இலங்கையில் வாகன இறக்குமதி தடை 2022 இறுதி வரை தொடரும்: பொருளாதாரத்தை மீட்க அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
- ரஞ்சன் அருண் பிரசாத்
- பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், BASIL RAJAPAKSA'S FACEBOOK
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளதால், நாட்டிலுள்ள வாகன விற்பனையாளர்கள் மாத்திரமன்றி, வாகன பயன்பாட்டாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் பரவலினால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி வாகன இறக்குமதிக்கு தடை விதித்திருந்தது.
உள்நாட்டிலுள்ள டாலர், ஆடம்பர தேவைகளுக்காக வெளியில் செல்வதை தவிர்க்கும் வகையிலேயே இந்த தீர்மானத்தை எட்டியதாக நிதி அமைச்சகம் அறிவித்திருந்தது.
இவ்வாறான நிலையில், தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட வாகன இறக்குமதியானது, அடுத்த வருடம் இறுதி வரை தொடரும் என நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்தார்.
நாடு என்ற விதத்தில் அந்நிய செலாவணி இல்லாமையானது, பாரிய பிரச்னையை தோற்று வித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
வெளிநாடுகளில் பணிப்புரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களால் கிடைக்கும் வருமானம் பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது.
வருடாந்தம் 2,30,000 வரையான புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிநாடுகளை நோக்கி பயணிக்கும் நிலைமை கடந்த காலங்களில் காணப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 53,000 பேர் மாத்திரமே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்காக சென்றுள்ளனர்.
எனினும், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இந்த ஆண்டு ஒரு லட்சத்தை தாண்டிய புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வருடமொன்றுக்கு 3 லட்சம் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதே இலங்கை அரசாங்கத்தின் இலக்காக காணப்படுகின்றது.
வெவ்வேறு வேலைகளுக்காக புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாடுகளுக்கு செல்லும் போது, நாட்டிற்கு அந்நிய செலாவணியை அதிகளவில் கொண்டு வர முடியும் என எதிர்பார்க்க முடிவதாக பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா இறக்குமதியை நிறுத்துவதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், வாகனங்களை அடுத்த வருடம் இறுதி வரை எந்தவிதத்திலும் கொண்டு வர முடியாது என பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இலங்கையின் தற்போதைய சொத்துக்கள் தொடர்பிலான தகவல்
கடந்த நவம்பர் மாதம் வரை 1587 மில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாட்டு நாணயத்திற்கான சொத்துக்களே காணப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
ராஜாங்க அமைச்சர் ஷெஹென் சேமசிங்க, நாடாளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப் பெற செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு கையிருப்புக்களை அதிகரித்து, சொத்துக்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.
நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவின் இந்திய பயணமானது, நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நோக்கத்தை கொண்டது என தெரிய வருகின்றது.
நாட்டிற்கு தேவையான எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திடவுள்ளது.
வாகன இறக்குமதியாளர்களின் பதில்
பட மூலாதாரம், LAKRUWAN WANNIARACHCHI
நாட்டில் காணப்படுகின்ற நிதி நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளதை தம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், வாகன இறக்குமதி தடைப்பட்டுள்ளமையினால், பாதிக்கப்பட்டுள்ள அந்த துறை சார்ந்தோருக்கு நிவாரணம் உள்ளிட்ட மாற்று திட்டங்களை அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, வாகனங்களின் விலை பலமடங்காக அதிகரித்துள்ளது.
இலங்கையில் வாகன இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, 90 வீதமான வாகன விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
பொருளாதார நிபுணர்களின் பார்வை
இலங்கையின் ஏற்றுமதி பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதுடன், அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி அதிகரித்துள்ளதாக பொருளியல்துறை பீடத்தின் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான சங்கரன் விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.
இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து, பிபிசி தமிழிடம் பேசிய அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரதான ஏற்றுமதித்துறைகளான ஆடைத் தொழில்துறை, தேயிலை தொழில்துறை என்பன, கோவிட் பரவல் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
அத்துடன், வெளிநாடுகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்களாக செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைத் தரும் பயணிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சியும், நாட்டின் பொருளாதாரத்தை பின்னடைவுக்கு கொண்டு செல்ல காரணமாக அமைந்துள்ளது.
இவ்வாறான காரணங்களினால், நாட்டிற்கு கிடைக்க வேண்டிய டாலர் கிடைக்காது போனதாக அவர் கூறுகின்றார்.
இலங்கைக்கு கிடைக்கின்ற டாலரில் பெருமளவு கடனை மீள செலுத்துவதற்கே செலவிடப்பட்டு வருகின்றது.
இவ்வாறான காரணங்களே, இலங்கை அந்நிய செலாவணி பிரச்னையை எதிர்நோக்க பிரதான காரணமாக அமைந்துள்ளது என பேராசிரியர் சங்கரன் விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.
கோவிட் பரவல் ஆரம்பமாகி இரண்டு வருடங்கள் கடந்துள்ள போதிலும், இலங்கை அரசாங்கத்தினால் அதற்கான பொருளாதார திட்டமொன்றை ஏன் வகுத்துக்கொள்ள முடியவில்லை என பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது.
இலங்கை பொருளாதார திட்டமிடல் அல்லது பொருளாதார முகாமைத்துவம் ஆகியவற்றில் தோல்வி அடைந்துள்ளது.
இலங்கையின் பொருளாதார திட்டமிடல் செயற்பாடுகளில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டை ஆட்சி செய்யும் ஜனாதிபதிக்கு அரசியல் மற்றும் பொருளாதாரம் ரீதியிலான அனுபவம் கிடையாது என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறான சூழ்நிலையொன்றின் போது, தற்போதைய ஜனாதிபதியின் சகோதரன் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவி வகித்திருக்கும் பட்சத்தில், அவருக்கு பொருளாதார நிலைமையை சீர் செய்வதற்கான அனுபவம் இருந்திருக்கும் என அவர் கூறுகின்றார்.
பட மூலாதாரம், Getty Images
மஹிந்த ராஜபக்ஸ, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு அனுபவங்களை பெற்றவர் என அவர் தெரிவிக்கின்றார்.
எனினும், தற்போதைய ஜனாதிபதிக்கு அவ்வாறான அனுபவங்கள் கிடையாது என பேராசிரியர் சங்கரன் விஜேசந்திரன் குறிப்பிடுகின்றார்.
இந்த நிலையில், தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திலும், ஏற்றுமதி உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் முறையாக வகுக்கப்படவில்லை என அவர் கூறுகின்றார்.
இவ்வாறான நிலைமை தொடருமேயானால், எதிர்வரும் பல வருடங்களுக்கு இவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் காணப்படும் என பொருளியல்துறை பீடத்தின் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான சங்கரன் விஜேசந்திரன் தெரிவிக்கின்றார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்பு நடவடிக்கை
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
புலம்பெயர் தொழிலாளர்களை அதிகளவில் வெளிநாடுகளுக்கு அனுப்புதல், சுற்றுலாத்துறைக்கு சந்தர்ப்பத்தை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை இயலுமானளவு குறைத்துக்கொள்ளுமாறும், ஒரு டாலரை வெளியில் அனுப்பாதிருப்பதானது, ஒரு டாலரை சேமித்ததாக அமையும் என அவர் குறிப்பிடுகின்றார்.
கொரோனா நிலைமை காரணமாக இலங்கை பாரிய பொருளாதார வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ளதை நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்