அடுத்தடுத்து நடக்கும் தொடர்ந்த க்ரிப்டோ-ஹேக்கில் உண்மையாக பாதிக்கப்படுபவர்கள் யார்?

  • ஜோ டைடி
  • சைபர் பிரிவு
மனிதர்

பட மூலாதாரம், Getty Images

டாக்ஸி ஓட்டுநர் க்ரிஸ் திரும்பத் திரும்ப அலைபேசியைத் திறந்து பார்க்கிறார்.

"2500 யூரோ மதிப்புள்ள க்ரிப்டோ கரன்சி காயின்கள் வைத்திருந்தேன். அவை எல்லாம் போய்விடும்போல இருக்கிறதே" என்று புலம்புகிறார். ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஒரு க்ரிப்டோ பயனாளர் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். சென்றவாரம் லிக்விட் க்ளோபல் என்ற க்ரிப்டோகரன்சி பரிமாற்ற மையம் ஹேக் செய்யப்பட்டதில் க்ரிஸ் உட்பட பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நூறு மில்லியன் டாலர் ஹேக்கிங் தாக்குதலில் பணத்தை இழந்த எல்லாருக்கும் இழந்த பணம் திருப்பித் தரப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் கையில் பணம் வரும்வரை பெரும்பாலான நுகர்வோர் கவலையில்தான் இருப்பார்கள்.

தனது பழைய வோக்ஸ்வேகன் காரில் பயணிகளை ஏற்றிச் செல்லும்போதெல்லாம், 38 வயதான க்ரிஸ் இதை நினைத்து பயப்படுகிறார். "இந்தக் காரின் வயது 20. க்ரிப்டோகரன்சியில் பணத்தைப் போடாமல் இருந்திருந்தால் நான் ஒரு புது காரையே வாங்கியிருப்பேன். இது என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும் என்று சொல்லிவிட முடியாது. ஆனாலும் இது பெரிய இழப்புதான். இந்தக் காசை மறுபடியும் சேர்க்க ஒரு வருடமாகும்" என்கிறார்.

"அதீதமான பதற்றத்தில் இருக்கிறேன்"

இந்தோனேசியாவைச் சேர்ந்த 27 வயது டீனா அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார். "ஹேக்கர்களை நினைத்தால் ஆத்திரமாக இருக்கிறது. என்னை நினைத்தால் பதற்றம் வருகிறது. 30,000 டாலர்கள் இதில் போட்டிருக்கிறேன். வாழ்வதற்கு அந்தப் பணம் தேவை. நான் ஒரு சாதாரணக் குடும்பத் தலைவி. க்ரிப்டோ மூலம் கொஞ்சம் பணம் சேர்க்க நினைத்தேன்" என்கிறார்.

இன்னொருபுறம் 42 வயதான நார்வே மருத்துவர் ஒருவர், தனது வாழ்நாள் சேமிப்பே கரைந்துவிட்டது என்கிறார். "கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த பொக்கிஷம் இது. என்னால் எதிலும் கவனம் செலுத்தவே முடியவில்லை. 9,69,000 யூரோக்கள் வைத்திருந்தேன். அதீத பதற்றத்தில் இருக்கிறேன். கிட்டத்தட்ட 8/10 பதற்றம் என்று வைத்துக்கொள்ளுங்களேன். கவலையாக இருக்கிறது. எப்போதும் இதைப் பற்றியே நினைக்கிறேன்" என்கிறார்.

பட மூலாதாரம், Reuters

பதற்றமடையும் பெற்றோர்கள்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸின் பெற்றோர்கள் மிகவும் பதற்றத்தில் இருக்கிறார்கள். பரிவர்த்தனைகளை அந்த நிறுவனம் நிறுத்துவதற்கு முன்பு அவர்கள் வேகமாக பணத்தைத் திரும்ப எடுத்ததில் நஷ்டப்பட்டிருக்கிறார்கள்.

"அப்பா அம்மா இருவருமாக சேர்ந்து 70,000 டாலர் மதிப்பிலான ஒரு பிட்காயினை வைத்திருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய தொகை. முதலில் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. பீதியில் அவர்கள் அதை விற்கவேண்டி வந்தது. 10000 டாலர் நஷ்டமாகிவிட்டது. நிறைய மன உளைச்சல் ஏற்பட்டது" என்கிறார் ஜேம்ஸ்.

சென்றவாரம் லிக்விட் க்ளோபல் ஹேக் செய்யப்பட்டது. பணம் மீட்கப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு.

ஜப்பானைச் சேர்ந்த லிக்விட் க்ளோபல் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்த்துவருவதாகவும் இதனால் பயனாளிகளுக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என்று உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த ஹேக்கிங் பற்றி நேரடியாகத் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும், ஒருவேளை கம்பெனியின் ட்விட்டர் பக்கத்தையோ செய்தியையோ பார்த்திருக்காவிட்டால் தங்களுக்கு எதுவும் தெரிந்திருக்காது என்றும் குற்றம் சாட்டுகின்றனர்.

பரிமாற்ற நிறுவனங்கள் பாதுகாப்பானவையா?

லிக்விட் க்ளோபல் போன்ற நிறுவனங்கள் க்ரிப்டோகரன்சி உலகில் முக்கியமானவை. பிட்காயின், எதரியம் உள்ளிட்ட டிஜிட்டல் காசுகளை விற்கவும் வாங்கவும் அவை உதவுகின்றன. தங்கள் காசுகளைப் பாதுகாக்கவும் ப்யனர்கள் இந்த நிறுவனங்களையே நாடுகின்றனர். ஆனால் இந்த நிறுவனங்கள் பாதுகாப்பானவையா என்பது கேள்விக்குறிதான்.

இந்த மாதத் தொடக்கத்தில் பாலி நெட்வொர்க் என்கிற க்ரிப்டோ தளமும் ஹேக் செய்யப்பட்டதில் 610 மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டது. 2014லிருந்து இன்றுவரை டஜனுக்கும் மேற்பட்ட ஹேக்கிங் நிகழ்வுகளில் 1.6 பில்லியன் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய க்ரிப்டோகரன்சி ஹேக்கிங் நிகழ்வுகள்

· பிட்க்ரெயில்: இத்தாலியைச் சேர்ந்த இந்த நிறுவனம் 2018ல் ஹேக் செய்யப்பட்டது. 146 மில்லியன் டாலர்கள் தொகையை 2,30,000 பயனாளர்கள் இழந்தார்கள்.

· குகாயின்: சிஷெல்ஸைச் சேர்ந்த இந்த பரிமாற்ற நிறுவனத்தை வடகொரியாவைச் சேர்ந்தவர்கள் ஹேக் செய்ததாக சொல்லப்படுகிறது. 2020ல் நடந்த இந்த நிகழ்வில் 281 மில்லியன் டாலர்கள் திருடப்பட்டன. பெரும்பாலான அளவில் பணம் மீட்கப்பட்டு நுகர்வோருக்கு அளிக்கப்பட்டது.

· எம்டிகாக்ஸ்: இந்த ஜப்பானிய நிறுவனம் 2014ல் ஹேக் செய்யப்பட்டதில் 450 டாலர் நஷ்டம் ஏற்பட்டது. இன்னும் இழந்தவர்களின் பணம் திரும்ப வரவில்லை.

· காயின்செக்: ஜப்பானிய நிறுவனமான காயின்செக் 2018ல் ஹேக் செய்யப்பட்டது. 534 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. நுகர்வோருக்கு நிறுவனம் பணத்தைத் திரும்பக் கொடுத்தது.

· பாலி நெட்வொர்க்: இந்த சீன நிறுவனம் இந்த மாதம் ஹேக் செய்யப்பட்டதில் 610 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டது. ஹேக்கர் பணத்தைத் திரும்பத் தந்தால் இப்போது நுகர்வோருக்குப் பணம் திரும்பத் தரப்படுகிறது.

நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் இழப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த ஹேக்கிங் நிகழ்வுகள் மாதம் ஒருமுறை நடக்கின்றன. இந்தத் தளங்கள் எந்த விதிமுறைக்கும் உட்படுவதில்லை என்பதால், நுகர்வோருக்குப் பணம் திரும்பக் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

"முடிவெட்டிக் கொள்ளுதல்"

சில நேரம் நுகர்வோருக்குப் பாதிப்பணம் மட்டுமே திரும்பக் கிடைக்கிறது. இது "taking a hair cut" என்று அழைக்கப்படுகிறது. "அப்படி எதுவும் நடக்காது" என்று லிக்விட் க்ளோபலின் இயக்குநர் செத் மெலாமெட் தனது ட்விட்டர் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

நிதி விமர்சகர் ஃப்ராசெஸ் கொப்போலா, இதுபோன்ற பாதுகாப்புப் பிரச்சனைகளிலிருந்து இந்த நிறுவனங்கள் பாடம் கற்றுக்கொள்ள நீண்ட காலம் எடுத்துக்கொள்கின்றன என்று குற்றம் சாட்டுகிறார். "வழக்கமான வங்கிகள் மிகவும் சரியாகப் பாதுகாப்பைக் கையாளுகின்றன. அங்கு பாதுகாப்பு பற்றிய விதிமுறைகளும் அதிகம். இன்னும் சொல்லப்போனால் வங்கிகளிலும் தொடர்ந்து ஹேக்கிங் நடக்கிறது. ஆனால் அங்கு தீவிர பாதுகாப்பு இருப்பதால் அது யாரையும் பாதிப்பதில்லை. தவிர, பயனாளர்களுக்குப் பணத்தைத் திரும்பித்தர்வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு உண்டு. க்ரிப்டோ கரன்சி நிறுவனங்களுக்கு அது கிடையாது. பொதுவான வங்கி அமைப்புகளில் தனிப்பட்ட பயனாளர்கள் ஹேக் செய்யப்படவே வாய்ப்புகள் அதிகம், அதனால் நஷ்டமும் ஏற்படுகிறது" என்று விளக்கம் தருகிறார்.

வங்கிகளில் நடக்கும் ஹேக்கிங்

பெரிய வங்கிகளில் பணிபுரிந்துவிட்டு இப்போது அல்லையன்ஸ் ப்ளாக் என்ற க்ரிப்டோ தளத்தின் நிறுவனராக இருக்கும் முனைவர் ஆம்பர் காட்டர், வங்கிகளிலும் பெரிய ஹேக்கிங் திருட்டுகள் நடந்திருக்கின்றன என்கிறார்.

"2016ல் 81 மில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்திய வங்கதேச ஹேக்கிங், 2017ல் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஹேக் செய்யப்பட்டபோது ஹேக்கர்கள் 171 மில்லியன் டாலர்களைத் திருடிய நிகழ்வு என்று பல உதாரணங்கள் உண்டு" என்கிறார். யூனியன் வங்கியின் பணம் மீட்கப்பட்டது. இரு நிகழ்வுகளிலும் நுகர்வோருக்கு இழப்பு ஏற்படவில்லை.

"க்ரிப்டோ ஒரு புதிய துறை, வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. அதன் அறிகுறிதான் இந்த ஹேக்கிங் நிகழ்வுகள் எல்லாமே. இந்தத் தளங்கள் ஓப்பன் சோர்ஸ் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்பட்டவை. ஓப்பன்சோர்ஸ் இருந்தால் ஒரு சமூகத்தின் மொத்த அறிவையும் பயன்படுத்தி மென்பொருளை மேம்படுத்த முடியும். அது ஒரு நல்ல விஷயம்தான். ஆனால் அந்த கோடிங்கில் எதாவது ஒரு சின்ன ஓட்டை இருந்தால் அதையும் ஒரு புத்திசாலி ஹேக்கரால் கண்டுபிடித்து உள்ளே நிழைந்துவிட முடியும்" என்கிறார்.

விதிமுறைகளை அதிகப்படுத்துவதன்மூலம் இவற்றைத் தவிர்க்கலாம் என்று இவர் நம்புகிறார்.

"நாம் சரியாக இதை ஆராயவேண்டும், பரிசோதனை செய்யவேண்டும். எல்லாரும் பயன்படுத்தும்விதமாக க்ரிப்டோ கரன்சி வளரவேண்டும் என்றால் சந்தையில் அது நிற்கவேண்டும், தரம் வேண்டும்" என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

க்ரிப்டோ குழப்பங்கள்

இதுபோன்ற சைபர் தாக்குதல்கள் தவிர வேறு சில பிரச்சனைகளாலும் பல ஆண்டுகளாகவே முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆஃப்ரிக்ரிப்ட் என்ற பரிமாற்ற நிறுவனத்தின் நிறுவனர்கள் இந்த வருடத் தொடக்கத்தில் தலைமறைவானார்கள். அதனால் எத்தனை மில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை இன்றுவரை முதலீட்டாளர்கள் கணக்கிட்டுவருகிறார்கள்.

கனடாவின் க்வாட்ரிகா சி.எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் 2019ல் இறந்தார். அவரது இறப்பின்போது 135 டாலர் மதிப்புள்ள காசுகள் கணக்கு வைக்கப்படாமல் இருந்தன. அதற்கான நஷ்டஈடு கேட்டு முதலீட்டாளர்கள் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

பிரமிடு திட்டங்கள் மற்றும் பிற மோசடிகளால் வழக்கமான நிதி அமைப்புகளிலும் பெரிய அளவில் மோசடி நடப்பது இயல்புதான். அது க்ரிப்டோகரன்சி இழப்பை விடக் கூடுதலாகக் கூட இருக்கலாம்.

காணொளிக் குறிப்பு,

பிட்காயின் மதிப்பு கிடுகிடு உயர்வு: அமேசானுக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

வேகமாக வளர்ந்தாலும் ஒப்பீட்டளவில் க்ரிப்டோ உலகம் சிறியது. அந்தத் துறை முழுக்கவே பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதை சமீபத்திய நிகழ்வுகள் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றன.

600 மில்லியன் திருடிய பிறகு அந்த ஹேக்கர் இப்படி ஒரு ட்வீட் மூலம் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்:

"ஹேக்கர்களான நாங்கள் ராணுவத்தைப் போன்றவர்கள். உங்களுக்கு ஆயுதம் தரப்பட்டால், பில்லியன் கணக்கான டாலர்களை மக்களிடமிருந்து பாதுகாக்கவேண்டும் என்று சொல்லப்பட்டால், நீங்கள் தீவிரவாதியாக இருப்பீர்களா பேட்மேன் ஆக இருப்பீர்களா?"

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :