ஒமிக்ரான்: ஜனவரியில் அடுத்த கொரோனா அலையைக் கொண்டுவருமா?

  • ஜேம்ஸ் கலேகர்
  • சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர்
சாலையில் பொதுமக்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சாலையில் பொதுமக்கள்

பிரிட்டனில் மேற்கொண்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்படாமல் இருந்தால் ஜனவரியில் அடுத்த பெரிய கொரோனா அலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தடுப்பூசிகள் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து ஏப்ரல் இறுதிக்குள் இந்த திரிபால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 25,000 முதல் 75,000 வரை மாறுபடலாம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், வைரஸ் மாடலிங் தொடர்பான விஷயத்தில், இன்னும் நிச்சயமற்ற தன்மையே நிலவுவதாக இந்த ஆய்வின் பின்னணியிலுள்ள வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வில் மோசமான சூழ்நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என இவ்வாய்வோடு தொடர்பில்லாத விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் (LSHTM) இதில் மேற்கொண்ட ஆய்வு தெளிவாக இல்லை. கொரோனா வைரஸின் ஒமிக்ரான் திரிபினால் என்ன நடக்கும் என்று அது கூறவில்லை. ஆனால், சாத்தியமான விளைவுகள் ஏற்படலாம் என்பது குறித்த விவரங்களைக் கொடுக்கிறது.

பூஸ்டர் டோஸ் அதிகமாக எடுத்துக்கொள்வது ஒமிக்ரான் அலையின் தாக்கத்தைக் குறைக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் நிக் டேவிஸ், "ஒமிக்ரான் மிக வேகமாகப் பரவுகிறது. இது கவலையளிக்கிறது. அதோடு இந்த ஆண்டின் இறுதிக்குள் இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் ஆதிக்கம் செலுத்தும் வடிவமாக இது இருக்கலாம்," என்று கூறினார்.

அரசுக்கு ஆலோசனை வழங்கும், லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் நிறுவனத்தில் உள்ள நோய் மாதிரியாளர்களின் குழுவிலிருந்து வந்த இந்த அறிக்கை, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது இங்கிலாந்தில் ஒவ்வொரு 2.4 நாட்களுக்கும் இரு மடங்காக அதிகரிப்பதாகக் கூறுகிறது.

தற்போது நாட்டில் பரவலாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள போதிலும் வேகமாக கொரோனா பரவி வருகிறது. இத்திரிபு முந்தைய உண்மையான கொரோனா வைரஸ் தடுப்பூசி பாதுகாப்பு இல்லாத காலத்தில் பரவியதை விட இப்போது அதிவேகமாக பரவி வருகிறது.

"எங்கள் பார்வையின் அடிப்படையில், பிரிட்டனில் ஒரு பெரிய ஒமிக்ரான் கொரோனா அலையை எதிர்பார்க்கலாம்," என டாக்டர் டேவிஸ் கூறினார்.

தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர்கள் மக்களை மருத்துவமனைக்குச் செல்வதைத் தடுக்கும் விஷயத்தில் இன்னும் ஒரு நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது.

யுகே ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்திய ஆரம்பக்கால நிஜ உலக ஆய்வுகளில், தடுப்பூசியின் இரண்டு டோஸ்கள், ஒமிக்ரான் அறிகுறிகளுக்கு எதிராக குறிப்பிட்ட அளவு மட்டுமே பாதுகாப்பளித்தன. ஆனால், பூஸ்டர் டோஸ் அந்த அளவை 75 சதவீதமாக அதிகரித்தது தெரிய வந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கொரோனா பரிசோதனை

தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால், ஒமிக்ரான் தீவிரமாக பாதிக்காது என்கிற ஊகத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் வீட்டிலிருந்தே பணி புரிவது மற்றும் முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 2021-ல் கொரோனா அலையின் உச்சத்தில், ஏழு நாட்கள் சராசரியாக கிட்டத்தட்ட 60,000 நோய்த்தொற்றுகள் மற்றும் ஒரு நாளைக்கு 1,200-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் இருந்தன.

சாத்தியக்கூறுகள் என்ன?

மிகவும் நம்பிக்கையான சூழ்நிலையில், ஓமிக்ரான் திரிபு நோய் எதிர்ப்பிலிருந்து தப்பிப்பது குறைவு என ஊகிக்கிறது. மேலும் பூஸ்டர் டோஸ்கள் மிகுந்த செயல் திறன் கொண்டதாகவும் கருதப்படுகிறது. இப்படி ஒரு சூழலில், இங்கிலாந்தில் டிசம்பர் 1 முதல் ஏப்ரல் 30 வரையான காலத்தில்,

20.9 மில்லியன் தொற்றுகள் ஏற்பட்டு

1,75,000 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம்

24,700 உயிரிழப்புகள் ஏற்படலாம்.

மிக மோசமான சூழ்நிலையில், ஒமிக்ரான் திரிபு அதிக அளவில் நோய் எதிர்ப்புத் திறனைக் கடப்பதாகவும், பூஸ்டர் டோஸ் குறைவான செயல்திற்னைக் கொண்டதாக இருக்குமென்று கருதப்படுகிறது. இச்சூழலில் இங்கிலாந்தில் டிசம்பர் 1 முதல் ஏப்ரல் 31 வரை,

34.2 மில்லியன் தொற்றுகள் ஏற்பட்டு

4,92,000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம்

74,900 உயிரிழப்புகள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

"எங்கள் கணிப்புகள் கவலையளிக்கின்றன. இது நம்பிக்கை தரும் முடிவுகளைத் தரவில்லை," என்கிறார் டாக்டர் டேவிஸ்.

ஒமிக்ரான் அலையில் புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்துவதன் தாக்கத்தை இந்த ஆய்வு கவனத்தில் எடுத்துக் கொண்ட போது, "கடுமையான கட்டுப்பாடுகள் மக்களின் உடல் மற்றும் மன நலத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், இதை மிகக் கவனமாக பரிசீலிக்க வேண்டும்" என்றும் கூறினார்.

மோசமான சூழ்நிலைகளில், தேசிய சுகாதார சேவையின் மீதான கடும் அழுத்தத்தைத் தடுக்க, நாம் யாரைச் சந்திக்கிறோம், எந்த வணிகங்களை அனுமதிக்கலாம், முடிந்தவரை வீட்டிலேயே இருப்பது போன்ற கட்டுப்பாடு நடவடிக்கைகள் தேவைப்படலாம் என லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் நிறுவனத்தில் உள்ள நோய் மாதிரியாளர்கள் குழு எச்சரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கொரோனா தடுப்பூசி

ஆய்வாளர்களில் ஒருவரான மருத்துவர் ரோசன்னா பர்னார்ட், "மிகவும் நம்பிக்கையான சூழ்நிலையில், 2022-ம் ஆண்டின் முற்பகுதியில் ஒமிக்ரான் தாக்கம் வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் குறைக்கப்படும்.

"இருப்பினும், மோசமான சூழ்நிலையின்போது தேசிய பொதுசுகாதார சேவையில் நோயாளிகள் நிரம்பி வழிவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்," என்று கூறினார்.

"முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகள் ஆகியவை இன்றியமையாதவை என்றாலும், அவை மட்டுமே போதுமானதாக இல்லாமல் போகலாம்.

"யாரும் மற்றுமொரு ஊரடங்கு வருவதை விரும்பவில்லை. ஆனால், ஓமிக்ரான் கணிசமான அளவில் நோய் எதிர்ப்பாற்றலில் இருந்து தப்பிக்கும் திறன் கொண்டிருந்தாலோ, டெல்டா திரிபுடன் ஒப்பிடும் போது அதிக பரவல் தன்மையைக் கொண்டிருந்தாலோ, தேசிய பொது சுகாதா அமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்க பாதுகாப்பு கருதி கடைசி முயற்சியாக ஊரடங்கு அறிவிக்கப்படலாம்." என்றார்.

இந்த ஆய்வு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், மற்ற விஞ்ஞானிகளால் முறையாக மதிப்பாய்வு செய்யப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: