இம்ரான் கான்: தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கல்வி மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது - பாகிஸ்தான் பிரதமர்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்பதை தடுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.

பிபிசி உடனான நேர்காணலில், ஆப்கானிஸ்தானில் அமைந்திருக்கும் தாலிபன்கள் தலைமையிலான அரசை அங்கீகரிக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் என சில நிபந்தனைகளை இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

தாலிபன்களின் தலைமை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும், மனித உரிமைகளை மதிப்பதாகவும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தீவிரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் அடைக்கலம் கொடுக்கக் கூடாது என்பதும் ஒரு நிபந்தனை.

கடந்த வாரம் தாலிபன்கள் பெண் குழந்தைகளை மேனிலைப் பள்ளிகளிலிருந்து விலக்கினார்கள். ஆண் குழந்தைகள் மற்றும் ஆண் ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டார்கள்.

பாகிஸ்தான் பிரதமரோ, விரைவில் பெண்கள் பள்ளிக்கு திரும்புவார்கள் என தான் நம்புவதாகக் கூறியுள்ளார்.

"தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்கள் வெளியிட்டிருக்கும் செய்தியறிக்கைகள் மிகவும் நம்பிக்கையளிப்பதாக உள்ளன" என்று அவர் பிபிசியின் ஜான் சிம்ப்சனிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி

"தாலிபன்கள், பெண்கள் பள்ளிக்குச் செல்வதை அனுமதிப்பார்களென கருதுகிறேன்" என்றார். "பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்கிற யோசனை இஸ்லாத் அல்ல. அதற்கும் மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, மீண்டும் 1990களில் இருந்தது போன்ற ஆட்சி வந்துவிடும் என அந்நாட்டு மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. அந்த காலகட்டத்தில் தாலிபன் கடும்போக்குவாதிகள் மிகக் கடுமையாக பெண்களுக்கான உரிமைகளை மறுத்தனர்.

தற்போது தாலிபன்கள் அதிகாரத்துக்கு வந்த பிறகு கூட, இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் மதிக்கப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் ஆப்கனில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்லக் கூடாது என்கிற தாலிபன்களின் தீர்மானம், சர்வதேச அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஒருவர், பெண்கள் கூடிய விரைவில் பள்ளிக்குத் திரும்பலாம் என கூறினார்.

பெண்கள் எப்போது பள்ளிக்குத் திரும்ப முடியும், அப்படியே பள்ளிக்குச் சென்றாலும் அவர்களுக்கு என்ன மாதிரியான கல்வி போதிக்கப்படும் என்பது குறித்த தெளிவான விவரங்கள் இல்லை.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமெரிக்கா தலைமையிலான படைகள் ஆப்கனில் இருந்து வெளியேறியபின் தாலிபன் ஆட்சிக்கு வந்தது

சர்வதேச சமூகம் தாலிபன்களுக்கு கூடுதல் சமயம் கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் இம்ரான் கான்.

ஜிஹாத் கடும்போக்குவாதத்துக்கு எதிரான வலுவான கூட்டாளியாக பாகிஸ்தான் பார்க்கப்படவில்லை. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளும் பாகிஸ்தான் தாலிபன்களுக்கு உதவி வருவதாக குற்றம்சாட்டி வருகிறது, அதை பாகிஸ்தானும் தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானில் திட்டமிடப்பட்ட 9/11 தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் தன்னை அமெரிக்காவின் கூட்டாளியாக நிலை நிறுத்திக் கொண்டது.

ஆனால் அதே நேரத்தில், பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகளின் ஒரு பகுதி, தாலிபன் போன்ற இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புகளோடு தொடர்பில் இருந்தது.

தாலிபன் தலைமையிலான அரசாங்கத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதா வேண்டாமா என்பதை பாகிஸ்தான் மற்ற நாடுகளோடு இணைந்து தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார் இம்ரான் கான்.

"அனைத்து அண்டை நாடுகளும் ஒன்றாக இணைந்து, தாலிபன்கள் எப்படி செயல்படுகிறார்களென்று பார்ப்போம்" என கூறியுள்ளார். "தாலிபன்களை அங்கீகரிப்பதும் நிராகரிப்பதும் ஒரு கூட்டுத் தீர்மானமாக இருக்கும்" என்று கூறினார் இம்ரான் கான்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :