்கப்பட்டிருக்கும் தாலிபன்களின் ஆட்சி காலச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுவதாக இருந்தால், சர்வதேசப் பயங்கரவாதம் தளைப்பதற்கு வழியாகும். அது பிராந்தியக் கொந்தளிப்பை ஏற்படுத்தி பாகிஸ்தானுக்கு எதிர்மறையான விளைவைக் கொடுத்துவிடும்.

மேற்கு நாடுகளின் எதிரிகளிடம் புன்னகை

அமெரிக்காவின் தோல்வியால் சீனாவுக்கு மகிழ்ச்சிதான். சீனாவுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்துவதற்காக மட்டுமே ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் முடிவை பைடன் எடுத்திருப்பாரென்றால், அது நிச்சயமாக சீனாவுக்கு ஆப்கானிஸ்தானிலும் அதைத் தாண்டியும் செல்வாக்கைப் பரப்புவதற்கான வாய்ப்பை வழங்குவதாக இருக்கும்.

ஆனால் சீனா கவலைப்பட வேண்டிய அம்சமும் இருக்கிறது. ஆப்கானிஸ்தானுடன் சீனாவுக்கு இருப்பது மிகக் குறுகிய எல்லை. இஸ்லாமியர்களுக்கு எதிராக சீனா அடக்குமுறைகளைப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், பெய்ஜிங்குக்கு எதிரான இஸ்லாமியக் குழுக்கள் ஆப்கானிஸ்தானை தளமாகப் பயன்படுத்தும் ஆபத்து இருக்கிறது. அதனால் தாலிபன்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று சீனா ஆர்வமாக இருந்ததில் எந்த வியப்பும் இல்லை.

ரஷ்யாவுக்கும் இதுபோன்ற கவலை உண்டு. 1980-களில் தங்களுக்கு ஏற்பட்ட அதே வகையிலான பின்னடைவு அமெரிக்காவுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்ற வகையில் ஆறுதல் அடைந்து கொள்ளலாம்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் தனது நட்புநாடுகள் அமைந்திருக்கும் மத்திய ஆசியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று கவலை ரஷ்யாவுக்கு இருக்கிறது. அதனால்தான் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பி வருவோரால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக தஜிகிஸ்தான்-ஆப்கன் எல்லையில் போர்ப் பயிற்சியை நடத்தியது.

எனவே குறுகிய காலத்தில், ஆப்கானிஸ்தானின் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி அதன் எதிரிகளுக்கு நிச்சயமாக நன்மை பயக்கும். ஆனால் அவர்களின் மனப்பான்மை ஒரு காலத்திலும் மாறப்போவதில்லை.

உண்மையில் முக்கியமானது அமெரிக்காவின் கூட்டாளிகளிடையே ஏற்படும் மாற்றங்கள்தான். ஆப்கானிஸ்தான் அனுபவத்திலிருந்து அவர்கள் எதை எடுத்துக்கொள்வார்கள்? உடனடியாக ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு அப்பால், நேட்டோ நாடுகள், இஸ்ரேல், தைவான், தென் கொரியா அல்லது ஜப்பான் ஆகியவை அமெரிக்காவை குறைந்த நம்பகத்தன்மை கொண்ட கூட்டாளியாகப் பார்க்குமா?

அப்படிச் செய்தால், ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியிருக்கும் பைடனின் முடிவு உண்மையிலேயே எதிர்காலத்தில் தீர்க்கமான விளைவுகளை ஏற்படுத்துவதாக அமையும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :