ஐவர்மெக்டின்: கொரோனாவுக்கு இந்த மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள் என அமெரிக்க மருத்துவர் வலியுறுத்தல்

பட மூலாதாரம், AFP
ஐவர்மெக்டின் மருந்து
குதிரைகளின் உடலில் புழுக்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் என்கிற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்ட பின், நோயாளிகளை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டி இருக்கிறது என அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேசன் மெக்எலியா கூறியுள்ளார்.
ஐவர்மெக்டின் மருந்தை குறைந்த அளவில் மனிதர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை.
"மருத்துவர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைத்து இருந்தால் மட்டுமே இம்மருந்து கிடைக்கும், காரணம் இது ஆபத்தான மருந்து" என்கிறார் மருத்துவர் ஜேசன் மெக்எலியா.
பட மூலாதாரம், Getty Images
ஏற்கனவே கொரோனா நோயாளிகளால் அமெரிக்க மருத்துவமனைகள் திணறி வருகின்றன. ஐவர்மெக்டினை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்ட பலரும் சிகிச்சைக்கு வருவதால், மருத்துவமனைகள் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது என்று கூறினார மருத்துவர் ஜேசன்.
ஐவர்மெக்டின் என்கிற மருந்து, குதிரைகளின் உடலில் புழுக்களால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பயன்படுத்தப்படும். இந்த மருந்தை மனிதர்களில் ஒரு சில மருத்துவ நிலைகளில் சிறிய அளவில் பயன்படுத்தலாம்.
இந்த மருந்து இதுவரை கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் கொரோனா சிகிச்சைக்கும், கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கவும் உதவும் என இம்மருந்து விளம்பரப்படுத்தப்பட்ட போது பெரிதும் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
இந்த ஐவர்மெக்டின் மருந்தை பலரும் பயன்படுத்துவதை கவனத்தில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவின் எஃப்.டி.ஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கடந்த மாதம், ஐவர்மெக்டினைப் பயன்படுத்த வேண்டாம் என ஒரு நீண்ட அறிக்கையையே வெளியிட்டது நினைவுகூரத்தக்கது.
"நீங்கள் குதிரையோ, மாடோ அல்ல" என எஃப்.டி.ஏ அமைப்பு கூறி இருந்தது. அம்மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்தானது மற்றும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என எச்சரித்து இருந்தது" குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதை மறுக்கும் ஜோ ரோகன் என்பவர், தனக்கு கொரோனா தொற்று ஏற்ப்பட்டதிலிருந்து தான் ஐவர்மெக்டின் எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ்
அம்மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்பவர்கள், வாந்தி, தசை வலி, கண்பார்வையில் பிரச்னை போன்ற சிக்கல்களோடு மருத்துவமனை வருவதாக மருத்துவர் ஜேசன் கூறினார்.
"ஐவர்மெக்டினை அளவுக்கு அதிகமாக தவறாக எடுத்துக் கொள்வதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பை விட, மோசமாக அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்" என கே.எஃப்.ஓ.ஆர் என்கிற உள்ளூர் ஊடகத்திடம் கூறியுள்ளார் ஜேசன்.
"இந்த மருந்தை எடுத்துக் கொண்டு உடலில் வேறு ஏதாவது மோசமான உடல் உபாதை ஏற்பட்டால் நான் என்ன செய்வேன்? என்கிற கேள்வியை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு மருந்தை எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்றால், அதை மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக் கொள்ளுங்கள்" என கூறியுள்ளார்.
அமெரிக்காவில் அதிகமாக கொரோனா பரவி வரும் மாகாணங்களில் ஒக்லஹோமாவும் ஒன்று. கடந்த வாரம் மட்டும் 18,438 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் உரிமைப் போராட்டம்: ஒடுக்கிய தாலிபன்கள்
- ஆசிரியர் தினம்: இன்று தேசிய நல்லாசிரியர் விருது பெறும் சாதனைத் தமிழர்கள் யார்?
- 200 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொழில், தகாத உறவு - சீன கடல் கொள்ளை ராணியின் வரலாறு
- கொரோனா காலத்தில் மருத்துவக் காப்பீட்டு விளம்பரத்துக்கு வெறும் 0.01% செலவிட்ட இந்திய அரசு
- ஆப்கானிஸ்தானில் தாலிபனின் எழுச்சி பாகிஸ்தானை எவ்வாறு பாதிக்கும்?
- இந்தியாவில் இஸ்லாமியராக இருப்பது ஒரு குற்றமா? தொடர்ந்து தாக்கும் இந்து கும்பல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்