பசுக்களுக்கு சிறுநீர் கழிக்க பயிற்சி - பசுங்குடில் வாயு உமிழ்வை குறைக்க புது முயற்சி

பசுக்கள்

பட மூலாதாரம், FBN

படக்குறிப்பு,

பசுக்கள் சிறுநீர் கழிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனி அறை

பசுக்களுக்கு சிறுநீர் கழிக்க சரியான பயிற்சி கொடுத்தால் அதன் மூலம் பசுங்குடில் வாயு வெளியேற்றம் குறையும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள ஆய்வகத்தில் விஞ்ஞானிகள் புதிய முயற்சியில் ஈடுபட்டனர். அதாவது, குறிப்பிட்ட சில பசுக்களை அழைத்து வந்து, அவற்றை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறுநீர் கழிக்கும் பகுதிக்கு மேல் நிற்க வைத்து சிறுநீர் கழிக்க பயிற்சி கொடுத்தனர்.

சேகரிக்கப்பட்ட அந்த பசுக்களின் சிறுநீர் அமோனியா உள்ளது. அது மண்ணில் கலக்கும்போது பசுங்குடில் நைட்ரஸ் ஆக்சைட் ஆவதை விஞ்ஞானிகளின் ஆய்வு கண்டறிந்துள்ளது.

உலக அளவில் மனித செயல்பாடுகளால் வெளியாகும் பசுங்குடில் வாயு உமிழ்வில் 10 சதவீதம், கால்நடைகளிடம் இருந்தே ஏற்படுகிறது.

இதை அறிந்த ஆய்வாளர்கள் ,16 பசுக்களை தேர்வு செய்து அவற்றை ஜெர்மனியின் டம்மர்ஸ்டார்ஃபில் உள்ள விலங்குகள் உயிரியல் நிறுவனத்துக்கு சொந்தமான பண்ணைக்கு அழைத்து வந்தனர். அங்கு இந்த பசுக்கள் சிறுநீர் கழிப்பதற்காக மூலூ என்றழைக்கப்படும் சிறப்பாக வடிவைக்கப்பட்ட அறைகளில் சிறுநீர் போக பயிற்சி கொடுத்தனர்.

மூலு என அழைக்கப்படும் இந்த அமைப்பு, செயற்கை புல்தரை விரிப்பான்களுடன் சிறுநீரை வடிகட்டி உறிஞ்சு சேகரிக்கும் வசதியைக் கொண்டது.

இந்த மூலூ இடத்துக்கு பசு சரியாக வந்தால் அதற்கு பிடித்தமான பொருள் தருவதாகக் கூறியே ஆராய்ச்சியாளர்கள் 16 பசுக்களுக்கு பயிற்சி கொடுத்தனர். மொத்தம் 10 அமர்வுகளில் இந்த பசுக்களுக்கு பயிற்சி தரப்பட்டது.

'மூலூ' செயற்கை புல் தரைக்கு வெளியே சிறுநீர் கழித்தால் பிறகு அந்த பசுக்கள் மீது மூன்று நொடிகளுக்கு தண்ணீர் ஸ்ப்ரே அடிக்கப்படுகிறது.

சரியான இடத்தில் சிறுநீர் கழித்தால் அதற்கு பிடித்தமான பொருட்கள் சாப்பிட தரப்படுகிறது. மூன்று கட்டமாக இந்த பயிற்சி வழங்கப்பட்டது. ஒவ்வொரு கட்டத்திலும் பசு, சிறுநீர் கழிக்க நடந்து செல்லும் பாதையின் நீளம் அதிகரிக்கப்பட்டது.

மூன்று அமர்வுகளின் முடிவில் 16 பசுக்களில் 11 பசுக்கள் கச்சிதமாக தங்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சியை நிறைவு செய்தன. அதாவது 15 முதல் 20 முறை சிறுநீர் கழிக்க நேர்ந்த தருணத்திலேயே சுயமாக இந்த வடிவமைக்கப்பட்ட பகுதிக்கு வந்து சிறுநீர் கழிப்பதை பசுக்கள் வழக்கமாக்கிக் கொண்டதாக நியூஸிலாந்து ரேடியோவுக்கு அளித்த நேர்காணலில் கூறுகிறார், இந்த ஆய்வில் இடம்பெற்ற லிண்ட்சே மாத்யூஸ்.

"தேர்வு செய்யப்பட்ட பசுக்களில் கிட்டத்தட்ட முக்கால்வாசி பசுக்கள், தங்களுடைய சிறுநீரை கழிக்க வடிவமைக்கப்பட்ட அமைப்புக்கு வந்தன," என்று அவர் குறிப்பிட்டார்.

"இளங்கன்றுகள் சிறார்களுடன் ஒப்பிடும் செயல்திறனை காண்பித்தன. அதுவும் இளம் குழந்தைகளை விட இந்த பசுக்கள் சரியான இடத்தில் சிறுநீர் போக கற்றுக்கொண்டன," என்கிறது அந்த ஆய்வு. இத்தகைய வழிமுறைகளின்படி பசுக்களின் சிறுநீர் சேகரிக்கப்பட்டால், 56 சதவீத அளவுக்கு அமோனியா உமிழ்வை குறைக்க முடியலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

விலங்குகளின் வாழ்விடத்தில் அவை சிறுநீர் கழிக்கும் பழக்க வழக்கத்தை உருவாக்கினால், அவை சுகாதாரமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது மட்டுமின்றி பூமிக்கும் அது பயன்படும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அது சரி.... விலங்குகள் போல அலைந்து, திரிந்து நினைத்த இடத்தில் அவை சிறுநீர் கழித்து வரும் பழக்கத்தையும் மனிதர்கள் இனி கட்டுப்படுத்தினால், விரைவில் விலங்குகள் சிறுநீர் கழிப்பறையை பல இடங்களிலும் இனி வரும் காலத்தில் எதிர்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

பசுங்குடில் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

புவியானது சூரியனிடம் இருந்து முக்கியமாகக் காண்புறு ஒளி மூலமாக வெப்ப ஆற்றலைப் பெறுகிறது.

வளிமண்டலமானது காண்புறு ஒளியைப் பொறுத்த வரை தெள்ளத் தெளிவாக இருப்பதால், சூரியனிடமிருந்து வரும் வெப்ப ஆற்றலை 50 விழுக்காடு புவியின் மேற்பரப்பு உறிஞ்சுகிறது. பூஜ்ஜிய வெப்பநிலைக்கு மேல் வெப்பம் கொண்ட பொருட்களைப் போலவே, புவியின் மேல்பாகமும் அகச்சிவப்புக் கதிர் எல்லைப் பகுதியில் வெப்ப ஆற்றலைக் கதிரியக்கம் மூலம் வெளியேற்றுகிறது. அகச்சிவப்புக் கதிர் வீச்சிற்கு தெள்ளத் தெளிவாக இல்லாததால், பசுங்குடில் வாயுக்கள் அதனை உறிஞ்சி விடுகிறது. அனைத்து திசைகளில் இருந்தும் அகச்சிவப்பு கதிர் வீச்சு உறிஞ்சப் படுவதால், வளிமண்டலத்தில் உள்ள அனைத்து வாயுப் பொருட்களும் சூடேறுகிறது. வளிமண்டலமும் (அதன் வெப்பம் காரணமாக, புவியைப் போலவே) அகச்சிவப்பு கதிர் வீச்சினை எல்லா திசைகளிலும் பரப்புகிறது. இதனால், புவியின் மேற்பரப்பு மற்றும் கீழ் வளிமண்டலம் ஆகியவை பைங்குடில் வாயுக்களின் வெப்பம் காரணமாகச் சூடேறி விடுகிறது, ஆதலால் உயிரினங்கள் புவியில் வாழ ஏற்றச் சூழ்நிலை ஏற்படுகின்றது.

புவியில் அதிகமாகக் காணப்படும் பசுங்குடில் வாயுக்கள் நீராவி, கரியமில வாயு, மீதேன் வாயு அல்லது சாண வாயு, நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன், கார்பன் ப்ளூரோ கார்பன்கள்.

இந்த வாயுக்கள் பசுங்குடில் விளைவுக்குக் காரணியாக இருப்பதற்கு வரிசைப்படுத்தும்போது, முதன்மை பெறுபவை:

நீராவி, அதன் பங்கேற்பு 36-70%, கரியமில வாயு அல்லது கார்பன் டை ஆக்சைடு, அதன் பங்கேற்பு 9-26%, மீதேன் வாயு அல்லது சாண வாயு, அதன் பங்கேற்பு 4-9%, ஓசோன், அதன் பங்கேற்பு 3-7%.

மேகங்களானவை, வாயுப் பொருளாக இல்லாமலேயே, அகச் சிவப்பு கதிர் இயக்கத்தினை உறிஞ்சவும், உமிழவும் செய்கின்றன, மேலும் அதனால் பசுங்குடில் விளைவினை பாதிக்கவும் செய்கின்றன.

பட மூலாதாரம், CAMS

படக்குறிப்பு,

கடந்த ஆண்டு ஆர்டிக் பிரதேசத்துக்கு மேல் இருந்த ஓசோன் படல துளை அடையும் முன் இருந்த நிலை.

மனிதன் உற்பத்தி செய்த பைங்குடில் வாயுக்களில், அதிகமாகக் கதிர் இயக்கப் பின் விளைவுகளை வித்திடுவது கரியமில வாயு ஆகும். மனித இனத்தினரின் அதிகரித்து வரும் தொழில் செயல் பாடுகளினால் (புதைப்படிம எரிபொருள் எரிப்பு) மற்றும் இதர சிமென்ட் உற்பத்தி, காடுகளை அழித்தல்[20] போன்ற செயல்பாடுகளால் கரியமில வாயுவின் CO2 செறிவு அளவு வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளது.

நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருள்களைப் பயன்படுத்துவது. அதிக நிலத்திற்காக மரங்களை அதிகமாக வெட்டிப்போடுவது. மக்கிப் போகாத கழிவுப் பொருள்களின் (நெகிழி) பெருக்கம் விவசாயத்திற்காக உரங்கள், பூச்சிக்கொல்லிகளைக் கண்மூடித்தனமாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றால் பைங்குடில் வாயுக்களின் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கின்றன.

மெலியும் ஓசோன் படலம்

ஓசோன் படலம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 30 கிலோ மீட்டர் உயரத்தில் காணப்படுகின்றது. ஓசோன் என்பது 3 ஆச்சிஜன் அணுக்கள் ஒன்று சேர்ந்ததாகும். சூரியனிலிருந்து வரும் அபாயகரமான புற ஊதாக்கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலம் நம்மை ஓசோன் படலம் பாதுகாக்கின்றது. இப்படலம் பல மாசுக்களினால் அழிக்கப்படுகின்றது. குறிப்பாகக் குளோரோ ஃபுளோரோ கார்பன் என்ற வேதிப்பொருளைக் கூறலாம். ஒரு குளோரோ ஃபுளோரோ கார்பன் மூலக்கூறு 1 லட்சம் ஓசோன் மூலக்கூறுகளை அழிக்க வல்லது. குளோரோ ஃபுளோரோ கார்பன் இயற்கையாகக் கிடைப்பதில்லை. மாறாக, செயற்கையாகத்தான் தயாரிக்கப்படுகிறது. குளிர்பதனப் பெட்டிகள், குளிர்விக்கும் பெட்டிகள், தீயணைப்புப் பெட்டிகள் போன்றவற்றிலும், ஏரோசால் டின்களில் முன்செலுத்தியாகவும், பிளாஸ்டிக் பொருளாகவும், மின்னணுத் தொழிற் சாலைகளில் கரைப்பானாகவும் குளோரோ ஃபுளோரோ கார்பன் பயன்படுத்தப்படுகிறது.

ஓசோன் படலம் மெலிவடைவதால், புற ஊதாக் கதிர்களின் வீச்சுகள் எளிதாகவும், வேகமாகவும் நம்முடைய நோய் எதிர்ப்புத் திறனையும் குறைக்கிறது. மனித உடலில் நோய்கள் ஏற்படக் காரணமாகிறது. மேலும் இது மீன் வளத்தையும், விவசாய விளைச்சலையும் குறைக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :