கினியில் அதிகாரத்தை கைப்பற்றிய ராணுவம் - அமெரிக்கா, ஐ.நா கண்டனம்

கினி நாட்டுக் கொடியுடன் ராணுவத்தினர்

பட மூலாதாரம், GUINEA TV

படக்குறிப்பு,

கினி நாட்டுக் கொடியுடன் ராணுவத்தினர்

மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் கினி (Guinea - உள்ளூர் உச்சரிப்பில் 'கினி' என அழைக்கப்படுகிறது) நாட்டின் அதிபர் ஆல்ஃபா காண்டேவுக்கு என்ன ஆனது என்று தெளிவாகத் தெரியவில்லை. ஒரு உறுதிப்படுத்தப்படாத காணொளியில், அதிபரை ராணுவத்தினர் சூழ்ந்திருப்பது போலக் காட்டுகிறது.

ராணுவத்தினர் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, அரசைக் கலைத்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

கினி தலைநகர் கொனாக்ரியில், அதிபர் மாளிகைக்கு அருகில் சில மணி நேரம் கனரக துப்பாக்கிகள் வெடிக்கும் சத்ததம் கேட்டதைத் தொடர்ந்து இப்படி கூறப்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம், ராணுவத்தின் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை கண்டித்துள்ளன. மேலும் கினி அதிபரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, கினி அமைச்சரவையில் இருந்தவர்களின் சிறப்புக் கூட்டத்தை ராணுவ தலைமை இன்றைய நாளின் பிற்பகுதியில் கூட்டியிருக்கிறது.

கினி இயற்கை வளம் நிறைந்த நாடு தான், இருப்பினும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நிலவும் ஒரு அமைதியற்ற சூழல் மற்றும் மோசமான நிர்வாகம் காரணமாக உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது.

புதிய அரசியலமைப்புச் சட்டம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அரசியலமைப்புச் சட்டம்

தொலைக்காட்சியில் வெளியான நிகழ்ச்சியில், பெயர் குறிப்பிடப்படாத ஒன்பது ராணுவ வீரர்கள், கினியின் சிவப்பு, தங்கம், பச்சை நிற கொடியோடு தோன்றினர். நாட்டில் நிலவிய மோசமான ஊழல், தவறான நிர்வாகம், ஏழ்மை காரணமாக தாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி இருப்பதாகக் கூறினர்.

அவர்கள் தங்களை நல்லிணக்கம் மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய குழு என அழைத்துக் கொள்கிறார்கள். மேலும் கினியின் அரசியலமைப்புச் சட்டத்தை தாங்கள் ரத்து செய்திருப்பதாகவும், மேம்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்க ஆலோசனைகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை, சிறப்புப் படையைச் சேர்ந்த லெப்டிணன்ட் கர்னல் மமடி டோம்பொயா தலைமை தாங்கி நடத்தியதாக பல்வேறு செய்திகள் கூறுகின்றன.

பிபிசியால் உறுதிப்படுத்த முடியாத ஒரு காணொளியில், ராணுவ வீரர்கள், தான் துன்புறுத்தப்படவில்ல என உறுதிப்படுத்துமாறு 83 வயதான அதிபர் ஆல்ஃபா காண்டேவை கூறுகின்றனர். ஆனால் காண்டே பதிலளிக்க மறுக்கிறார்.

ஒரு நீண்ட சாய்வு இருக்கையில், ஜீன்ஸ் பேன்ட் உடன் ஒரு சாதாரண டீ ஷர்ட் மேலாடையோடு கால்களில் ஏதும் அணியாமல் அமர்ந்திருக்கிறார். அவர் உடலில் காயங்கள் எதுவும் தெரியவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்கிற விவரங்களும் தெரியவில்லை.

அனைத்து நில வழி மற்றும் வான்வழி எல்லைகள் ஒரு வார காலத்துக்கு அடைக்கப்பட்டு இருப்பதாக, இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின் உள்ளவர்கள் கூறியுள்ளனர். ஆனால் கினி நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமோ, அதிபருக்கு விசுவாசமான படையினர், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை ஏதிர்கொண்டு பின்வாங்க வைத்துவிட்டனர் என கூறியுள்ளது.

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு,

கினி ராணுவத்தினர்

கினி நாட்டின் நிலபரப்பை, கலோம் தீபகற்பத்தோடு இணைக்கும் ஒரே ஒரு பாலமும் தற்போது மூடப்பட்டுள்ளது. அதிபர் மாளிகையைச் சுற்றி ராணுவ வீரர்கள் (சிலர் கனரக ஆயுதங்களோடு) நிறுத்தப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் ராய்டர்ஸ் முகமையிடம் கூறியுள்ளார்.

மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த செய்தியைத் தொடர்ந்து எதிர்கட்சியினரின் ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் சாலையில் இறங்கி கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு அதிபர் ஆல்ஃபா காண்டேவுக்கு எதிராக நடந்த கடுமையான போராட்டங்களைத் தாண்டி தான், சர்ச்சைக்குரிய வகையில் மூன்றாவது முறையாக அதிபர் ஆனார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :