ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் உரிமைப் போராட்டம்: ஒடுக்கிய தாலிபன்கள்

போராட்டத்தில் ஆப்கன் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

போராட்டத்தில் ஆப்கன் பெண்கள்

ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றிய பிறகு, தற்போது அந்நாட்டிலுள்ள பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடத் தொடங்கினர். காபூலில் நடந்த அப்படி ஒரு போராட்டத்தை தாலிபன்கள் நசுக்கியுள்ளனர்.

உரிமைக்காகப் போராடிய பெண்கள், அதிபர் மாளிகையை நோக்கிச் செல்ல முயன்ற போது கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் மிளகு ஸ்ப்ரே போன்றவைகளால் தாங்கள் இலக்கு வைக்கப்பட்டதாக பெண்கள் குழுவினர் கூறியுள்ளனர்.

ஆப்கன் பெண்களால் காபூல் மற்று ஹெராத் போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட சமீபத்திய போராட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் நாட்களில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அறிவிக்க உள்ளனர். புதிதாக ஆப்கானிஸ்தானில் அமையவிருக்கும் அரசில் தாங்களும் பங்கு பெற வேண்டும், தாங்கள் (பெண்கள்) வேலை செய்வதற்கான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என பெண்கள் இந்த போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அரசில் பெண்கள் இடம்பெறுவார்கள், ஆனால் பெண்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படாது என தாலிபன் தரப்பு கூறியது.

1996 மற்றும் 2001 காலகட்டத்தில் தாலிபன் ஆளுகையில் நடத்தப்பட்டது போல தாங்கள் நடத்தப்படுவோமோ என பல பெண்களும் அஞ்சத் தொடங்கியுள்ளனர். பெண்கள் முகங்களை மூட கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். சிறு தவறுகள் மற்றும் விதி மீறல்களுக்கு எல்லாம் பெரிய தண்டனைகள் வழங்கப்படுகின்றன.

"25 ஆண்டுகளுக்கு முன் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த போது நான் பள்ளிக்குச் செல்வதை அவர்கள் தடுத்தனர்" என டொலோ செய்தி நிறுவனத்திடம் கூறினார் பத்திரிகையாளர் அசிடா நசிமி.

"தாலிபன்களின் ஐந்து ஆண்டு ஆட்சிக்குப் பிறகு, நான் 25 ஆண்டுகள் படித்து கடினமாக உழைத்தேன். எங்களின் எதிர்காலத்துக்காக நாங்கள் இதை நடக்க விடமாட்டோம்"

தாலிபன்கள் துப்பாக்கி மேகசின் கொண்டு பெண்களை தாக்கினர் என போராளிகளில் ஒருவரான சொரயா ராய்டர்ஸ் முகமையிடம் கூறினார்.

பெண்கள் போராட்டம் ஒரு பக்கம் இப்படி ஒடுக்கப்பட்டிருக்கிறது என்றால், மறுபக்கம் பஞ்ஷீர் மாகாணத்தில் தாலிபன்கள் மற்றும் அம்மாகாணப் படைக்கு மத்தியிலான போர் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.

பஞ்ஷீர் மாகாணத்தை தாங்கள் கைப்பற்றிவிட்டதாக தாலிபன்களும், இன்னமும் போராட்டம் தொடர்ந்து கொண்டிருப்பதாக அம்மாகாணத்தைச் சேர்ந்த போராளிகளும் கூறி வருகின்றனர்.

1.5 - 2.0 லட்சம் பேர் வாழும் பஞ்ஷீர் மாகாணம் கடந்த பல ஆண்டுகளாக தாலிபனுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த மாகாணப் படையில் முன்னாள் ஆப்கன் அரசுப் படை வீரர்கள், உள்ளூர் ஆயுதமேந்திய வீரர்கள் இருக்கின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தாலிபன்களை எதிர்த்து போராடும் தேசிய எதிர்ப்பு முன்னணியினர்

உதவிப் பொருட்களைச் சுமந்து வரும் விமானங்கள் தரையிறங்க, விமான நிலையங்களை மீண்டும் திறக்க உதவும் விதத்தில் கத்தார் நாட்டிலிருந்து தொழில்நுட்பக் குழுவினர் உதவியதாக, கத்தார் நாட்டின் தூதர் கூறியதாக அல் ஜசீரா தொலைக்காட்சி கூறியது.

அமெரிக்காவின் உள்துறைச் செயலர் ஆன்டனி ப்ளிங்கன் ஞாயிற்றுக்கிழமை, கத்தாருக்குச் செல்கிறார். ஆனால் அவர் தாலிபனைச் சேர்ந்த எவரையும் சந்திக்கமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யைச் சேர்ந்த ஜெனரல் ஃபைஸ் ஹமீத் காபூல் சென்று சேர்ந்திருக்கிறார். அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட் போது எதற்கும் விடையளிக்கவில்லை.

ஐஎஸ்ஐ அமைப்பு தாலிபன்களுக்கு உதவி வருவதாக மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அதைத் தொடர்ந்து மறுத்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :