ச்சிங் ஷி: பாலியல் தொழில், தகாத உறவு - 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீன கடல் கொள்ளை ராணியின் வரலாறு தெரியுமா?

பிபிசி சீன கடல் கொள்ளையர்

பட மூலாதாரம், UNKNOWN

(உலக நாடுகளில் பதிவான பழங்கால சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், பன்னிரண்டாம் கட்டுரை இது)

உலகின் பல சாம்ராஜ்ஜியங்களை கடல் கடந்து வந்த பேரரசுகள் கட்டுப்படுத்தியும் வீழ்த்தியும் வந்த வரலாறை நாம் பார்த்திருப்போம். ஆனால், தென் சீன கடலில் 1,800 கப்பல்களில் வலம் வந்த கடல்கொள்ளையர்களின் தலைவியாக தனியொரு பெண் 200 ஆண்டுகளுக்கு முன்பு கோலோச்சினார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?

அதுவும் பாலியல் தொழிலாளியாக சீன கடலோர பகுதிகளில் அறிமுகமான அந்த பெண்மணி, பல ஆண்டுகளாக சீன படைகளுக்கும் போர்ச்சுகீசிய படைகளுக்கும் சிம்மசொப்பனமாக இருந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா?

ஜஹ் யி சாவ் அல்லது ச்சிங் ஷி அல்லது ஷி யாங் என பல பெயர்களில் வரலாற்றாய்வாளர்களால் அந்த பெண்மணி அழைக்கப்படுகிறார். பாலியல் தொழிலாளி, கொடூர குணம், இரக்கமற்ற நிலை, மூர்க்க்தனமான தாக்குதல், கண்மூடித்தனமான தண்டனை என வன்முறை உச்சத்தின் ஒட்டுமொத்த அடையாளமாக அந்த பெண்மணி 1844 வரை வாழ்ந்தார்.

ச்சிங் ஷி என பரவலாக அறியப்பட்ட அந்த பெண்மணி பிறந்தது 1775ஆம் ஆண்டு. சீனாவின் குவாங் டூங் மாகாணத்தில் ஷின்குவே என்ற இடத்தில் வாழ்ந்த பெண்ணுக்கு இவர் பிறந்தார். மற்றபடி ச்சிங் ஷியின் பெற்றோர் யார், அவர்களின் வம்சாவளி என்ன போன்ற விவரங்களை வரலாற்றாய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை.

ஆனால், ச்சிங் ஷியின் வாழ்க்கையும் அவர் கடைப்பிடித்த கொள்கைகளும் வரலாற்றில் அவருக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொடுத்தது.

ஆண்கள் மட்டுமே கடல் வாணிபத்திலும் கடல் தொழிலிலும் ஈடுபட்டு வந்த 18ஆம் நூற்றாண்டில், துறைமுக கப்பல்களிலும் மிதக்கும் படகுகளிலும் பாலியல் தொழில் கொடி கட்டிப்பறந்தது. அந்த கால கட்டத்தில் தனது ஆறாவது வயதிலேயே பாலியல் தொழிலில் ச்சிங் ஷி ஈடுபட்டதாக சீன வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

அதே கால கட்டத்தில் சீனாவின் குவிங் பேரரசு மற்றும் என்குயென் அன் பேரரசுக்கு எதிராக போரிட்டு வந்த கடல் கொள்ளையர்களின் தலைவன் ஜங் யி (ஆங்கில உச்சரிப்பில் Zheng Yi). வியட்நாமின் டே சன் வம்சாவளியினருக்கு ஆதரவாகவும் தனது உறவினர் ஜங் குயிக்காகவும் போரில் ஈடுபட்டார். இந்த ஜங் குயி, 1700களில் கடல் கொள்ளையில் கோலோச்சினார்.

கடல் கொள்ளையருடன் திருமணம்

இந்த நிலையில், ச்சிங் ஷியை ஒரு கொள்ளை செயலின்போது பார்த்து அவர்பால் ஈர்க்கப்பட்டார் ஜங் யி. தன்னை திருமணம் செய்து கொண்டால் தாம் சேர்க்கும் சொத்து எதுவாக இருந்தாலும் அதில் பாதி உனக்குத்தான் என்ற உத்தரவாதத்தை கொடுத்தார் ஜங் யி.

விலை மாதுவாக இருந்த ச்சிங் ஷி இந்த தொழில்முறை உடன்பாடு ஏற்புடையதாக இருந்தது. இதனால் 1801இல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அப்போது ச்சிங் ஷிக்கு வயது 26.

இவர்களின் திருமணம் முடிந்த ஒரே ஆண்டில் ஜங் யி-இன் உறவினர் ஜங் குயி சீனா, வியட்நாம் எல்லையில் உள்ள ஜியாங் பிங் நகரில் என்குயென் படையினரால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜங் குயி தலைமையில் இயங்கி வந்த கடற்கொள்ளையர்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு பெரும் கடற்கொள்ளை கூட்டத்துக்கு தலைவரானார் ஜங் யி.

இதைத்தொடர்ந்து ஜாங் போ ட்சாய் என்ற மீனவ குடும்பத்து சிறுவனை தத்தெடுத்து வளர்த்தார் ஜாங் யி. 1798இல் தனது 15ஆவது வயதில் கடத்தி வரப்பட்டு அவரை கடல் கொள்ளையில் ஈடுபட வைத்தார் ஜங் யி. வளர்ப்புத் தந்தைக்கு உதவியாக கடற்கொள்ளையில் ஈடுபட்டார் ஜாங் போ ட்சாய்.

ஆனால், சீன கடல் பகுதி வழியாக கடல் வாணிபம் மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சீனா, பிரெஞ்சு, பிரிட்டிஷ் மற்றும் போர்ச்சுகீசிய படையினரின் கடல் ஆதிக்கத்தை சமாளிக்க வேண்டுமானால், சீன கடல் பகுதியில் பிரிந்து கிடக்கும் கடற்கொள்ளையர்கள் ஓரணியில் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும் என திட்டமிட்டார் ஜங் யி.

கடற்கொள்ளை குழுக்களை ஒருங்கிணைத்த ச்சிங் ஷி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சீனா, போர்ச்சுகீஸ், பிரெஞ்சு படைகளின் ஆதிக்கத்தை சமாளிக்க பிரிந்து கிடந்த கடல் கொள்ளையர்களை ஒருங்கிணைக்க கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு பேருதவியாக இருந்தவர் ச்சிங் ஷி. அவர்தான் மற்ற கொள்ளை கூட்ட தலைவர்களுடன் மத்தியஸ்தம் நடத்தியும் பேச்சுவார்த்தை கைகூடவும் பாலமாக விளங்கினார். அவர்களுடன் பேச்சு நடத்த தாம் முன்பு ஈடுபட்ட பாலியல் தொழில் தொடர்புகள் அவருக்கு உதவின.

இந்த முயற்சிகளின் விளைவாக, 1805இல் சீன கடல் பகுதியில் உள்ள அனைத்து கடல் கொள்ளையர் குழுக்களும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கின.

செங்கொடி, கருங்கொடி, நீலக்கொடி, வெண் கொடி, மஞ்சள் கொடி, ஊதா கொடி என இந்த கொள்ளைக்குழுக்கள் ஆறு வண்ண தனித்தனி கொடிகள் மூலம் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டன.

கடல்களின் ஆளுகையையும் இவர்கள் தங்களுக்குள்ளாக பிரித்துக் கொண்டனர். அனைத்து குழுக்களும் ஜங் யி தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவதே இவர்களுக்குள்ளாக ஏற்பட்ட உடன்படாடு.

இதன்படி 1800களின் தொடக்கத்தில் 1,200 ஆயுத பலம் நிறைந்த கப்பல்களில் 70 ஆயிரம் கடல் கொள்ளையர்களுடன் வலுவான ஒரு கூட்டமைப்புக்கு தலைவராக ஜங் யி விளங்கினார். அவரை இயக்கும் சக்தியாக ச்சிங் ஷி உருவெடுத்தார்.

இதில் செங்கொடி கடற்கொள்ளைக் குழு, ஜங் யி தலைமையிலும் இரண்டாவது மிகப்பெரிய கடற்கொள்ளைக் குழு அவரது வளர்ப்பு மகன் ஜாங் போ ட்சாய் தலைமையிலும் செயல்பட்டன.

இதற்கிடையே, ச்சிங் ஷி - ஜங் யி தம்பதிக்கு இரண்டு மகன்கள் பிறந்ததனர். ஒருவர் ஜங் யிங்ஷி, இவர் 1803ல் பிறந்தார். மற்றொருவர் ஜங் ஷியோங்ஷி. இவர் 1807இல் பிறந்தார் என்றும் சில வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். வேறு சிலர், இந்த தம்பதிக்கு குழந்தையே பிறக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே கடல் பயணத்தின்போது தனது 42ஆவது வயதில் ஜங் யி திடீரென இறந்தார்.

கணவர் இறந்தவுடனேயே கடற்கொள்ளை கூட்டமைப்பின் தலைமை கைமாறி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் ச்சிங் ஷி. இதனால், தனது கணவரின் வளர்ப்பு மகன் ஜாங் போவுடன் சேர்ந்து கூட்டமைப்பில் உள்ள மற்ற தலைமைகளை தன்வயப்படுத்தினார் ச்சிங் ஷி.

தகாத உறவு

ஆனால், அந்த காலகட்டத்தில் கடற்கொள்ளை கூட்டத்துக்கு ஒரு பெண் தலைமை ஏற்பதை அவர்களுக்குள்ளாக வகுத்துக் கொண்ட சட்டம் அனுமதிக்கவில்லை. காரணம், அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள், கடல் தொழிலுக்கும் கப்பல் படை கப்பல்களிலும் பெண்கள் இடம்பெற்றிருந்தால் கடல் அன்னை அவர்கள் செல்லும் கப்பல்களுக்கு பேராபத்தை ஏற்படுத்துவர் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர்.

இதனால், ஜாங் போ ட்சாய்-ஐ, கடற்கொள்ளையர் கூட்டமைப்புக்கு கேப்டன் ஆக தேர்வு செய்ய மற்ற கடற்கொள்ளையர் குழுக்களின் ஒப்புதலைப் பெற்றார் ச்சிங் ஷி.

பின்னர் ஜாங் போவை தமது சொல்படி கேட்டு நடக்கும் கைப்பாவை ஆக மாற்றினார் ச்சிங் ஷி. வளர்ப்புத் தந்தையின் மனைவி ச்சிங் ஷி என்ற நிலையைக் கடந்து இந்த இருவருக்கும் மிக நெருக்கமான உறவு ஜங் யி மறைந்த காலத்துக்கு முன்பே இருந்ததாக, நிரூபிக்கப்படாத வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

இப்படி பெயரளவுக்கு கடற்கொள்ளை கூட்டமைப்புக்கு தலைமை பொறுப்பை ஜாங் போ ட்சாய் ஏற்றிருந்தாலும், உச்ச அதிகாரம் மிக்கவராக ச்சிங் ஷி உருவெடுத்தார். அவரது தலைமையின்கீழ் கடற்கொள்ளை குழுக்கள் ராணுவம் போல கட்டுக்கோப்புடன் செயல்படத் தொடங்கின. சுயமாக ஒழுங்கு விதிகள் வகுக்கப்பட்டன. தலைமைக்கு கீழ்படிதல் கட்டாயமாக்கப்பட்டது. விதிகளை மீறும் குழுவினருக்கு தண்டனைகள் கொடூரமாக இருந்தன.

கொடூர தண்டனைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ச்சிங் ஷி கடல் கொள்ளை கூட்டமைப்பின் தலைமையில் தவறு செய்த உறுப்பினர்களுக்கு கொடூர தண்டனைகள் வழங்கப்பட்டன.

கடற்கொள்ளையில் ஈடுபடும் குழு உறுப்பினர் கரையில் பெண்களிடம் தகாத வகையில் நடந்து கொண்டால், அவரது காது அறுக்கப்பட்டு, கடற்கொள்ளை குழு முன்பாக ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு கொல்லப்படுவார்.

கடலில் கப்பல்களிலோ கடலோர கிராமங்களின் சூறையாடல் நடவடிக்கையின்போதோ திருடப்பட்ட பொருட்கள், தங்கம், வைரம் போன்றவற்றில் விலை மதிப்பான பொருட்கள், பொது கருவூலத்தில் சேமிக்கப்படும் முன்பாக அவற்றை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. அதில் 10ல் 2 பொருட்கள் அல்லது பணம், அதை திருடும் உறுப்பினருக்கே சேரும். ஆனால், தப்பித்தவறி ஒரு பொருளை கூடுதலாக அந்த நபர் மறைத்து வைத்தாலும் அது கையாடலாக கருதப்பட்டு அவர் கொல்லப்படுவார்.

கடற்கொள்ளைக் குழு கிராமங்களில் கொள்ளையடிக்கச் செல்லும்போது அங்கிருக்கும் பெண்களை துன்புறுத்தவோ பாலியல் வல்லுறவு செய்யவோ கூடாது. அந்த கிராமத்தில் எத்தனை பெண்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர் என்ற விவரம் எழுத்துபூர்வமாக ஆவணப்படுத்தப்படும். ஒருவேளை பாலியல் வல்லுறவிலோ தகாத உறவிலோ பெண் கைதிகளுடன் யாராவது ஈடுபடுவது தெரிய வந்தால் அவர் கொல்லப்படுவார்.

இந்த மூன்று விதிகளும் ச்சிங் ஷி கடற்கொள்ளை கூட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என குயிங் பேரரசில் அதிகாரியாக இருந்த யுவான் யோங்க்லன் அளித்த வாக்குமூலம் ஜிங் ஹாய் ஃபென் ஜி என்ற கடற்கொள்ளை கூட்டமைப்பு ஆவணப்புத்தகத்தில் பதிவாகியுள்ளது.

ஆனால், ஜாங் போ ட்சாய் வகுத்த விதிகள், தவறுதலான மொழிபெயர்ப்பால் ச்சிங் ஷி செய்த நடவடிக்கைகளாக சித்தரிக்கப்பட்டதாக சில வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடல் போர்களும் மூர்க்கத்தன தாக்குதல்களும்

பட மூலாதாரம், ALAMY

படக்குறிப்பு,

சீனா கடல் பகுதியில் செங்கொடி கடற்கொள்ளை குழுக்கு தலைமை தாங்கி பேரரசுகளுடன் மோதிய ச்சிங் ஷி.

1808இல் ச்சிங் ஷியின் கைப்பாவையாக செயல்பட்ட ஜாங் போ ட்சாய், பர்ல் (Pearl) நதிக்கரையோர கிராமங்களை சூறையாடும் நோக்குடன் ஹியமென் கடலோர நகரின் பிரிகேட் லின் குவோலியாங் என்ற ஜெனரலின் கடற்படை கப்பல்களை இலக்கு வைத்து தாக்கினார்.

அதுநாள்வரை பேரரசுகளுக்கு சொந்தமான கடற்படை கப்பல்களை கடற்கொள்ளையர்கள் இத்தனை மூர்க்கமாக இலக்கு வைத்திருக்கவில்லை. அந்த தாக்குதலில் 35 சீன போர்க்கப்பல்கள் அழிந்தன.

இதைத்தொடர்ந்து ஹியூமென் நகரின் வெய்யுவான் தீவின் கிழக்குப் பகுதியில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். அதில் லெஃப்டினன்ட் கர்னல் லின் ஃபா தோல்வியைத் தழுவினார்.

இந்த இரு தாக்குதல்களும் பர்ல் நதியில் கடல் கொள்ளையர்களின் போக்குவரத்துக்கு தடையில்லா சூழலை ஏற்படுத்தின.

தாங்கள் மோதுவது அரசுப் படைகளுடன் என்பதை அறிந்தும் அறியாததுமாக, தங்களையே ஒரு ராணுவமாகவும் அசைக்க முடியாத சக்தியாகவும் ச்சிங் ஷி குழுவினர் கருதிய நாட்கள் அவை.

சீற்றம் கொண்ட பன்னாட்டு கடற்படைகள்

1809இல் 100 போர்க் கப்பல்களுடன் தவான்ஷான் தீவு அருகே குவிங் பேரரசின் மாகாண தளபதி சூன் குவான்மூவின் தலைமையில் கடற்படையினர், ஒரு கடல் கொள்ளை குழுவை சூழ்ந்தனர்.

இது குறித்து முன்பே தகவலறிந்த கடற்கொள்ளைக்குழு, தங்களை காக்க வருமாறு ச்சிங் ஷிக்கு அபயச் செய்தி அனுப்பினர்.

அதன்பேரில் செங்கொடி கடற்கொள்ளைக்குழு, வெண் கொடி கடற்கொள்ளைக்குழுவின் கப்பல்கள் இரு குழுக்களாக அரசுப் படை கப்பல்களை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு திடீர் தாக்குதலில் ஈடுபட்டன. அதை சமாளிக்க முடியாமல் சூன் குவான்மூ, எஞ்சிய படையினருடன் பின்வாங்கி தப்பிச் சென்றார்.

ஆனால், அந்த தாக்குதலில் வெண் கொடி கடற்கொள்ளை குழுவின் தலைவன் லியாங் கொல்லப்பட்டார். அவரது தலைமையிலான கப்பல்களும் குழுவினரும் இறந்தனர். இந்த தாக்குதலிலும் அரசுப் படைக்கு சொந்தமான 25 கப்பல்கள் அழிந்தன.

வெண் கொடி கொள்ளைக்குழு அழிந்து போன ஆத்திரத்தில், செங்கொடி குழு மற்றும் கருங்கொடி குழுக்களுக்கு தலைமை தாங்கி பர்ல் நதியில் தென்பட்ட அரசுப்படை கப்பல்களையும் வாணிப கப்பல்களையும் ஜாங் போ ட்சாய் குழுவினர் அழித்தொழித்தனர்.

சுமார் 10 ஆயிரம் பேர் வரை ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இந்த நடவடிக்கையில் உயிரிழந்தனர். பர்ல் நதிக்கரையோர கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2,000 பேரும் கொல்லப்பட்டனர்.

இந்த குழுவினர் கடலோர கிராமங்களை சூறையாடினர். அங்கிருந்த செல்வ வளங்களை கொள்ளையடித்தனர். நூற்றுக்கணக்கான மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். ச்சிங் ஷி மட்டும் 500 கப்பல்களில் கடற்கொள்ளையர்களுடன் இந்த பகுதியில் நடக்கும் சூறையாடல்களை மேற்பார்வையிட்டார்.

இந்த கால கட்டத்தில் மக்கெள பகுதியை போர்ச்சுகீசிய பேரரசு ஆளுகை செய்து வந்ததால், கடற்கொள்ளையர்களை ஒழிக்க அவர்களின் உதவியை நாடியது சீனாவின் குயிங் பேரரசு.

அந்த நேரத்தில் போர்ச்சுகீசிய ஆளுகையில் இருந்த தைமூர் ஆளுநரின் கீழ் இருந்த பகுதியையும் கடற்கொள்ளைர்கள் கைப்பற்றியிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

இதற்கு தக்க பதிலடி கொடுக்க காத்திருந்த போர்ச்சுகீசிய படையினர், டூங் சூங் விரிகுடா பகுதியில் தமது கப்பல்களை பழுதுபார்க்க ச்சிங் ஷி வந்திருப்பதை அறிந்து தமது படை பரிவாரங்களுடன் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அவர்களுக்கு உதவியாக சூன் குவான்மோவின் படையினரும் 93 கப்பல்களுடன் ச்சின் ஷி குழுக்களை சுற்றி வளைத்தனர். பிரெஞ்சு காலனியாதிக்க கடல் வாணிபத்துக்கும் சீன கடல் கொள்ளையர்கள் சவாலாக இருந்ததால், இந்த தாக்குதலில் அவர்களும் இணைந்தனர்.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்த இந்த மோதலில் மாகாண படையின் ஒரு கப்பல் அழிக்கப்பட்டது. இதனால், தமது கப்பல்களுக்கு தீ மூட்டி அதை கடற்கொள்ளையர்களின் கப்பல்கள் மீது மோதச் செய்யும் உத்தியை சூன் குவான்மோ கையாண்டார்.

இவ்வாறு தீ மூட்டிய 43 படகுகளை கடல் கொள்ளையர்களை நோக்கி அவர் அனுப்பினார். ஆனால், வேகமாக வீசிய காற்று அரசுப் படையினர் பக்கமே திரும்பியதில் பல கப்பல்கள் அழிந்தன.

இந்த தாக்குதல்களின்போது ச்சிங் ஷியின் கப்பல்கள் சேதம் அடையவில்லை. ஆனால், 43 கடல் கொள்ளையர்கள் பலியாகியிருந்தனர். இந்த தொடர் போரானது சீன வரலாற்றில் "பேட்டில் ஆஃப் தி டைகர் மெளத்" என அழைக்கப்படுகிறது.

சரண் அடைந்தவர்களுக்கு கடற்படை பதவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கடல் கொள்ளையர் குழுக்களுடன் மோதுவது தங்களுக்கும் பேரிழப்பை விளைவிக்கும் என உணர்ந்த குயிங் பேரரசு, சின் ஷியுடன் சமரசம் செய்ய திட்டமிட்டது.

அரசுப் படைகளுடன் மோதி உயிர்களை பறிகொடுப்பது முட்டாள்தனம் என்பதை உணர்ந்த கருங்கொடி கடல் கொள்ளை குழு தலைவர் குவோ போடாய், ஜாங் போ ட்சாய் மற்றும் ச்சிங் ஷியின் திட்டத்துக்கு ஒத்துழைக்க மறுத்தார்.

1810ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் லியாங்குவாங் வைரசாரியிடம் சரண் அடைந்தார். அதற்கு பரிசாக அவருக்கு சப்-லெஃடினன்ட் அந்தஸ்து வழங்கப்பட்டது.

அவர் அரசுப் படையில் சேர்ந்ததும் கடல் கொள்ளையர்களுக்கு உணவு, எரிபொருள், ஆயுத விநியோகம் எங்கிருந்தெல்லாம் வருமோ அது பற்றிய தகவல்களை பிரிட்டிஷ், போர்ச்சுகீஸ் மற்றும் சீன படைகளுக்கு வழங்கினார். அதனால், கடல் கொள்ளையர்களுக்கான அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைபட்டன.

இந்த நேரத்தில் கடல் கொள்ளையர் குழுக்களுடன் மோதுவது தங்களுக்கும் பேரிழப்பை விளைவிக்கும் என உணர்ந்த குயிங் பேரரசு, ச்சிங் ஷியுடன் சமரசம் செய்ய திட்டமிட்டது.

தங்களுடைய தாக்குதல் திறன் பலவீனம் அடைந்து வருவதால், வேறு வழியின்றி அந்த திட்டத்துக்கு ஒப்புக் கொள்ள ச்சிங் ஷி கட்டாயப்படுத்தப்பட்டார். அரசு தரப்பு பேச்சுவார்த்தையை பாய் லிங்கே முன்னின்று நடத்தினார்.

அதன் முடிவில் 1810ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி, ஜாங் போவும் ச்சிங் ஷியும் தங்களுடைய 17 ஆயிரத்துக்கும் அதிகமான கடல் கொள்ளையர்கள், 226 கப்பல்கள், 1,300 எறிகுண்டு தளவாடங்கள், 2,700 ஆயுதங்களுடன் அரசுப் படையினரிடம் சரண் அடைந்தனர்.

இந்த நடவடிக்கைக்காக ஜாங் போவுக்கு 20-30 கப்பல்களையும் லெப்டிணன்ட் அந்தஸ்தையும் சீன குயிங் பேரரரசு வழங்கியது.

வளர்ப்பு மகனை திருமணம் செய்ய அனுமதி

அப்போது தமது கணவரின் வளர்ப்பு மகனான ஜாங் போ ட்சாய்-ஐ திருமணம் செய்து கொண்டு வாழ அனுமதிக்குமாறு பேரரசிடம் மன்றாடினார் ச்சிங் ஷி. அதற்கும் அனுமதி தரப்பட்டது.

அரசுப் படை பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே சீன கடல் பகுதியில் முகாமிட்டிருந்த வூ ஷையர் என்பவர் தலைமையில் இயங்கி வந்த நீலக்கொடி கடல் கொள்ளை குழு வீழ்த்தப்பட்டது.

ச்சிங் ஷி -ஜாங் போ ட்சாய் தம்பதி 1813இல் ஜாங் யூலின் என்ற மகனையும் ஒரு மகளையும் பெற்றெடுத்தனர்.

1822இல் ஜாங் போ ட்சாய் தனது 36ஆவது வயதில் இறந்தார். அதன் பின்னர் தமது பூர்விக மாகாணமான குவாங்டோங்கின் மக்கெள பகுதிக்குத் திரும்பிய ச்சிங் ஷி, அங்கு ஒரு சூதாட்ட விடுதியையும் தமது ஆரம்ப காலத்தில் செய்து வந்த பாலியல் தொழில் விடுதியையும் நிறுவினார்.

பலரது பேரரசுகளின் ராணுவ தளபதிகளின் தூக்கத்தை கெடுத்த இவர், தனது 69ஆம் வயதில் தூக்கத்திலேயே உயிரிழந்ததாக சீன கடல் ஆளுகை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு பாலியல் தொழிலாளியின் விடா முயற்சி, போர்க்குணம், சூழ்ச்சி நிறைந்த கதையாக ச்சிங் ஷியின் வாழ்க்கை பார்க்கப்படுகிறது.

அதே சமயம், பல பேரரசுகளுக்கு கலக்கத்தை கொடுத்த இவரது துணிச்சல், ஒரு பெண் நினைத்தால் வரலாற்றையே மாற்றி எழுத முடியும் என்ற செய்தியை அந்த காலத்திலேயே உலகுக்கு உணர்த்தியதாக சில வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :